06 ஜூலை 2011

மகிந்தவின் கட்சிக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும்.மிரட்டுகிறது சிங்களப்படை.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ளூராட்சி தேர்தலிற்கான பரப்புரைகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடைபெறும் பிரசார நடவடிக்கைகளுக்கு சிங்கள கூலிப்படைகள் மறைமுகமாகவும் நேரடியாகவும் தடங்கல்களையும் கெடுபிடிகளையும் விளைவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்கு இராணுவத்தினர் ஆதரவாகச் செயற்படு கின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.நேற்றும் கூட கிளிநொச்சி மலையாள புரம் பகுதியில் கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளரான வடிவேல் நகுலேஸ்வரனை ஆதரித்துப் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை அங்கு நின்றிருந்த இராணுவத்தினர் அச்சுறுத்தியுள்ளனர். அவர்களில் சிலரைத் தாக்கினர் என்றும் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது:
நேற்று முற்பகல் 11 மணியளவில் பிரசாரத்துக்குச் சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்களை மறித்த இராணுவத்தினர் துண்டுப்பிரசுரம் ஒன்றைத் தருமாறு கேட்டுப்பெற்றுள்ளனர். அதனைப் பார்த்துவிட்டு வீட்டுக்காகவா பிரசாரம் என்று கேட்டுள்ளனர். அதன் பின்னர் மிரட்டும் குரலில் இங்கு மஹிந்த பார்ட்டியைத் தவிர வேறு எவருக்காகவும் பிரசாரம் செய்ய முடியாது எனக்கூறி ஆதரவாளர்களில் ஒருவரைப் பிடித்துத் தள்ளியவாறு துப்பாக்கியின் அடிப்பகுதியால் அவரைத் தாக்கியும் உள்ளனர். இங்கு எவரும் பிரசாரத்துக்கு வரக்கூடாது எனவும் கூறி அவர்களை விரட்டியடித்தனர் என்றும் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் கூறினர். கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் வட்டக்கச்சிப் பகுதியில் நடைபெற்ற கூட்டமைப்பின் பிரசாரக் கூட்டத்தை பல்வேறு நடவடிக்கைகள் மூலம் குழப்ப முற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக