26 ஜூலை 2011

தேர்தல் வெற்றி உயிர் நீத்த மக்களுக்கு காணிக்கை-கிளிநொச்சி பணியகம்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலின் அமோக வெற்றியை இதுவரை காலம் மண்ணில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு காணிக்கையாக்கி சமர்ப்பணம் செய்கின்றோம். இவ்வாறு தேர்தல் வெற்றி குறித்து கிளிநொச்சி மாவட்ட த.தே.கூட்டமைப்பு பணிமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.தன்மானத் தமிழ் உறவுகளே!
சர்வதேசமே எதிர்பார்த்த உள்ளுர் அதிகார சபைத் தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. தேர்தல் களத்தில் தமிழர் படை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மிகப்பெரும் வெற்றியைப் பெற்றுவிட்டது.
நேற்று எங்கள் தெருக்களில் எக்காளம் இட்டவர்கள் இன்று தலைகுனிந்து தடுமாறுகிறார்கள். தமிழர்களின் நாடித்துடிப்பின் அர்த்தங்கள் புரிந்து கொள்ளாது தாம் ஆடிய நாடகங்கள் அம்பலப்பட்டு இருப்பது கண்டு குறுகிப் போய்விட்டார்கள்.
தமிழர்களின் தேசியக் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. தன்மானத் தமிழர்களாகிய நீங்கள் தந்த தர்மத்துக்கான தீர்ப்பாய் தலை நிமிர்ந்து நிற்கிறது.
குறிப்பாகப் போரால் உயிரிழந்து சொத்திழந்து அகதி வாழ்வு சுமந்து சிறையில் தங்கள் உறவகள் இருக்க வதைபட்டு காணாமல போன உறவுகளைத் தேடி இன்னும் அலைந்தும் நலிந்தும் வாழும் எங்கள் உறவுகளாகிய உங்களை வெறும் பருப்புக்கும், சீனிக்கும், நீர் இறைக்கும் இயந்திரங்களுக்கும், துவிச்சக்கரவண்டிகளுக்கும், சில காசுத் தாள்களுக்கும் விலை பேசியவர்களுக்கு நீங்கள் கொடுத்த தன்மான உணர்ச்சி மிகுந்த தீர்ப்பை என்றும் தமிழின வரலாறு மறக்காது.
தமிழ் மக்களே ! நீங்கள் மிகச் சிறந்த ஜனநாயகப் போராளிகள். நீங்கள் மிகச்சிறந்த நீதிவான்கள். நீங்கள் மிகச்சிறந்த வரலாற்று மாந்தர்கள். உங்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைகூப்பி உங்கள் பாதராவிந்தங்களைத் தொட்டு வணங்குகின்றது.
உங்களுக்காக உங்களோடு உங்களால் வாழ்வதை நினைத்து நாம் மிகப் பெருமிதம் கொள்கிறோம். உங்களை மக்களாகப் பெற்றதற்கு இந்த மண் பெருமைப்படுகிறது.
சுடச்சுடச் செழுமை பெறும் தங்கம் போல அடக்க அடக்க, மிதிக்க மிதிக்க தமிழினத்தின் தன்மான உணர்ச்சி மெருகேறும். நீறு பூத்த நெருப்பாய் இருந்த தாகத்தைத் தமிழர்களே! தக்க தருணத்தில் தீர்த்தீர்கள் நன்றி.
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சிப் பிரதேசத்தில் வீட்டுச் சின்னத்திலும், பூநகரி பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட்டு மூன்று சபைகளில் அமோக வெற்றி மூலம் கைப்பற்றியுள்ளது. மொத்தமாக வடகிழக்கிலே 17 சபைகளைக் கைப்பற்றி பெரும் சரித்திர வெற்றி பெற்றுள்ளது.
அன்பான தன்மானத் தமிழர்களே! எதிர்க்கட்சிகள் மற்றும் அவர்களோடு சேர்ந்திருக்கும் புல்லுருவிகளும் தந்த சொல்லொணா நெருக்கடிகளுக்கு மத்தியில் அதைத் தாங்கித் தகர்த்தெறிந்து வீறு கொண்டு வாக்களித்த கிளிநொச்சி யாழ் மாவட்ட மக்களுக்கும் கிழக்கு மாகாண மக்களுக்கும் முல்லை மாவட்ட மக்களுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிப்பதோடு,
பூநகரி மற்றும் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் எமது பங்காளிக்கட்சியான தமிழர் விடுதலைக்கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் போட்டியிடுவதற்கு ஒத்துழைத்த அக்கட்சியின் தலைவர் மூத்த அரசியல்வாதி திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கட்கும்,
இத் தேர்தலில் பங்கெடுத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கும் எல்லாவற்றுக்கும் மேலாக பின்பலமாகவிருந்து தார்மீக உணர்ச்சியாக வலுவூட்டும் புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கும் தமிழ் நாட்டின் தொப்புழ் கொடிச் சொந்த உறவுகளுக்கும் தலைசாய்த்து நன்றி தெரிவிக்கிறோம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளுர் அதிகாரசபைத் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியை எங்களோடு இருந்து எங்களுக்காக உயிர் தந்த அனைத்து உறவுகளுக்கும் சமர்ப்பணம் செய்கின்றோம்.
நன்றி

அறிவகம் பணிமனை
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு
கிளிநொச்சி மாவட்டம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக