26 ஜூலை 2011

நாட்டின் நிலையான தீர்வுக்கு காணி,காவல்துறை அதிகாரம் அவசியம்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களின்றி அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டத்தில் மாகாணசபைகளுக்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் பெரும்பான்மையான உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியுள்ளது என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களினால் வழங்கப்பட்டுள்ள ஆதரவின் மூலம் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
துரதிஷ்டவசமாக தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் நடைமுறைப் பிரச்சினைகைளையும் அரசாங்கம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நடைபெற்று முடிந்த தேர்தலில் தமிழ்;த் தேசியக் கூட்டமைப்பு அடைந்துள்ள வெற்றி தொடர்பிலும் அரசாங்கத்திற்கு போதிய விளக்கம் கிடைக்கப் பெற்றிருக்கும் என கருதவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் இணக்கப்பாடுகள் ஏற்படுத்திக்கொள்ளப்பட மாட்டாது என்பதே ஜனாதிபதியின் நிலைப்பாடாக அமைந்துள்ளது. எனினும், நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் அரசியல் தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பதற்கு காணி மற்றும் காவல்துறை அதிகாரம் பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நிலைப்பாட்டை பின்பற்றினால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் அர்த்தமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான தீர்வுத் திட்டமொன்றை ஏற்றுக் கொள்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்துடன் விரிவான முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டிய நிலை காணப்படுகின்ற போதிலும், அதனை அரசாங்கம் சரியான முறையில் புரிந்துகொள்ளத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் நம்பகரமான விசாரணைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். ஐக்கிய நாடுகள்; அமைப்பு, மனித உரிமை கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை மற்றும் சர்வதேச சக்திகளின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவி சாய்க்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நம்கரகமான விசாரணைகள் நடத்தப்படாவிட்டால் இலங்கை தொடர்பான சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு பாதகமாக அமைவதனை தடுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீர்வுத் திட்டத்தை முன்வைப்பது தொடர்பில் பாராளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் செயற்பாடு அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய, ஜே.வி.பி உள்ளிட்ட சிங்கள கடும்போக்குடைய கட்சிகளின் நிலைப்பாட்டினால் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக