19 ஜூலை 2011

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரத்திற்கு சிறிலங்கா பொலிசார் கெடுபிடி.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் சுன்னாகத்தில் நடைபெற்ற போது காவல்துறையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டதுடன் ஒலிபெருக்கி பாவிப்பதற்கும் தடை விதித்தனர். வழங்கப்பட்ட நேரம் முடிந்து விட்டதாக கூறி ஒரு 5நிமிட அவகாசம் கூட வழங்காது ஒலிவாங்கியை நிறுத்தியுள்ளனர்.
ஆளும் கட்சியின் தேர்தல் பிரசாரக்கூட்டங்களுக்கு எந்த வித கட்டுப்பாடுகளையும் விதிக்காது ஒலிபெருக்கி பாவிப்பதற்கு அனுமதி வழங்கும் காவல்துறையினர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முக்கியமான பேச்சாளர்கள் பேசும் போது ஒலிவாங்கியை நிறுத்தி விடுவதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திங்கட்கிழமை மாலை சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தின்போதே காவல்துறையினர் இந்த கெடுபிடியினை மேற்கொண்டனர். வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான பிரச்சாரக் கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் தொகுதியின் செயலாளர் பா.கஜதீபன் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், விநோதராதலிங்கம், ஈ.சரவணபவன், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி, ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மணோகனேசன், ரெலோவின் உப தலைவர் இந்திரகுமார் பிரசன்னா, ஆகியோருடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள், யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வவுனியா மற்றும் மன்னார் பிரதேச சபை உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மாலை 5.30க்கு ஆரம்பமாகி இரவு 10.15 மணிவரை இக்கூட்டம் இடம்பெற்றது. இதற்கென சுன்னாகம் காவல்துறையினரிடம் உரிய அனுமதிகள் பெற்றிருந்தபோதும் சுன்னாகம் நகர்ப் பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியை உடன் அகற்றுமாறு கூறி அகற்றி வைத்ததுடன் 10 மணி தாண்டி 5 நிமிடங்கள் ஆகுவதற்கிடையில் கூட்டம் நடைபெற்ற மேடைக்கு வந்த காவல்துறையினர் ஒலிபெருக்கியை நிறுத்த உத்தரவிட்டதுடன் மேடைக்கு அருகில் இருந்த ஒலிபெருக்கிப் பெட்டியையும் நிறுத்துமாறு உத்தரவிட்டனர். இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் உரையாற்றி முடிந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி உரையாற்றிக்கொண்டிருந்தார். எனினும் ஒலி பெருக்கி நிறுத்தப்பட்ட பின்னரும் 5 நிமிடங்கள் தனது உரையை தொடர்ந்த பின்பே நிறுத்தினார். நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மக்கள் அனைவரது உரையும் முடிந்த பின்னரே கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக