
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் நடைபெற்ற படை நடவடிக்கைகளை மனித நேய மீட்பு நடவடிக்கைகள் என இலங்கை அரசு வர்ணித்து வந்துள்ளது.
படை நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்பதே தமது கொள்கையாக இருந்தது என்றும் அது கூறி வந்துள்ளது. பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று அந்நாட்டுத் தலைவர்கள் கூறிவந்தனர். ஆனால் இதை மனித நேய அமைப்புக்கள் நிராகரித்தன.
போர் முடிந்து 26 மாதங்களான பின்னர் அரசுக்கு எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இப்போதாவது தெரியுமா என்று பிபிசி ஹார்ட் டாக் நிகழ்ச்சியில் ஸ்டிபன் சக்கர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜிவ் விஜயசிங்க ஒட்டு மொத்தமாக 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்.
இதில் பொரும்பான்மையானவர்கள் டிசம்பர் 2008 ஆம் ஆண்டுக்கும் மே 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொதுச் செயலரால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவும் இன்ன பிற அமைப்புக்களும் இறுதிப் போரில் நாற்பதாயிரம் பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
இலங்கை அரசு பொதுமக்கள் தரப்புக்கு உயிர் இழப்பு இல்லை என்று கூறி வரும் நிலையில் அரசின் மூத்த அதிகாரி தற்போது பிபிசிக்கு வழங்கிய செவ்வியில் ஐந்தாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக