16 ஜூலை 2011

போலிப்பரப்புரைகளுக்கு தமிழ் மக்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும். பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த வீதிகளைத் திறப்பதனாலோ, ஆசை வார்த்தைகளுக்காகவோ,அற்ப சொற்ப சலுகைகளுக்காகவோ ஏமாந்து தமிழ்மக்கள் வாக்களிக்கமாட்டார்கள். இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையும் என்பது நிச்சயம். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று தெரிவித்தார்.
போலியான பிரசாரங்களுக்குத் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள். சலுகைகளுக்கும், அற்ப சொற்ப விடயங்களுக்கும் ஆசைப்பட்டு தமிழர்கள் வாக்குகளை விற்கமாட்டார்கள். யுத்தத்துக்குப் பின்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி, நாடாளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதோ, அவர்களுக்கே தமிழ்மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் என்ற திடமான நம்பிக்கை தமிழ் மக்களின் உள்ளங்களில் உள்ளது. எனவே, அதை வலுப்படுத்தவே அவர்கள் முனைவார்கள்.
அமைச்சர்கள் முகாமிட்டு, தமிழ்மக்களிடம் இல்லாத ஆதரவை, உள்ளது எனக் கூறி பல கோடி ரூபா செலவு செய்தாலும் அல்லது பல வருடங்களாகத் திறக்கப்படாமல் இருந்த வீதிகளைத் திறந்தாலும் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள்.
எனவே, கூட்டமைப்பின் வெற்றிப் பாதையில் அரசு தடைகளை ஏற்படுத்தினால், இந்தத் தேர்தலை ஆரோக்கியமான ஒரு தேர்தல் எனக் கருத முடியாது போகும் இப்படி அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக