யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்து அகற்றப்படுகின்றது. சிலையைச் சுற்றி நேற்று மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. புதிதாக அமைப்பதற்காகவே இந் நடவடிக்கை எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அதன் மாதிரி அமைப்பில் மோசடி நிகழலாம் என்று சந்தேகம் வெளியிடப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நல்லூர் முத்திரைச் சந்தியில் இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் மு.செ.சரவணபவன் தெரிவித்திருக்கின்றார்.
புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை உயிரோட்டமுள்ளதாக மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கென ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் 1500 செங்கற்களும் 10 சீமெந்துப் பைக்கற்றுகளும் வழங்கவுள்ளோம். மாநகர சபை ஊழியர்களும் நிர்மாண வேலையில் பங்கேற்க உள்ளனர் என்றார் ஆணையாளர்.
மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாக மாநகர சபையின் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றதாக கூறப்படுகின்ற போதிலும் சிலை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் கல்வகை நீண்டகாலம் நின்று நிலைக்கக் கூடியதா? அல்லது கால ஓட்டத்தில் அழிவடையும் தன்மை வாய்ந்ததா? என்று சந்தேகிக்கப்படுகின்றது.
குறித்த நினைவுச் சின்னத்தினை கால ஓட்டத்தில் இல்லாமல் செய்வதற்கான ஒரு நகர்வா? இது என்கின்றனர் நோக்கர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக