20 ஜூலை 2011

தம்மை பிணை எடுக்கவே யாழ்,மக்களிடம் அரசு மண்டியிட்டுள்ளது.

ஆடை அவிழ்ந்து நிர்வாணமாக உள்ள அரசாங்கம் இதனை மறைக்கவே யாழ்ப்பாணத்துத் தமிழ் மக்களிடம் வந்துள்ளது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். வலி. தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் நகர் பகுதியில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அங்கு தெரிவிக்கையில், யாழ். மக்கள் மீது அரசாங்கத்துக்கு திடீர் என பாசம் என்று நினைக்காதீர்கள். தன்னை பிணை எடுப்பதற்காக அழித்தவர்கள் காலில் மண்டியிட்டுள்ளனர். சர்வதேசமும் சனல் 4 தொலைக்காட்சியும் அரசாங்கத்தை துரத்திக் கொண்டிருக்கிறன. பயங்கரவாத்தை ஒழிப்பதாக கூறி இன அழிப்பைச் செய்துள்ள அரசாங்கம் சர்வதேசத்தின் போர்க் குற்றத்தை மறைப்பதற்காக இன்று தமிழ் மக்களின் காலடியில் வந்து இருக்கிறார்கள்.
கல்விமான்களான யாழ். மக்கள் விழிப்பாகச்செயற்படவேண்டும். இறுதிக் கட்ட போரினை சாட்சியங்கள் இல்லாமல் நடாத்தினோம் என கூறி உள் நாட்டில் முக்கியஸ்தர்களை கூப்பிட்டு செயலமர்வு நடத்தினார்கள். இறுதி யுத்தத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களை துரத்தினார்கள். ஊடகவியலாளர்களைத் துரத்தினார்கள். இறுதியில் என்ன நடந்தது. தனது படை வீரர்களின் கைத்தொலைபேசிப் பாவனையைத்தடைசெய்யாததன் காரணமாக யுத்த குற்றம் வெளியுலகிற்குச் சென்றது. அவை ஆவணமாக சர்வதேச நாடுகளில் வெளியிடப்படுகின்றன.
உள்ளூராட்சி தேர்தலை அறிவித்த அரசாங்கம் அதற்காக அமைச்சர் பட்டாளங்களை அனுப்பி தமிழ் மக்களின் காலைப் பிடிக்கின்றது. இந்த சூழலை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வருகின்ற பேõது அரசாங்கத்தின் போஸ்ரர்களும் கொடிகளும் காணப்படுகின்றன. இவற்றில் அதிகளவானது பனை, தென்னை மரங்களிலே காணப்படுகின்றன. ஏ 9 பாதை பகுதி ஒன்றில் கூட்டம் நடைபெற்றது. அதனை பார்வையிட்டபோது அங்கு அமைச்சர் ஒருவர் உரையாற்றுகிறார். அங்குள்ள மக்களை பார்த்தால் அவர்கள் கொழும்பில் இருந்து வந்த மக்கள் இந்த நிலைமையை யாரிடம் சொல்வது. சாட்சியம் இல்லாது போர் செய்த அரசு இன்று நிர்வாணமாக ஆடை அவிழ்ந்து நிற்கிறது. இதனை மறைக்க யாழ்ப்பாணத்தில் அமைச்சர் பட்டாளம் ஏற்கனவே திறக்கப்பட்ட வீதிகள் , திறக்கப்பட்ட பாடசாலைகளை மீளவும்திறந்து வைக்கிறது.
இது ஒரு சாதாரணமான ஓர் உள்ளூராட்சித் தேர்தல். இதில் ஒன்று இரண்டை கைப்பற்றி சர்வதேசத்திற்கு தமிழ் மக்கள் தம்முடன் தான் இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கப்போராடுகிறார்கள். யாழ். மக்கள் இதனை உணர்ந்து கொள்ளவேண்டும். மீண்டும் தவறு விடக்கூடாது.
தற்போது யாழ்ப்பாணத்தைப் பார்க்கும்போது இலங்கையின் தலை நகர் போல் இருக்கிறது. காரணம் அமைச்சர்கள் யாழ்ப்பாணத்தில் தான் இருக்கிறார்கள். இதனால் அமைச்சரவை இங்கு நடைபெறவுள்ளது. ஜனாதிபதி உட்பட அவரது சகோதரர் முதற்கொண்டு யாழ்ப்பாணத்தில் நிற்கிறார்கள். கடந்த காலங்களை போலன்று இந்த அரசு படுமோசமான பாதக செயலைச் செய்துவிட்டு தற்போது காலில் விழுந்துள்ளது.
இதனை கவனத்திற் கொண்டு சுதந்திர தீர்வைப் பெறுவதற்கான காலம் கனிந்து வந்துள்ளது. அரசு சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தைப்பயன்படுத்தி மாறித்தானும் வெற்றிலைச் சின்னத்திற்கு அடையாளம் இட வேண்டாம். அது அனைத்தையும் மாற்றிவிடும் வீட்டைத் தெரிவு செய்யுங்கள். அனைவரும் அதிகாலை சென்று வாக்களிக்க வேண்டும்.
தற்போது கொழும்பில் இருந்து வாக்களிப்பதற்கு ஆட்களைக் கொண்டு வந்து வாக்களிப்பு நிலையங்களில் பெட்டிகளை மாற்றும் திட்டமும் நடைபெறவுள்ளதாகத் தெரியவருகின்றது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக