பூநகரியில் வீடுகளில் இருந்த பொதுமக்கள் படையினரால் அழைத்து வரப்பட்டு, செனல் 4 தொலைக் காட்சிக்கு எதிராக பேரணி ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
பூநகரிக்கு அமைச்சர் ஒருவர் வந்துள்ளார். உங்களைச் சந்திக்க விரும்புகிறார் எனத் தெரிவித்து பொது மக்களை பூநகரிப் படையினர் அழைத்து வந்தனர். பின்னர் பேருந்துகள் மூலம் ஜெயபுரம் பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பேரணி நடத்தப்பட்டது.
ஜெயபுரம், முழங்காவில், வலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர்.
செனல் 4க்கு எதிராக சுலோகங்கள் கொண்ட சுலோக அட்டைகளை அந்த மக்களிடம் கொடுத்த படையினர் பேரணியாகச் செல்லுமாறு கட்டளையிட்டனர். அதைத்தொடர்ந்து அந்த மக்கள் மனக்குமுறலுடன் அணி வகுத்து சென்றனர் என்றும் அந்தப் பேரணியை விசேட ஏற்பாட்டில் சிலர் படம் எடுத்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பேரணியில் சென்ற மக்கள் மனக்கொதிப்பை, எரிச்சலை ஆவேசத்துடன் வெளியிட்டனர்,
எம்மை இராணுவத்தினர் அச்சுறுத்தி 'டிரக்கில் ஏற்றினர். வீடு வீடாகச் சென்ற படையினர் ஆயுத முனையில் வீட்டுக்கு ஒருவராவது வர வேண்டும் என நிர்ப்பந்தித்தே 'டிரக்கில் ஏற்றினர்.
பூநகரிக்கு வந்து இறங்கியதும் தான் எமக்கு விடயம் தெரிய வந்தது.என்ன செய்வது? முள்ளிவாய்க்காலில் எமது உறவுகளை இழந்த நிலையில், அங்கு நடந்த கொடூரங்கள், அவலங்கள் நேரில் பார்த்த அனுபவித்த எமக்கு இந்த நிர்ப்பந்தம் தூக்கி வாரிப் போட்டது. ஆனால் நிலைமையை உணர்ந்து கொண்டு மனதைக் கல்லாக்கிக்கொண்டு இந்தப் பேரணியில் ' நடை பிணங்களாகச் சென்றோம். கடவுள் தான் எம்மை காப்பாற்ற வேண்டும்'' என மக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக