21 ஜூலை 2011

ஈழத்தமிழர் பிரச்சனை தீர்வுக்கு புது யோசனைகளை தேடுவதாக கிலாரி தெரிவிப்பு.

சென்னை வந்துள்ள மெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இந்தியா வந்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் ஹிலாரி கிளிண்டன் இரண்டு நாள்கள் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு அவர் சென்னை வந்தார். நேற்று மாலை கோட்டையில் முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி கிளிண்டன் சந்தித்து பேசினார்.
இலங்கையில் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் குறித்து கவலை தெரிவித்துள்ள அமெரிக்க ராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்டன், இலங்கைத் தமிழர் பிரச்சினையிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு அமெரிக்கா புதிதான, ஆக்கபூர்வமான சில யோசனைகளை தேடுவதாக கூறியுள்ளார்.
முகாம்களிலுள்ள தமிழர்கள் தமது சொந்த வீடுகளுக்குத் திரும்புவதற்கு வழி அமைக்கக்கூடிய வகையிலும் தமிழர் பிரச்சினையிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கும் அமெரிக்கா புதுவகையான யோசனைகளை தேடுவதாக ஜெயலலிதாவிடம் ஹிலாரி கிளின்டன் கூறினார்.
இலங்கையில் யுத்தம் முடிந்து இரு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், யாழ்ப்பாணப் பகுதியிலுள்ள தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் இன்னும் முகாம்களில் உள்ளதாக ஹிலாரியிடம் ஜெயலலிதா தெரிவித்தார்.
தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தொடர்பான கலந்துரையாடலின்போது, உள்ளூர் பிரஜைகைளுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார்.இவ்விருவரும் அரசியல், பொருளாதார விடயங்கள் குறித்து கலந்துரையாடியதாக உத்தியோகபூர்வ செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 13 ஆம் திகதி நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா பெற்ற வெற்றிக்கு ஹிலாரி கிளின்டன் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார். அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு ஜெயலலிதாவுக்கு ஹிலாரி கிளின்டன் அழைப்பு விடுத்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக