விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பிரிவின் மகளீர் அணித் தலைவராக கடமையாற்றிய தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி என்பவரை நீதிமன்ற உத்தரவின்றி இரண்டு முறை பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு அழைத்துச் சென்றமை தொடர்பாக விசாரணை நடத்த கொழும்பு பிரதான நீதவான் ரஸ்மி சிங்கப்புலி இன்று (04) தீர்மானித்துள்ளார்.
சட்டத்தரணி துசித் ஜோன்தான் சார்பில் ஆஜரான மஞ்சுள பதிராஜ சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் விடுத்த கோரிக்கையை அடுத்து நீதவான் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார்.
சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஞ்சுள பதிராஜ, விளக்கமறியலில் இருக்கும் சந்தேக நபர் ஒருவரை நீதிமன்ற உத்தரவின்றி, நீதிமன்ற வைத்தியசாலைக்கும் நீதிமன்றத்திற்குமே அழைத்துச் செல்ல முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
சந்தேக நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் அன்றைய தினம் கோரிக்கை ஆராய்ந்து பார்க்கப்படும் எனக் கூறியுள்ளார்.
கிளிநொச்சி உதயநகர், தங்கபுரம் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட தமிழினி, 2009 மே மாதம் 20 ஆம் திகதி புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகளின் அனுசரணையின் கீழ் வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழினி அந்த நாடுகளில் வசிக்கும் இலங்கைப் பெண்களிடம் தமது விடுதலைப் போராட்டம் குறித்து தெளிவுபடுத்த நடவடிக்கை எடுத்திருந்ததாக புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக