01 ஜூலை 2011

இலங்கை மீது சர்வதேச நடவடிக்கை எடுக்க நேரிடும்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை ஆணையாளர் நவநீதம்பிளளை இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலான விசாரணைகளை இலங்கை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டுமெனவும், அவ்வாறு தவறும்பட்சத்தில் சர்வதேச நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டுமென உறுப்பு நாடுகள் அதிகம் எதிர்பார்க்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இதன் மூலம் விசாரணைகள் குறித்து கவனம் செலுத்தப்பட மாட்டாது என அர்த்தப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட உள்நாட்டு விசாரணைகள் எதுவுமே பூர்த்தியாகவில்லை என அவர் தெரிவித்துள்ளார். உள்நாட்டு விசாரணை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதில்லை எனவும், எவரும் தண்டிக்கப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலைமை தொடருமாயின் சர்வதேச சமூகம் இலங்கை விவகாரங்களில் தலையீடு செய்ய நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவை இந்த விடயம் குறித்து காத்திரமான பங்களிப்பினை வழங்க வேண்டும் என்பதே தமது உறுதியான நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் குறித்து துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பிரித்தானியாவும் அமெரிக்காவும் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக