31 ஜூலை 2011

இலங்கையில் தமிழர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர்.

போரின் பின்னர் தமிழர்கள் இந்த நாட்டில் அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்று ரொய்ட்டரிடம் கருத்துத் தெரிவித்துள்ளனர் வடக்குத் தமிழர்கள். நல்லிணக்க முயற்சியில் அரசு முழுமையான இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை என்று பெரும்பாலான தமிழர்கள் கருதுகின்றனர் என்றும் ரொய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தலின் பின்னர் வடக்கில் ரொய்ட்டர் செய்தியாளர் நேரடியாகப் பயணம் செய்து இதனை எழுதியுள்ளார்.
ரொய்ட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,இலங்கையர்களின் வாழ்க்கையில் சிங்களம் தமிழ் என்ற இனப்பாகுபாடு தொடர்ந்தும் இருக்கிறது என்பதையே நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன என்று தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பதற்றம் மற்றொரு மோதலுக்கான பொறியை ஏற்படுத்திவிடக்கூடும் என்று பலரும் கருதுகிறார்கள்.
போர் முடிந்ததில் இருந்து தமிழர்கள் அடிமைகள் போன்று நடத்தப்படுகிறார்கள் என்றே நாம் நினைக்கிறோம் என்றார் தங்கராஜா புஸ்பராஜா. 60 வயதான இவர் யாழ்ப்பாணத்தில் வியாபாரம் செய்கிறார். புலிகள் ஏதோ சிறந்தவர்கள் என்று நான் சொல்லவில்லை; ஆனால் இப்போது எங்கள் வாழ்க்கை நன்றாக இல்லை என்றார் அவர். அவருடைய மகனை 17 வயதில் புலிகள் தமது படையில் பலவந்தமாக இணைத்துக் கொண்டார்கள். இலங்கை அரசு இன நல்லிணக்கத்தில் இதயசுத்தியுடன் ஈடுபடவில்லை என்பதால் வாக்களிப்பில் இருந்து ஒதுங்கி இருந்து விட்டோம் என்று பெரும்பாலான தமிழர்கள் ரொய்ட்டரிடம் தெரிவித்தார்கள். பொருளாதார அபிவிருத்தி என்று அரசு சித்து விளையாட்டுக் காட்டுகிறது என்றும் அவர்கள் கூறினார்கள்.
இராணுவத்தாலும் அரச ஆதரவு துணைப்படையினரைக் கொண்ட தமிழ்க் கட்சியாலும் நிகழ்த்தப்பட்ட தேர்தல் வன்முறைகளைக் கட்டுப்படுத்த இலங்கை அரசு தவறியதால் அதற்கு எதிராக வாக்களித்தார்கள் என்று மேலும் பலர் தெரிவித்தனர். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்குப் பின்னர் தமிழர்களின் தலைமைக்கான வெற்றிடம் இன்னும் நிரப்பப்பட வில்லை என்றே ரொய்ட்டரிடம் பேசிய தமிழர்கள் பலர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக