01 ஜூலை 2011

முஸ்லீம் காங்கிரசின் கோரிக்கை ஏற்புடையதல்ல,-சிவாஜிலிங்கம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நடைபெற்று பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒரு தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம் மனத்தடைகளையே தோற்றுவிக்கும் எனத் டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசு- கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் தாமும் பங்கு கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் ஒரு கட்சி. இந்த நிலையில் அவர்களும் பேச வேண்டுமானால் அரசாங்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சமாந்திரமாகவோ பேசிக் கொள்ளலாம். இந்த விடயத்தில் நாம் தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால், தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தாமும் ஒரு தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று அடம்பிடித்தால் அது மனத்தடைகளையே தோற்றுவிக்கும்.
தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் தாயகத்துக்கு என்ன கொடுப்பது என்று பேசப்பட்டுத் தீர்மானிக்கப்படுமாயின் அதில் முஸ்லிம்களுக்கு என்ன பங்கு கொடுப்பது என்பது பற்றி முஸ்லிம் காங்கிரசுடனும் பேசித்தான் முடிவெடுக்கப்படும். வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு. அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் ஒருபோதும் இணைந்த வட,கிழக்கையும் பெறமுடியாது.
எது எவ்வாறெனினும் இறுதித் தீர்வு என்று ஒன்று எட்டப்படுமானால் அது முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கியதாகவே அமையும். என அவர் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக