நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆலயத்தில் விமானத் தாக்குதலில் பலியான உறவுகளை நினைவு கூரும் வழிபாட்டில் நூற்றுக் கணக்கானோர் கலந்துகொண்டு கண்ணீர் சிந்தி அழுத காட்சி நேற்று அந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் மனதுருக வைத்தது.
கடந்த 09.07.1995 இல் நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆலயம் மீதான தாக்குதலில் 147 பேர் ஸ்தலத்தில் உடல் சிதறிப் பலியானதுடன் 313 பேர் காய மடைந்தனர்.இந்தத் தாக்குதலின் 17ஆம் ஆண்டு நினைவுதின வழி பாடு நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆலய பங்குத் தந்தை வண. எஸ். ஜோதிநாதன் தலைமையில் நேற்றுக் காலை 6 மணியளவில் இடம்பெற்றது.
கிறிஸ்தவர்கள், இந்துக்கள் என நூற்றுக்கணக்கான சொந்தங்கள் தமது உறவுகளை நினைத்து கண்ணீர் சிந்தி வழிபாடுகளில் பங்கேற்றனர்.இளைப்பாறிய ஆசிரியை நவாலியூர் நாயகி திருமதி மேரிநாயகி மரியதாஸ் படுகொலை தொடர்பாக உறவுகளின் உள்ளங்களை நினைவு கூர்ந்து பாடிய பாடல் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது.
'முன்னேறிப் பாய்தல்' இராணுவ நடவடிக்கையின் போது வலிகாமம் பகுதியில் பலபகுதிகளின் ஊடாக மக்கள் இடம் பெயர்ந்து கடந்த 09.07.1995 இல் நவாலி சென்ற் பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர் காம முருகன் ஆலயத்திலும் தங்கியிருந்த வேளை நடத்தப் பட்ட இந்தத் தாக்குதலில் பலி யானவர்களின் உறவுகள் இந்த நினைவு நிகழ்வில் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டனர்.
இந்தத் தாக்குதலில் பலியான உறவுகளுக்காக சென்ற் பீற்றர்ஸ் ஆலயத்தில் நடை பெற்ற வழிபாட்டினைத் தொடர்ந்து ஆலய வீதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச்சின்னத்தில் பங்குத் தந்தை வண.எஸ்.ஜோதி நாதன் மெழுகுவர்த்தி ஏற்றி வழி பாட்டினைத் தொடக்கி வைத்தார்.இதனைத் தொடர்ந்து ஏனைய உறவினர்கள் தமது உறவுகளை நினைந்து மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தனர்.மேற்படி ஆலய தாக்குதலின் போது வலி. தென்மேற்கு பிரதேச செயலகத்தைச் சேர்ந்த நவாலியூர் செல்வி ஹேமலதா செல்வராஜா, சில்லையூர் பிலிப்புப்பிள்ளை கபிரியேல் பிள்ளை ஆகிய இரு கிராம அலுவலர்கள் சேவையின் போது உயிர் நீத்தனர்.இந்தத் தாக்குதலில் 14 பாடசாலை மாணவர்களும் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக