02 ஜூலை 2011

மகிந்தவை குற்றவாளிக்கூண்டில் ஏற்றக்கோரி மலேசியத் தமிழர்கள் மனு.

சிறிலங்காவிலும் பலஸ்தீனத்திலும் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று "மலேசிய மக்கள் சக்தி கட்சி" வேண்டுகோள் விடுத்துள்ளது. நேற்றயதினம் கோலாலம்பூரில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு பேருந்துகளில் சென்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதுதொடர்பான மனுவொன்றைக் கையளித்துள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் பொதுச்செயலர் ஆர்.கண்ணன் தலைமையிலான இந்தக் குழுவினர் மலேசியாவுக்கான ஐ.நா செயலக பாதுகாப்பு அதிகாரி தேவேந்திர பட்டேலிடம் இரண்டு பக்க மனுவைக் கையளித்தனர். இந்த மனுவில் சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மோசமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள அதிர்ச்சியான சாட்சியங்களை ஐ.நா அறிக்கை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மகிந்த ராஜபக்ச மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஐ.நா நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள மூன்றாவது பெரிய நாடான மலேசியா, தமிழர்களை நியாயமாக நடத்துமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்.கண்ணன் வலியுறுத்தியுள்ளார். போர்க்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மலேசியா எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவைக் கையளிக்கும் நிகழ்வில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதித் தலைவர் வனெசன் மைக்கல், இளைஞர் அணி தலைவர் ராமு உள்ளிட்ட சுமார் 80 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக