12 ஜூலை 2011

தேர்தல் வன்முறைகளால் வடக்கில் மக்கள் அச்சம்!

வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர். எனவே, வடக்கில் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை – என்று நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கத்தின் (கபே) நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் திங்கட்கிழமை தெரிவித்தார். உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக வடக்கின் பல பகுதிகளுக்கு “கபே’ அமைப்பினர் விஜயம் செய்தனர். அப்பிரதேசங்களின் நிலைமைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள சில பிரதேசங்களில் நூற்றுக்கு 20 சதவீதமானோரிடம் தேசிய அடையாள அட்டைகள் இல்லை. எனவே தேசிய அடையாள அட்டைகளை உடனடியாகப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை ஒன்றை ஆரம்பித்தோம். ‘குறிப்பாக வடக்கு மக்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட அஞ்சுகின்றனர். தொடர்ச்சியாக அப்பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள்தான் இதற்குப் பிரதான காரணம்.மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல் நடத்துவதில் எவ்வித பிரயோசனமுமில்லை. எனவே அரசு வடக்கில் தேர்தல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கவேண்டும்; இது அரசின் கடமையுமாகும். பிரதான எதிர்க்கட்சிகளுக்கு வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான ஓர் சூழ்நிலை அங்கு இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய மூன்று பிரதான கூட்டங்களின் போது இராணுவத்தினர் அப்பிரதேசங்களுக்குச் சென்று வீடுவீடாக சோதனையிட்டுள்ளனர். பிரசாரக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. கரச்சி, தர்மபுரம் ஆகிய பிரதேசங்களில் ஜே.வி.பிக்கும் இதே நிலைமைதான். அரச தரப்பினரின் தேர்தல் “கட் அவுட்கள்’ தவிர வேறு தரப்பினரது “கட் அவுட்’களை அப்பிரதேசங்களில் காணமுடியவில்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக