31 ஜனவரி 2012

புலம்பெயர் ஊடகவியலாளர்களின் கதை ஆவணப்படமாகியது.

வெளிநாடுகளில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்களின் நிலைப்பாடுகள் தொடர்பாக நோர்வே நாட்டைச் சேர்ந்த விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவரால் தயாரிக்கப்பட்ட திரைப்படம் ஒன்று ஒஸ்லோவில் அடுத்த மாதம் 9 ஆம் திகதி முதன் முதலில் திரையிடப்படவுள்ளது.
குறித்த திரைப்படமானது இலங்கையில் நிலவும் ஊடக அடக்குமுறை மற்றும் பேச்சுச் சுதந்திரத்தின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக வெளி நாடுகளில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்களின் அனுபவங்களைப் பதிவுசெய்துள்ளது.
2007 இல் 'எனது மகள் தீவிரவாதி' என்ற திரைப் படத்தை தயாரித்து இயக்கியமைக்காக விருது பெற்ற நோர்வே திரைப்படத் தயாரிப்பாளரான பீட்டே ஆர்நெஸ்டாட் என்பவரே தற்போது 'மௌனமாக்கப்பட்ட குரல்கள் நாடு கடந்து வாழும் இலங்கை ஊடகவியலாளர்களின் கதைகள்' என்ற புதிய திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
சாட்சியங்கள் எதுவுமின்றி, இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மனிதப்படுகொலை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட அனைத்துலக வெளியீட்டிற்கு தமது பங்களிப்புக்களை வழங்கிய ஊடகவியலாளர்கள் பற்றிய கதையே இத்திரைப் படத்தின் கருப்பொருளாகும்.
'ஹிரு' வார வெளியீட்டின் முன்னாள் பிரதம ஆசிரியரான பஷானா அபேயவர்த் தன, இலங்கைக்கான பி.பி.ஸியின் வெளிநாட்டு நிருபரான பிரான்சிஸ் ஹரிசன் மற்றும் நோர்வே நாட்டு ஊடகவியலாளரான ஸ்வேரி டொம் ரட்பீ ஆகியோரை மையப்படுத்தியே இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் இத்திரைப்படத் தில் பஷானா அபேயவர்த்தன மற்றும் அவரது மனைவியான சர்மிலா லோகேஸ்வரன், சோனாலி விக்கிரமதுங்க ஆகியோருடன் 2005 ம் ஆண்டு தொடக்கம் ஏப்ரல் 2009 ம் ஆண்டு வரை வன்னியிலிருந்து நேரடியாகச் செய்திகளை வழங்கிய தமிழ்நெற்றின் ஊடகவியலாளரான ஏ.லோகீசன் ஆகியோரின் கதைகளும் இந்த திரைப்படத்தில் மையப்படுத்தப்பட்டுள்ளன.
தமது சொந்த நாட்டில் கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டு, கிட்டத்தட்ட கொலை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வெளிநாடுகளில் வாழும் இலங்கை ஊடகவியலாளர்கள் தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்ற ஒரு திரைப்படமாகவே இது தயாரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுகளில், பலர் காணாமற் போயுள்ளனர் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 50 வரையிலான ஊடகவியலாளர்கள் அண்மையில் இலங்கையை விட்டு வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர் என பிஃரிட் ஓர்ட் அமைப்பு தனது ஊடகக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இத்திரைப்படத்தைத் தயாரித்த நோர்வே நாட்டு திரைப்படத் தயாரிப்பாளரான பீட்டே ஆர்நெஸ்டாட் நோர்வே ஒளிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் திணைக்களங்களுக்கான ஆவணப்படங்களைத் தயாரித்து இயக்குவதில் 20 ஆண்டு கால அனுபவத்தைக் கொண்டுள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாம் தனிநாடு கேட்கவில்லை ஜனாதிபதியின் கூற்று கவலையளிக்கிறது"என்கிறார் சம்பந்தர்.

தனிநாடு ஒன்றுக்கான அதிகாரங்களையே கூட்டமைப்பு கேட்கிறது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கூற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று முற்றாக நிராகரித்து விட்டது.
“தனிநாட்டுக்கான அடிப்படையைக் கொண்ட எந்த அதிகாரங்களையும் நாம் கேட்கவில்லை. சாதாரண முறையில் நியாயமான அதிகாரப் பகிர்வை உலகின் பல நாடுகள் மேற் கொண்டிருக்கின்றன. அவ்வாறானவற்றைத்தான் நாம் வலியுறுத்துகிறோம்” என்று கருத்து வெளியிட்டார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
“ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒரு நியாயமான அரசியல் தீர்வே எமது தேவை. தீர்வுப் பேச்சுகளில் நாம் எந்த நிபந்தனைகளையும் முன்வைக்கவில்லை. புதிய விடயங்களையும் புகுத்தவில்லை. தீர்வுப் பேச்சுகளை ஆரோக்கியமான முறையில் முன்னெடுப்பதற்கு ஜனாதிபதியும், நானும் நடத்திய பேச்சின் போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டை நடைமுறைப் படுத்துமாறே நாம் இப்போது கூறுகிறோம்.
இது கூட்டத்தின் குறிப்பில் கூட தெளிவாக உள்ளது. இது புதிய நிபந்தனையாகப் பார்க்கப்படுகின்றமை எம்மையும், அமைதித் தீர்வொன்றை விரும்பும் எமது மக்களையும் கவலையடையச் செய்துள்ளது. எதுவித புதிய நிபந்தனைகளையும் நாம் விதிக்கவில்லை” என்றார் சம்பந்தன்.

30 ஜனவரி 2012

சவேந்திர சில்வாவின் நியமனத்தை ஏற்க வேண்டாமென மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை.

ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
அமெரிக்காவைத் தளமாக கொண்ட மனிதஉரிமை அமைப்புகள் பலவும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதுடன் இந்த நியமனத்தை நிராகரிக்குமாறும் ஐ.நா பொதுச்செயலரிடம் கோரியுள்ளன.
SPEAK Human Rights, Environmental Initiative, UNROW Human Rights Impact Litigation Clinic at American University Washington College of Law, the Centre for Justice and Accountability and the Centre for Constitutional Rights ஆகிய அமைப்புகள் இணைந்து இது தொடர்பாக கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
பொதுமக்கள் கொல்லப்பட்ட கணக்கிடப்படதாத அளவிலானோர் பாதிக்கப்பட்ட, அனைத்துலக மனிதஉரிமை மற்றும் மனிதாபிமானச் சட்டங்கள் தொடர்பான அடிப்படைக் கொள்கைகள் மீறப்பட்ட- விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா முக்கிய பாத்திரம் வகித்தவர் என்று இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
“மனிதாபிமான நடவடிக்கை என்று சிறிலங்கா அரசாங்கம் இதனைக் கூறியுள்ள போதும், ஐ.நா நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் இந்தப்போரில் போர்க்குற்றங்களும மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களும் இடம்பெற்றுள்ளதற்கான நம்பகமான சாட்சியங்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஐ.நா பொதுச்செயலரிடம் கையளிக்கப்பட்ட இந்த அறிக்கையில் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா தலைமை தாங்கிய 58 வது டிவிசன் இந்தக் குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக விவாதிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக்குழுவுக்கு நியமிக்கப்படும் ஒருவரது தலைமைத்துவ ஆற்றலும், குற்றச்சாட்டுகளற்ற அப்பழுக்கற்ற தன்மையும் தகைமைகளாக கருதப்பட வேண்டும்.
சவீந்திர சில்வாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டால், சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கான அவரது நியமனம் உலகத்துக்கு திகைப்பூட்டும் செய்தியாக அமையும்.
எனவே ஐ.நா பொதுசெயலர் பான் கீ மூன் சவீந்திர சில்வாவின் இந்த நியமனத்தை நிராகரிக்க வேண்டும் அல்லது அவரது நியமனத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்.“ என்றும் அந்த அமைப்புகள் கோரியுள்ளன.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு எதிராக நியுயோர்க் மாவட்ட நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து விலக்குப் பெறுவதற்கு சவீந்திர சில்வாவுக்கு இராஜதந்திர விலக்குரிமை உள்ளதாக அவரது சட்டவாளர் கூறியிருந்தார்.
ஆனால், நீதிமன்றம் இதுதொடர்பாக எந்த முடிவையும் இன்னமும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கான சிறப்பு ஆலோசனைக் குழுவுக்கு மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா நியமிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்து ஒதுங்கி நிற்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் முடிவு செய்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை இந்த குழுவுக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் நியமிக்கவில்லை என்றும் அவரை ஆசிய பசுபிக் நாடுகளின் குழுவே தெரிவு செய்தது என்றும் பான் கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெர்ஸ்க்கி கடந்த வெள்ளியன்று தெரிவித்த கருத்தை மேற்கோள்காட்டி அந்த நாளிதழ் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

29 ஜனவரி 2012

கருணா குற்றவாளி என்று தெரிந்தும் பிரித்தானியா ஏன் அவருக்கெதிரான வழக்கை தள்ளுபடி செய்தது?

கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கருணா அம்மான் எனப்படும் தற்போதைய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், போலிக் கடவுச் சீட்டில் லண்டன் சென்ற போது அவரை பிரித்தானியக் காவல்துறையினர் கைதுசெய்து விசாரித்தனர்.அவர் சிறுவர்களைப் போராளிப் படையணியில் சேர்த்தார், சித்திரவதைகளை மேற்கொண்டார் மற்றும் கொலைகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி அவர் மேல் வழக்குத் தொடர சில சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் தமிழர்களும் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
ஆனால் அவை அனைத்தையும் பிரித்தானிய அரசாங்கம் தட்டிக்கழித்தது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பிரித்தானிய சட்டத்துறை அவர்மேல் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை ஆதாரமற்றவை எனக் கூறி தட்டிக்கழிக்க காரணம் என்ன? அன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசுடன் அதிருப்தியில் இருந்த பிரித்தானியா ஏன் இவ்வாறான ஒரு தீர்மானத்தை எடுத்தது ? போன்ற சில கேள்விகளுக்கு விக்கிலீக்ஸ் தற்போது பதில் வழங்கியுள்ளது.
கருணா குற்றமிழைத்தது பிரித்தானிய அரசுக்குத் தெரியும் எனவும் ஆனால் அவருக்கு எதிராக சாட்சியளிக்க யாரும் வரமாட்டார்கள் என பிரித்தானிய அரசு கருதியதாக அமெரிக்க தூதுவர் தமது தலைமைக்கு செய்தி அனுப்பியுள்ளார்.அது மட்டுமன்றி ஒரு வேளை பிரித்தானிய நீதிமன்றில் கருணாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு சில சாட்சிகளை தாம் விசாரிக்க இலங்கை செல்ல நேர்ந்தால் அதற்கான அனுமதியை இலங்கை தராது என்று பிரித்தானியா திடமாக நம்பியதாகவும் அந்த தகவலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இலங்கை அரசு அனுமதியளிக்காது என்ற ஒரே காரணத்தால் தமிழர்களால் போடப்பட்ட சில வழக்குகளை பிரித்தானியா தள்ளுபடி செய்துள்ளது என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. பிரித்தானியாவில் சட்டத்துறை, வெளியுறவுத் துறை, வருமானத்துறை என பல துறைகள் காணப்பட்டாலும் அவை தனித் தனியாக இயங்குவதாகவும் தமக்கான முடிவுகளை அவையே எடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் இந்த விடயத்தில் சட்டத் துறையும், வெளிநாட்டு அமைச்சும் மற்றும் குடிவரவுத் துறையும் இணைந்தே செயல்பட்டுள்ளமையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சவேந்திரவின் நியமனம் குறித்து பான் கீ மூன் பொறுப்புக் கூறமாட்டார்!

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் புதிய நியமனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளும் என தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் பான் கீ மூனுடைய சிரேஸ்ட ஆலோசகர் குழுவில் சவேந்திர சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இன்னர் சிட்டி பிரஸ்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர், "சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து பான் கீ மூன் பொறுப்புக் கூற மாட்டார். அதேவேளை, அவருடைய நியமனத்தை தடுக்கும் வகையில் செயற்படவும் மட்டார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் பான் கீ மூனுடைய சிரேஸ்ட ஆலோசகர் குழுவில் உள்ளடங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சவேந்திர சில்வா 58வது படை பிரிவின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்டு விடுதலை புலிகளை வீழ்த்த முக்கிய பங்குவகித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஆராய்ந்து ஐநா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சவேந்திர சில்வா தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சவேந்திர சில்வா போர் குற்றவாளி எனத் தெரிவித்து அமெரிக்காவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

28 ஜனவரி 2012

இலங்கைக்கு அழுத்தம் கொடுக்காதீர் என பான் கீ மூனிடம் கோரிக்கை!

இலங்கை மீது அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டாம் என அரசாங்கம், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பேன் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படக் கூடுமென அரசாங்கம் அச்சம் வெளியிட்டுள்ளது.
குறிப்பாக ஐ.நா.நிபுணர் குழுவில் அங்கம் வகித்த ஸ்டீவன் ராட்னர் இலங்கைக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான அழுத்தங்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரகடனத்தை மீறும் வகையில் அமைந்துள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்டீவன் ராட்னரின் சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து, ஜெனீவாவிற்கான இலங்கைத் தூதுவர் தமரா குணநாயகத்தினால் அரசாங்கத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழு உறுப்பினர் ஒருவர், உறுப்பு நாடு ஒன்றுக்கு எதிராக செயற்படும் முதல் சந்தர்ப்பம் இதுவென இலங்கை அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

நடத்துனருக்கும் படையினனுக்கும் இடையில் கைகலப்பு,மக்கள் மீது படைகள் தாக்குதல்!பரந்தனில் சம்பவம்.

பஸ் நடத்துனருக்கும் சிவில் உடையில் பயணித்த படையினருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தர்க்கம் கைகலப்பாக மாறியதில் பயணிகளும் படையினரால் தாக்கப்பட்டனர். இதையடுத்து பஸ் சாரதி, நடத்துனர், படையினர் நால்வர் என 6 பேர் கிளிநொச்சிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். பஸ்ஸில் பயணித்த பயணிகள் வீதியில் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப் பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 8 மணியளவில் கிளி நொச்சி பரந்தன் சந்தியில் நடைபெற்றது. வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தை நோக்கி தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது. கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நகரப் போக்கு வரத்துப் பொலிஸாரால் பஸ் மறிக்கப்பட்டது. மிதி பலகையில் பயணிகளை ஏற்றிய மைக்காக பஸ் நடத்துனரிடம் குற்றப் பணம் அறவிடப்பட்டது.
பின்னர் பஸ் புறப்பட ஆயத்தமாகியதும் மிதி பலகையில் நின்ற பயணிகளை உள்ளே செல்லுமாறு பணித்தார் நடத்துனர். இதன் போது மிதி பலகையில் சிவில் உடையில் நின்ற படையினருக்கும் நடத்துனருக்கும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அது முற்றி கைகலப்பாக மாறியது.
சம்பவத்தை அறிந்து அருகில் நின்ற இராணுவத்தினர் சிலரும் வந்து சேர்ந்தனர். நடத்துனரும் பயணிகள் சிலரும் படையினரால் தாக்கப்பட்டனர். பயணிகள் தகவல் கொடுத்ததை அடுத்து விரைந்து வந்த பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி, நடத்துனரையும் இராணுவத்தினர் நால்வரையும் கைது செய்து கொண்டு சென்றனர்.
பயணித்த பயணிகள் இறக்கப்பட்டு பஸ்ஸூம் பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் நடு வீதியில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் வேறு பஸ்களில் ஏறிப் பயணத்தைத் தொடர்ந்தனர்.
இரவு வேளையில் திடீரெனப் பயணிகள் இறக்கி விடப்பட்டதால் யாழ்ப்பாணம் நோக்கி வந்த பஸ்களில் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து வீடு வந்து சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. படையினரும் பொது மக்களும் மோதிக்கொள்ளும் இத்தகைய சம்பவங்கள் வன்னியில் அதிகம் நிகழ ஆரம்பித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிஸாரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது கடற்படைச் சிப்பாய் ஒருவருக்கும் பஸ் நடத்துனர் ஒருவருக்கும் இடையே கைகலப்பு இடம் பெற்றது. வேறு அசம்பாவிதங்கள் எவையும் நடை பெறவில்லை.
இதனை அடுத்து அவர்களைக் கைது செய்து தாம் விசாரித்து வருவதாகவும் நேற்றிரவு கடமையில் இருந்த பொலிஸார் ஒருவர் தெரிவித்தார்.

27 ஜனவரி 2012

படுகொலைகளை நிறைவேற்றும் குழுவுக்கு அரசு வைத்த பெயர்"சிங்கக்குட்டிகள்".

நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக் குட்டிகள்‘ என்று அழைக்கப்படும் குழுவைப் பயன்படுத்துவதாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் வொசிங்டனுக்கு அனுப்பியுள்ள தகவல் பரிமாற்றக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், அப்போது ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளராகவும், மாத்தறை மாவட்ட அமைப்பாளராகவும் இருந்தவருமான மங்கள சமரவீரவை 2007ம் ஆண்டு பெப்ரவரி 26ம் நாள் அமெரிக்கத் தூதுவர் றொபேட் ஓ பிளேக் சந்தித்திருந்தார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பாக, 2007 பெப்ரவரி 28ம் நாள் றொபேட் ஓ பிளேக், வொசிங்டனுக்கு அனுப்பிய தகவலையே விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.
‘துன்புறுத்தல்கள் பற்றி சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் முறைப்பாடு‘ என்ற தலைப்பில் இரகசிய ஆவணம் என்று குறிப்பிடப்பட்டு இந்தத் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில்,
“விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை கடத்துதல் மற்றும் துன்புறுத்தல் உள்ளிட்ட தமது இராணுவ மூலோபாயம் மூலம் கொழும்பில் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்றும், புலிகளின் வலையமைப்பை பலமிழக்கச் செய்ய முடியும் என்றும் சிறிலங்கா அதிபரும் பாதுகாப்புச் செயலரும் நம்புகிறார்கள்.
நீதிக்குப் புறம்பான செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக சிறிலங்கா அரசாங்கம் ‘சிங்கக்குட்டிகள்‘ என்ற குழுவை உருவாக்கியுள்ளதாக மங்கள சமரவீர உறுதிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய இடங்களில் விடுதலைப் புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் இரகசியமாக தடுத்து வைப்பதற்கு இராணுவப் புலனாய்வுத்துறையின் சிறப்புக் கூண்டுகளை கோத்தாபய ராஜபக்சவின் அனுமதியுடன் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உருவாகியுள்ளதாக சிறிலங்காவில் வதந்தி பரவலாக உள்ளது.
இதுபோன்று ‘அம்பாந்தாட்டைப் பூனைகள்‘ என்ற நிழல் குழு ஒன்று செயற்படுவதாகவும் எமக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தக் குழுக்கள் தம்மால் கொல்லப்படுவோரின் சடலங்களை கடலில் வீசி விடுவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.“ என்று றொபேட் ஓ பிளேக் குறிப்பிட்டுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

ஐ.நா.அமைதிப்படையில் தமிழின அழிப்பில் ஈடுபட்ட சவேந்திர சில்வாவிற்கு முக்கிய பதவி!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான பிரதி வதிவிடப் பிரதிநிதியாகவுள்ள சர்ச்சைக்குரிய சவேந்திர சில்வா, அமைதி காக்கும் படை உயர் பதவியொன்றுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் விசேட ஆலோசனைக் குழு பிரதிநிதிகளில் ஒருவராக சவேந்திர தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தெரியவருகிறது.
முதல் தடவையாக இலங்கையர் ஒருவர் இந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். சவேந்திர சில்வா ஆசிய பசுபிக் பிராந்திய வலய நாடுகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கனேடிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் லுயிஸ் பெர்ச்டெய், முன்னாள் அமெரிக்க துணை பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் டொப்பின்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத் தொடர் இந்த மாதம் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

26 ஜனவரி 2012

செந்தமிழன் சீமானை சிங்களவனுடன் ஒப்பிடுவதா?"தமிழ் படைப்பாளிகள் கழகம் கண்டனம்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலம் தொட்டு இன்று வரை சேரன் ஒரு குழப்ப வாதியாகவும் தன் அங்கீகாரத்திற்காக எதிரிக்குத் தெரிந்தோ தெரியாமலோ இருப்பதை காட்டிக் கொடுப்பவராகவுமே இருந்து வருகின்றார்.
நீண்ட காலமாக விடுதலைப் புலி எதிர்ப்பாளராகத் தன்னை அடையாளம் காட்டிக் கொண்ட சேரன் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்குப் பின்னர் தன்னை ஒரு தமிழ்த் தேசியவாதியாக காட்ட முனைந்தார். ஆனால் மீண்டும் அவர் தமிழின எதிர்ப்புக் கூடாரத்தின் செல்லப்பிள்ளையாகி விட்டதை அவரது அண்மைக் கால பேச்சுக்கள் எடுத்துக் காட்டுகின்றன.
"அறம் சார்ந்து காலசுவடிற்கு எதிரான போராட்டம் செய்தவர்களை எழுபதுகளில் அமிர்த்தலிங்கதிடம் மைக்கை பிடிங்கியவர்களிடம் இருந்த வெறியை கண்டேன். மலையாளிகள் தமிழர்களைத் தாக்கினால் திருப்பி தாக்குவதை தவிர வேறு வழி இல்லை" என்று சீமான் கூறியதை சிங்கள அமைச்சர் பேசுவதைப் போல் இருக்கிறது என்று பாமரன் புத்தக வெளியீட்டு விழாவில் சேரன் பேசியுள்ளார்.
தமிழ்த் தேசியத்தை உளமார நேசிக்கிற ஒவ்வொரு தமிழனுக்கும் சீமானையோ அன்றி மே -17இயக்கத்தினரையோ விமர்சிக்கும் தகுதியும் உரித்தும் இருக்கிறது. ஆனால் இந்திய உளவு நிறுவனத்துக்குத் தமிழினத்தைக் காட்டிக் கொடுக்கும் தமிழ்நாட்டுக் கிளையாக இயங்கிக் கொண்டு இருக்கின்ற 'காலச்சுவடு' என்ற மலையாளப் பார்பானியக் கூடாரத்தில் உட்காந்து இருப்பவர்களுக்கு அந்தத் தகதியோ உரிமையோ இல்லை.
கடந்த 15 ஆண்டுகளாக வெளிப்படையாகவும் பின்தளம் சார்ந்தும் தமிழ்த் தேசியத்தை முன்னிலைப் படுத்தியும் தமிழீழ விடுலைப் போராட்டத்துக்குத் தனது பேச்சாலும் எழுத்தாலும் மூச்சாலும் வலிமை சேர்த்து வருபவர் செந்தமிழன் சீமான். அவர் ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காகப் போராடும் போராளி. பலமுறை சிறை சென்றிருக்கிளார்.மலையாளிகள் தாக்கினால் தற்காப்புக்காக அவர்களை எதிர்த்துத் தாக்குவது இனவாதம் ஆகாது. தமிழர்கள் தாக்காத போதும் தாக்கும் சிங்கள ஆட்சியோடு அதனை ஒப்பிடுவது சிறுபிள்ளைத்தனமானது.
மகாவம்ச மேலாண்மைச் சிந்தனையில் மூழ்கித் தமிழர்களை அடக்கி ஒடுக்கி கொடுங்கோலாட்சி நடத்தும் சிங்கள ஆட்சியாளர்களோடு செந்தமிழன் சீமானை ஒப்பிட்டுப் பேசுவது அறியாமை ஆகும். முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் சிறிலங்கா அரசு தீவிர இனச் சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ளது. தமிழர்களது காணிகள் கையகப்படுத்தப்பட்டு அங்கு திட்டமிட்ட முறையில் சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள். தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளில் பாரிய படைத் தளங்கள், படைக் குடியிருப்புக்கள், படை முகாம்கள், பவுத்த விகாரைகள், புத்தர் சிலைகள் கட்டியெழுப்பப்பட்டு வருகின்றன.
தமிழ் நாட்டில் தமிழின எதிர்ப்பு என்பது காலச்சுவடு என்ற பார்ப்பனக் கூட்டத்தின் எழுதாத வேதமாக இருந்து வருகிறது. தமிழீழப் போராட்டம் என்றாலே பயங்கரவாதிகளின் போராட்டம் என்று காலச்சுவடு கொச்சைப்படுத்தி வந்திருக்கிறது. அதில் தமிழ் நாட்டுப் பார்பனீயத்தின் இராசகுரு துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, இந்து இராம் போன்றவர்கள் வெளிப்படையாகத் தெரிந்த முகங்கள்.சேரன் கடந்த 2001 ஆண்டிலும் இதே காலச்சுவடு கூடாரத்துடன் சேர்ந்து தமிழீழத் தேசியக் கவிஞரான உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களைத் தாக்கியமை இங்கு நினைவு கூரத்தக்கது
சேரன் குறித்து மக்களை விழிப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.
-தமிழ்ப் படைப்பாளிகள் கழகம்-

பருத்தித்துறையில் பாடசாலை மாணவி கடத்தப்பட்டு கொலை!

பருத்தித்துறை சக்கோட்டைப் பகுதியில் நேற்று மாலை 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் இனந் தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்றிரவு அந்தப் பகுதியில் பெரும் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டது.
பருத்தித்துறை சக்கோட்டையைச் சேர்ந்த இருதயநாதர் மேரி டிலக்சனா (வயது 17) என்ற மாணவியே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அல்வாய் வடக்கு றோ.க.த.க. வில் கல்வி பயிலும் இந்த மாணவியின் சடலம் நேற்று இரவு அவரது வீட்டுக்கு அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் மேலும் கூறினர்.
சக்கோட்டை பழைய வேதக் கோயிலடிக்கு அண்மையில் உள்ள வீடொன்றில் இருந்தே அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.மாணவி தனது வீட்டுக்கு அண்மையில் வைத்து இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு பாலியல் இம்சைக்கு உள்ளாக்கப்பட்ட பின்னரே கொல்லப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். மாணவியின் சடலம் நேற்று இரவு வரை சம்பவ இடத்திலே இருந்ததாகக் கூறப்பட்டது.
மாணவி கடத்தப்பட்டுப் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பதனை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவுப் பொறுப்பதிகாரியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது மாணவியின் சடலம் மீட்கப்பட்டதை உறுதிப்படுத்திய அவர் மாணவி பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டாரா என்பதை இப்போது உறுதியாக கூறமுடியாது எனத் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட மாணவியின் உறவினர் ஒருவர் தகவல் தருகையில் “மாணவி டிலக்சனா அவரது வீட்டுக்கு மிக அருகில் வைத்தே கடத்தப்பட்டுள்ளார். சக்கோட்டைப் பழைய வேதக் கோயிலடிக்கு அருகில் அவரது வீடு உள்ளது. வீட்டில் இருந்த மாணவியின் தாயும் தகப்பனும் அலுவல் நிமித்தம் வெளியே சென்று விட்டனர். இந்த வேளையில் மாணவி அயலில் உள்ள ஆலயம் ஒன்றில் வழிபாட்டில் ஈடுபட்டுவிட்டு வீட்டுக்குத் திரும்பினார்.
மாலை 6.30 முதல் மாலை 6.45 மணி வரையான இடைப்பட்ட நேரத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றிருக்க வேண்டும். வீட்டுக்கு மிக அருகில் வைத்து மாணவியை யாரோ கடத்திச் சென்றுள்ளனர். கடத்தப்பட்ட அவர் அருகில் உள்ள ஆள்களற்ற வீடொன்றில் வைத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். மாணவியின் உடலெங்கும் நகக்கீறல் காயங்கள் காணப்பட்டன. அவரது ஆடைகளும் கலைந்திருந்தன. அவர் பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தெரியாது.
அலுவல் முடிந்து வீடு திரும்பிய தாயும் தகப்பனும் மாணவியை காணாது தேடியுள்ளனர். இந்த வேளையிலேயே அவரது சடலம் அருகிலுள்ள வீடொன்றில் இருந்தமை தெரியவந்தது. இதனை அடுத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டது. சம்பவத்தை கேள்வியுற்று பொலிஸாரும் படையினரும் அங்கு வந்து குவிந்தனர் என்றார்.
மாணவி பாலியல் இம்சைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் பருத்தித்துறைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். எனினும் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் நேற்றிரவு 10.30 மணிவரை கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் கூறினர்.

போர்க்குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்காதாம்!

ஜெனீவாவில் அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாக உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்று நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்துவதில் அமெரிக்கா தீவிரம் காட்டாது என்று வோஷிங்ரனில் இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.பாதிக்கப்பட்ட தமிழர்களே சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கேட்காத நிலையில் அத்தகைய விசாரணை ஒன்றுக்கு அமெரிக்கா உடனடியாக அழுத்தம் கொடுக்கக்கூடாது என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளில் பலரும் ஆலோசகர்களில் பலரும் ஆலோசனை கூறியிருக்கிறார்கள்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்ற மேற்கு நாடுகள் முயற்சிக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதற்கான முயற்சிகளைச் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப் பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற மனித உரிமை அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்றன.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் ஆணையாளர் நவி பிள்ளையும் (நவநீதம்பிள்ளை) அடுத்த மாதத்தில் இலங்கைக்கு மேற்கொள்ள இருந்த தனது பயணத்தை ரத்துச் செய்திருந்தார். ஜனாதிபதியின் நல்லிணக்கத்துக்கான படிப்பினைகள் ஆணைக்குழு, போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியதே அவரது இந்த முடிவுக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
இவற்றை அடுத்து ஜெனீவாவில் இலங்கைக்குக் கடும் நெருக்கடி இருக்கும் என்ற எதிர்பார்ப்புப் பரவலாக உள்ளது. ஆனால், இலங் கைக்கு எதிராகச் சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றைக் கோருவதற்கான எந்த ஒரு முயற்சியையும் ஜெனீவா கூட்டத் தொடரில் அமெரிக்கா ஊக்குவிக்காது என்று வோஷிங்ரன் செய்திகள் திட்டவட்டமாகக் கூறுகின்றன.
“போர்க்குற்ற விசாரணை ஒன்று வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் எந்த ஒரு சமயத்திலும் குரல் கொடுக்காத நிலையில், அத்தகைய ஒரு விசாரணையை அமெரிக்கா வலியுறுத்தக்கூடாது என்பதே ராஜாங்கத்திணைக்கள அதிகாரிகளதும் ஆலோசகர்களதும் பரிந்துரை” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“ஐ.நா. மனித உரிமைகள் சபையின் அடுத்த ஜெனீவா கூட்டத் தொடரில் அதிகபட்சமாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற அழுத்தம் மட்டுமே வழங்கப்படும். இதுவே தற்போதைய நிலைமை” என்று அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
எனினும், “தமிழர் தரப்பிலும் மனித உரிமைகள் தரப்பிலும் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுக்கும் பட்சத்திலும், சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு அதிக நாடுகளின் ஆதரவைப் பெறும்பட்சத்திலும் அமெரிக்காவின் முடிவு மாறக்கூடும்” தாம் எதிர்பார்க்கிறார்கள் என்று அமெரக்காவிலிருந்து செயற்படும் தமிழ் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
“போர்க்குற்றச்சாட்டுக்களை வலியுறுத்தும் குரல்கள் தாயகத்திலிருந்தும் அதிகளவில் எழுப்பட்டாலேயே எமது முயற்சி விரைவில் சாதகமாகக்கூடும்” என்றும் அவர் தெரிவித்தார். இதேவேளை, இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணை ஒன்றை மேற்கொள்ள அமெரிக்காவை நம்பி இருந்தால் அது மிக நீண்டகாலச் செயற்பாடாகவே இருக்கும் என்று வோஷிங்ரனில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்ததாக தமிழ்ப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

25 ஜனவரி 2012

அழைப்பு இல்லாததால் சிரியாவை உளவுக்கு அனுப்பியதாம் இலங்கை!

சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா நிபுணர்குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ஸ்டீபன் ரட்னர் வலியுறுத்திய வட்டமேசை மாநாட்டுக்கு சிறிலங்கா அழைக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனிவா அக்கடமியில் கடந்தவாரம் இடம்பெற்ற இந்த மாநாட்டுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகமே ஏற்பாடுகளைச் செய்திருந்தது.
அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் மட்டுமே இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.
இதனால், அழைப்பு இல்லாமல் சிறிலங்கா இந்த மாநாட்டில் பங்கேற்க முடியாமல் போனது.
மேற்குலக நாடுகளில் ஜெனிவாவுக்கான பிரதிநிதிகள் பலரும் இந்த மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இந்த வட்டமேசை மாநாடுக்கு அழைப்பு விடப்படவில்லை என்றும், இதனால், சிறிலங்காவை அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்று கோரப்பட்ட இந்த மாநாடு குறித்து தம்மால் கருத்து வெளியிட முடியாது என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
அடுத்தமாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்வைத்து, ஜெனிவாவில் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்படுவது உள்ளிட்ட மேலும் சில நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை மற்றும் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அனைத்துலக போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காக வைத்தே இந்த வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டதாகவும் அந்த அதிகாரி கூறியுள்ளார்.
ஜெனிவாவில் உள்ள சிறிலங்கா தூதரகம் இந்த மாநாட்டைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்ட போதும் அது வெற்றியளிக்கவில்லை.
இதையடுத்து சிறிலங்கா அங்கு என்ன நடக்கிறது என்று உளவறிய சிரியாவின் பிரதிநிதியை அங்கு அனுப்பியிருந்தது.
அங்கு ரட்னரின் உரைக்கு எதிராகவும் சிறிலங்காவுக்கு ஆதரவாகவும் சிரியப் பிரதிநிதி உரையாற்றினார்.
சிறிலங்காவின் உளவாளியாக சிரியப் பிரதிநிதி புகுந்துள்ளதை அறிந்து கொண்ட மேற்குலக நாடுகளின் பிரதிநிதிகள் பலரும் இந்த மாநாட்டில் அதிகம் கருத்து வெளியிடாமல் இருந்ததாகவும் ஆங்கில இணையத்தளம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே, ஜெனிவாவில் அடுத்து நடக்கப் போகும் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை மேற்கொள்ள செய்யப்படும் பரப்புரைகளை முறியடிக்க சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைள் குறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விசாரித்துள்ளார்.

1000 முன்னாள் போராளிகள் நிலைமை என்ன?

வன்னியில் நடந்த இறுதிப் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி வழங்க இலங்கை அரசு தவறிவிட்டது என்று சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் விமர்சனம் செய்துள்ளது. போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்கவோ பொறுப்புக்கூறவோ இலங்கை அரசு தவறியுள்ளது. மாறாகப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து இராணுவத்தை இலங்கை அரசு விடுவித்துள்ளது.
இவ்வாறு சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.2012 ஆம் ஆண்டுக்கான உலக மனித உரிமைகள் நிலைமைகள் குறித்த அறிக்கையை மனித உரிமைகள் கண்காணிப்பகம் நேற்றுமுன்தினம் வெளியிட்டுள்ளது.
90 நாடுகளின் மனித உரிமை நிலைமைகள் குறித்து 676 பக்கங்களில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இலங்கை குறித்துக் கூறப்பட்டுள்ளதாவது:
ஊடக அச்சுறுத்தல் தொடர்கிறது.மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு இராணுவத்தினரால் நிகழ்த்தப்பட்ட மீறல்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் அவர்களைப் பாதுகாத்து வருகிறது. மேலும், ஊடகங்கள் மற்றும் குடியியல் சமூகக்குழுக்கள் மீதான அச்றுத்தல்கள் தொடர்கின்றன.
வடக்கு, கிழக்கில் காணிகள் அபகரிப்பு மற்றும் பாதுகாப்பின்மை பற்றி எழுப்பப்பட்ட பெருமளவு முறைப்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இராணுவத்தை காப்பற்றியது ஆணைக்குழுவின் அறிக்கை நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை டிசம்பரில் வெளியிடப்பட்டபோதும், போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற இரத்தம் தோய்ந்த நடத்தைகள் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கை இராணுவத்தை அது விடுவித்துள்ளது.
2011இல் பொறுப்புக்கூறுதல் மிகமுக்கிய பிரச்சினையாக இருந்ததுடன் ஊடகங்கள் மீதான தணிக்கை அதிகரித்தது, நீண்டகாலமாக இருந்து வந்த குறைகள் எவற்றுக்கும் தீவிரமாகப் பதிலளிக்கப்படவில்லை.

நீதியற்ற, பலவீன ஆட்சி:

நீதியற்ற, பலவீனமாக சட்ட ஆட்சியை, நில அபகரிப்பை, ஊடகத் தணிக்கையை இலங்கையர்கள், ஆட்சியாளர்களிடம் இருந்து எதிர்கொண்டனர். இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை போர் மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளில் இருந்து அரச படைகளை விடுவித்துள்ளதுடன், மேலதிக பொறுப்புக் கூறுதல் பற்றிய எந்த உறுதியான அடியையும் எடுத்து வைக்கவில்லை. ஐ.நா. நிபுணர்குழு அறிக்கையில் இலங்கை அரசபடைகளின் மீறல்கள் பற்றிக் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இந்த அறிக்கையில் எதையும் காணவில்லை. சுதந்திரமாக கருத்துகளை வெளியிடுவோர் மீதான தாக்குதல்கள் 2011 இலும் தொடர்ந்தன.

உதயன் செய்தி ஆசிரியர் தாக்குதல் தீவிரவாதச்செயல்:

உதயன் செய்தி ஆசிரியர் தாக்கப்பட்டது, நெதர்லாந்து வானொலி ஊடகவியலாளர்கள் இலங்கைப் பொலிஸாரால் துன்புறுத்தப்பட்ட பின்னர் வெள்ளை வானில் வந்தோரால் தாக்கப்பட்டது, அவர்களின் பொருள்கள் கொள்ளையிடப்பட்டது, மனிதஉரிமை செயற்பாட்டாளர்கள் இருவர் யாழ்ப்பாணத்தில் காணாமற்போனது என்பனவற்றை தீவிரவாத செயல்களாகவே மனித உரிமைகள் கண்காணிப்பகம் பட்டியலிடப்படுகிறது. கருத்து சுதந்திர அடக்குமுறை
இணையத்தளங்களை பதிவு செய்ய இலங்கை அரசு விடுத்த உத்தரவை கருத்து சுதந்திரத்தின் மீதான அடக்குமுறையாக இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளது.
நல்லிணக்கத்துக்கான அர்த்தமுள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு கூறினாலும், அதற்கான ஆதாரங்கள் சிறியளவிலேயே உள்ளன எனவும் நல்லிணக்க முயற்சிகள் முடிவடைந்த வரையில் தாமதப்படுத்தப்படுகின்றன எனவும் அது கூறியுள்ளது.

1000 முன்னாள் போராளிகள் நிலைமை என்ன?

பூசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 1000 முன்னாள் போராளிகளின் நிலைமை என்னவென்று தெரியாத நிலை உள்ளது எனவும், தடுப்பிலுள்ளோர் சித்திரவதை செய்யப்படுவது, மற்றும் தவறாக நடத்தப்படுவது பற்றிய குற்றச்சாட்டுகள் குறித்து எந்த விசாரணைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது.

24 ஜனவரி 2012

மனித உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் தீர்மானிக்கட்டும்.

சிறிலங்காவில் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக் கூறுதல் தொடர்பாக ஆலோசனை வழங்க ஐ.நா பொதுச்செயலர் நியமித்த நிபுணர் குழுவின் அறிக்கையைக் கவனத்தில் எடுப்பது குறித்து ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகள் தான் தீர்மானிக்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி தெரிவித்துள்ளார்.
நேற்று நியுயோர்க்கில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“இந்த அறிக்கை இப்போது ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் கவனத்தில் உள்ளது. அவர்களுக்கு அதை நாம் அனுப்பி விட்டோம். அவர்களே அதனைக் கவனிப்பர்.“ என்று மார்ட்டின் நெஸ்ர்க்கி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் போரின் போது ஐ.நாவின் கடற்பாடுகள் குறித்து நடத்தப்படும் ஆய்வுகள் இன்னமும் முடிவடையவில்லை என்று்ம் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதற்கென தொராயா ஒபெய்ட் என்ற ஐ.நா அதிகாரியை ஐ.நா பொதுச்செயலர் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காரணம் எதுவும் இல்லாமல் போராடுகிறார்கள் என்கிறார் கெகலிய.

ஜனநாயக ரீதியாக நடத்தப்பட்ட தேர்தல்களில் தோல்வியுற்று, அரசியல் ரீதியாக ஒரு ஸ்தானத்துக்கு வரமுடியாத குழுவினரும், டொலர்களுக்கு விலைபோனவர்களும் மக்கள் போராட்டம் என்ற பெயரில் எந்தவிதமான காரணங்களுமின்றி நாட்டுக்கு எதிராக சதிமுயற்சிகளை மேற்கொள்வதற்கு முயற்சிப்பதாக கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கும், அரசாங்கத்துக்கும் எதிராக முன்னெடுக்கப்படும் சதி முயற்சிகளுக்கு முகம்கொடுக்க அரசாங்கம் தயாராகவிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மறைந்திருந்து செயற்படும் இந்தக் குழுக்களை அடையாளம் கண்டு அவர்களின் நடவடிக்கைக்கு எதிர் நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் தோன்றியிருப்பதாக நேற்றையதினம் கொழும்பிலுள்ள அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் கூறினார். அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
மக்கள் போராட்டம் ஒன்றை நடத்துவதாயின் அதற்கு உரிய காரணம் இருக்க வேண்டும். நாட்டில் வறுமை, வேலையின்மை, பொருளாதாரப் பின்னடைவு என ஏதாவது காரணங்கள் இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் தற்போது அவ்வாறான எந்தக் காரணங்களும் இல்லை. அரசாங்கம் நாட்டைப் பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்கிறது என்றார்.

23 ஜனவரி 2012

அமெரிக்காவின் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் சம்பந்தனின் பெயரும் இருந்ததாம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் அமெரிக்காவின் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்திருக்கின்றார்.
இவர் அமெரிக்கா செல்கின்றமைக்கு 2004 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் திகதி கொழும்பு தூதரகத்தில் விண்ணப்பித்து இருக்கின்றார்.
இவருக்கான விசாவை வழங்குகின்ற முன்னெடுப்புக்களில் தூதரகம் ஈடுபட்டு இருந்தது.
ஆனால் தூதரகத்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அமெரிக்காவின் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இரா. சம்பந்தன் உள்ளார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சில் இருந்து தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவை மூலம் கொழும்புத் தூதரகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் சம்பந்தர் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி என்றும் கனவான் என்றும் பயங்கரவாதி அல்லர் என்றும் முன்பு பல தடவைகள் விசா பெற்று அமெரிக்கா வந்திருக்கின்றார் என்றும் தூதரக அதிகாரிகள் அவசரமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் இவர்களுக்கு விசா நிராகரிக்கப்படுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
சம்பந்தரின் பெயரை கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டிப்பாக கேட்டு இருந்தனர்.
2004 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி கொழும்புத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைக்கப் பெற்று உள்ளன.

22 ஜனவரி 2012

யாழில் மாணவர்களை எச்சரித்து துண்டு பிரசுரங்கள்!

இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது.குறிப்பாக கஸ்தூரியார் வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது . இந்து கல்லூரில் காணப்பட்ட பிரசுரங்களை மாணவர்கள் தீ இட்டு கொளுத்தினர். இந்த எச்சரிக்கையின் பின்னர் 4 மாணவர்கள் கடத்தப்பட்டனர்,மீண்டும் இது தலை தூக்கி இருப்பது பெற்றோர் மத்தியில் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

எமக்கு என்ன கிடைக்கின்றது என்பதை விட நாட்டிற்கு என்ன கிடைக்கிறதென சிந்திக்க வேண்டும் என்கிறார் அப்துல் கலாம்.

இலங்கையில் கிராமப் பகுதிகளுக்கு நவீன வசதிகளுடான செயற்றிட்டங்களை பகிர்ந்தளிக்கும் திட்டத்தில் பங்களிப்பு செய்ய தாம் தயாராக இருப்பதாக இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியும், பிரபல விஞ்ஞானியுமான அப்துல் கலாம் கூறியுள்ளார்...
அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பௌதீக, இலத்திரனியல் மற்றும் அறிவியல் துறைகளை ஓன்றிணைப்பதன் மூலம் 15 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் ஊடாக பொருளாதார தொடர்புகளை கட்டியெழுப்ப முடியும் என இந்திய முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தற்போது இலங்கையில் செயற்படுத்தப்பட்டு வரும் நல்லிணக்க, மற்றும் மீளமைப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் அவர் கலந்துரையாடியுள்ளார். அதேவேளை, 'மும்மொழிகளைக் கொண்ட இலங்கைக்கான பத்து வருட திட்டத்தை' வெளியிடும் நிகழ்வும் இன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது..
அதன்போது இந்திய முன்னாள் ஜனாதிபதி தமிழிலும், சிங்களத்திலும், சபை வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து உரையாற்றிய அவர், ஒரு நாடு என்ற அடிப்படையில் ஒற்றுமையாக முன்னோக்கி செல்வதன் ஊடாக அனைத்து எதிர்பார்ப்புகளையும் ஈடேற்றிக் கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் குறிப்பிட்டார்.
இது ஒரு வரலாற்கு முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆர்வத்துடனேயே இந்த நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. மும்மொழி ஆண்டாக 2012 ம் ஆண்டு நாமகரணமிடப்பட்டிருக்கின்றமை விசேட அம்சமாகும். பலதரப்பட்டவர்களின் ஒன்றிணைவால்தான் சமூகம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.
அதனால், பொருளாதாரத்தின் பிரதிபலன்கள் அனைத்து சமூக கட்டமைப்பிற்கும் பகிர்ந்து செல்லவேண்டும். இல்லையென்றால் பலவிதமான நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
தொழிவாய்ப்பின்மை, வறுமை போன்ற பிரச்சினைகளால் மனித சமூகம் வன்முறையான விதத்தில் செயற்பட சந்தர்ப்பம் ஏற்படுகிறது. அவ்வாறான சிறிய வன்முறைகள், மத, இன அடிப்படையில் பாரிய முறுகல் நிலைக்கு வழி வகுக்கிறது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் பல அனுபவங்கள் உள்ளன. எனவே, குறித்த பிரச்சினைகள் எவ்வாறு ஏற்படுகின்றன என்று ஆராய வேண்டும்.
எமக்கு சரியான முறையில் சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். பொதுவாக எமக்கு கிடைக்கக் கூடியது என்னவென்று, எதிர்பார்ப்பதை விட, நம் நாட்டிற்கு என்ன கிடைக்கின்றது என தாம் சிந்தித்து பார்க்கவேண்டும் என்று தமது உரையில் அவர் தெரிவித்திருந்தார்..
இதனிடையே அவர் எதிர்வரும் 23 ம் திகதி யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

பான் கீ மூன் மீது இன்னர் சிற்றி பிரஸ் விசனம்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவ் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென இன்னர் சிற்றி பிரஸ் விசனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதை தாம் பெரிதும் விரும்புவதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பான் கீ மூன், மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்திருந்தார்.
அக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ள போதிலும், அது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையிலேயே இன்னர் சிற்றி பிரஸ் தனது விசனத்தை தெரிவித்துள்ளது.

21 ஜனவரி 2012

கண்ணீரில் நனைய வைக்கும் சோகம்!வறுமையால் உயிர் துறந்த முன்னாள் போராளிகள்.

இரு உயிர்கள் ஓருயிராய்ப் பிரிந்தது. உலகமே கண்ணீர் வடிக்கிறது. பிரிவுக்கான காரணத்தைக் கேட்டால் கண்கள் இரண்டும் கண்ணீரில் மிதக்கின்றது.
வறுமையின் உச்சநிலை, வெறுத்து விட்ட வாழ்க்கை, இதனால் தற்கொலை செய்து கொண்டது இரண்டு உயிர்கள். ஒன்றை விட்டு ஒன்று பிரியாத இந்த உயிரிழப்பு உலகில் வாழும் அத்தனை உயிரிழனங்களின் கண்களிலும் கண்ணீரைச் சொரிய வைத்து விட்டது.
இளம் தம்பதிகளின் இந்தத் தற்கொலை வறுமையால் நேர்ந்த கதி என்னும்போதுதான் ஞாபகம் வருகின்றது, புலம்பெயர் தேசத்திலே மேற்கொள்ளப்படுகின்ற வசூலிப்புக்களும், வெற்றுக் கோஷங்களும் இலங்கையில் வாழுகின்ற மக்களின் கஞ்சியில் மண்ணைத்தூவுவதாகவே உள்ளது என்பது.
இந்த வசூலிப்புக்களும், கோஷங்களும் ஈழத்தில் வாழுகின்ற எம்மவர்களின் வறுமையைப் போக்காது. மாறாக புலம்பெயர் தேசங்களில் இருக்கின்ற, புலிகளின் பெயர் சொல்லி பணம் கறக்கின்றவர்களின் சொகுசான வாழ்க்கைக்கு அச்சாரமிடுகின்றன.
ஆயுதம் ஏந்தி தமிழ் மக்களுக்காகப் போராடிய இந்தப் பிஞ்சு உள்ளங்கள், வறுமையின் கொடுமையால் பிரிந்து விட்டதென்ற செய்தி அறிந்தாவது, ஈழத்தில் இவ்வாறு வறுமையின் கொடுமையைச் சந்தித்துச் சாவதற்குத் தயார் நிலையில் இருக்கும் எத்தனையோ குடும்பங்களைக் காப்பாற்றும் எண்ணம் உங்களுக்கு வராதா?
காலிழந்த கணவனைக் கட்டியணைத்தபடி இறுதித் தூக்கம் தூங்கும் ஈழத்துப் பெண், இதுவரை காலமும் ஈழ மண் கணாத சோகம். இதை அறிந்தும், கண்டும் காணாததுபோல் இருக்கும் புலம்பெயர் பிணாமிகளே!
உங்களால் லண்டனில் அண்மையில் உருவாக்கப்பட்ட பணம் கறக்கும் உண்டியல். இந்த உண்டியலில் பணத்தை நிரப்புவதற்காக நீங்கள் கூறுவது இரண்டு காரணம்.
அதில் ஒன்று போர்க் குற்றம் புரிந்த இலங்கை அரசுக்குத் தண்டனை வாங்கிக் கொடுத்தல், மற்றையது ஈழத்தில் வறுமைப்படும் குடும்பங்களுக்கு உதவி செய்தல்.
அந்த உண்டியலில் பொறிக்கப்பட்டிருக்கும் படம் ஈழம். ஈழத்தைச் சொல்லிச் சொல்லியே உங்களின் சுகபோக வாழ்வின் இருப்பை உறுதிப்படுத்துகின்றீர்கள்.
அத்துடன் ஈழத்தில் வறுமையில் வாடும் மக்களை வைத்துச் சேகரிக்கும் பணத்தை உங்கள் சுகபோகங்களுக்கு நீங்கள் பயன்படுத்தி விட, இங்கு ஈழத்தில் வறுமையில் குடும்பம் குடும்பமாக நஞ்சருந்தி உயிர் துறக்கின்றது தமிழினம்.
கடந்த காலங்களில் புலம்பெயர் தேசங்களில் வன்னியில் வறுமையில் வாடும் மக்களுக்கென சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நேர்ந்தது என்பது கூடத் தெரியாதிருக்கும் போது, தற்போது உதயம் பெற்றுள்ளது உண்டியல் கலாசாரம்.
இதேநேரம் புலிகளின் பெயர்களைப் பயன்படுத்தி, மாவீரர் தின நிகழ்வுகளை பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கொண்டாடி பிரித்தானியாவில் மட்டும் இலங்கைப் பணம் 4 கோடி ரூபாயைக்கு மேல் செலவு செய்வதை விடுத்து, ஒன்றாக சேர்ந்து அதனை ஒரு கோடி ரூபாய்க்குக் கொண்டாடி விட்டு மிகுதியை வன்னியில் வாடும் மக்களுக்கு அனுப்பியிருக்க முடியும்.
அதைவிடுத்து பெயருக்காகவும், புகழுக்காகவும், போட்டி போட்டுக் கொண்டு மாவீரர் தின நிகழ்வுகளைக் கொண்டாடுவது, உயிருடன் உள்ள தந்தைக்கு உதவாமல், இறந்த பின் துவசம் கொடுப்பதற்கு ஒப்பானதாகும்.
இதேவேளை வெளிநாடுகளில் நீங்கள் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பை சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காகவே நீங்கள் இவர்களுக்கு வழங்குகின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?
இதற்குச் சான்றாகத்தான் இந்த இளம் குடும்பத்தின் தற்கொலை அமைந்துள்ளது. கடந்த காலங்களில் உங்களிடம் சேகரிக்கப்பட்ட நிதி இங்கு வந்து சேர்ந்திருந்தால் இந்த இளம் குடும்பத்தைக் காப்பாற்றியிருக்க முடியுமல்லவா?
இந்தச் செய்தி கூட ஈழத்தில் இருந்தே எழுதப்படுகின்றது. எனவே இனியாவது ஈழத்தில் வறுமையில் வாடும் மக்களுக்கு என நிதி வழங்க வேண்டுமென்றால் இவ்வாறான பிணாமிகளிடம் வழங்காதீர்கள் என்பது ஈழத்தில் இருந்து நாம் இந்தச் செய்தி ஊடாக அறிவிக்கும் அறிவிப்பாகும்.
இதேவேளை வாழ்ந்தாலும் உன்னோடுதான், இறந்தாலும் உன்னோடுதான் என இரண்டு பிஞ்சுகளும் இறந்து கிடக்கின்றது.
பணம் வசூலிப்பவர்களும் சரி, வழங்குபவர்களும் சரி ஒரு தடவைக்கு இரு தடவை இந்தத் தகவலை நன்கு படியுங்கள். அப்போதாவது உங்களின் மனதை மாற்றுவீர்கள் என நாம் நம்புகிறோம்.
ஈழத்திலிருந்து ஒரு அவலக் குரல்.

வடக்கு மக்கள் தாமாக சிந்தித்து எதுவும் செய்ய முடியாதபடி படைகளின் தலையீடு!

வடக்கு மாகாணத்தில் அனைத்து விடயங்களிலும் இராணுவத்தின் தலையீடு அளவு கடந்து அதிகரித்துள்ளது. இதனால் எந்த ஒரு விடயத்தையும் இராணுவப் பிரசன்னம் இல்லாமல் நடத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
எந்த நிகழ்வாக இருந்தாலும் அதற்கு இராணுவத்தைக் கட்டாயம் அழைக்க வேண்டும் என்ற வாய்மூல உத்தரவு அரச அதிகாரிகள் முதல் அனைத்துத் தரப்புக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் தாம் சுயமாகச் சிந்தித்து தமது விருப்பத்துக்கு ஏற்ப எந்தவொரு செயலிலும் ஈடுபட முடியாத நிலையில் உள்ளனர். இது வடக்கில் அரசு இராணுவ ஆட்சியையே தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புகிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இவ்வாறு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வந்த அமெரிக்க தூதுக்குழுவிடம் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்த இராணுவப் பிரசன்னம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது எனவும் இவ்வாறான நிலை தொடர்ந்தால் அது மீண்டும் வேண்டத்தகாத பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும் இணையம் அமெரிக்கக் குழுவிடம் தெரிவித்திருக்கிறது.
அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் ஆலோசகர் போல் எம்.கார்டர், ஜனநாயக மற்றும் மனித உரிமை, தொழிலாளர் விவகாரங்களுக்கான பதில் செயலாளர் தோமஸ் ஓ மெலியா, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பதில் செயலர் அலிசா சுயர்ஸ், யு.எஸ்.எயிட்திட்ட இயக்குநர் ஜேம்ஸ் பெட்னர் ஆகியோர் அடங்கிய குழு நேற்று யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்தது.
இந்தக் குழுவுக்கும் யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று நண்பகல் 12.15 மணிமுதல் 1.15 மணிவரை இணைய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போதே அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு மேற்குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன.
வடக்கின் தற்போதைய நிலை, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களை மீள் குடியமர்த்துவதில் காட்டப்படும் தாமதம் உட்பட பல்வேறு அன்றாடப் பிரச்சினைகள் தொடர்பாக இணையப் பிரதிநிதிகள் அமெரிக்கக் குழுவிடம் விவரமாக எடுத்துவிளக்கினர்.
இந்தக் கலந்துரையாடலில் இணையப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்டதாவது:
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்று விரைவாக எட்டப்படவேண்டும். தனித்துவமான அடையாளங்களுடன் தமது விடயங்களை தாமே தீர்மானிக்கக் கூடிய கட்டமைப்பைக் கொண்ட அரசியல் தீர்வு ஒன்றையே தமிழ் மக்கள் விரும்புகிறார்கள்.
அந்தத் தீர்வானது சமஷ்டி என்றும் அழைக்கப்படலாம். அல்லது வேறு பெயராலும் அழைக்கப்படலாம். அந்தத் தீர்வை அடைய மேற்கு நாடுகளின் பங்களிப்பு மேலும் மேலும் தேவைப்படுகிறது. தமிழ் மக்களுக்கு ஒரு நீதியான தீர்வு கிடைக்க மேற்கு நாடுகள் நிச்சயம் உதவும் என்ற எதிர்பார்ப்பு அவர்களிடம் உள்ளது. அதனைப் புரிந்து கொண்டு அந்த நாடுகள் தமது பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்.
வடக்கில் சிவில் நிர்வாகம் என்பது வெறும் வாய்ப்பேச்சில் மட்டுமே உள்ளது. மக்கள் தாம் விரும்பும் எந்தவொரு விடயத்தையும் சுயமாகச் செய்யமுடியாத நிலையில் இராணுவ நெருக்குவாரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அனைத்திலும் இராணுவ மயம். இராணுவத்தினர் அழைக்கப்படாமல் எந்தவொரு நிகழ்வும் இங்கு இடம் பெறுவதில்லை.
இப்போது தமிழ் மக்களின் காணிகளை படைத்தரப்புக்கு அபகரிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பெருந்தொகையான காணிகளை படைத்தரப்புக்கு ஒதுக்குமாறு அரச உயர் மட்டத்தில் இருந்து சுற்றுநிருபங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இது ஒரு திட்டமிட்ட அபகரிப்பு. எனினும் அச்சம் காரணமாக இவற்றைத் தட்டிக் கேட்க முடியாத நிலையில் மக்கள் உள்ளனர்.
மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கையிலும் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
அவர்கள் அன்றாட உணவுக்கே கஷ்டப்படுகிறார்கள். அவர்களது பொருளாதார நிலைமை படுமோசமாக உள்ளது. சில இடங்கள் இன்றுவரை மீளக்குடியமர அனுமதிக்கப்படாத நிலையில் உள்ளன.
இந்த இடங்களின் இராணுவ பிரசன்னத்தை அதிகரிப்பதற்காகவே இந்த அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பல்வேறு வழிகளிலும் நெருக்குவாரங்கள், அச்ச நிலை, பயமுறுத்தல் அகியவற்றுக்கு உட்பட்டே வடக்கில் தமிழ் மக்களின் வாழ்க்கை நகர்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இணையப் பிரதிநிதிகளால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களை அமெரிக்கக் குழுவினர் கவனமாகச் செவிமடுத்தனர். அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் சார்பில் சி.வி.கே.சிவஞானம், ஜேசன் செல்வராஜா, எஸ்.றமணதாஸ், பொன்மலர் இராஜேஸ்வரன், டாக்டர் வை.தியாராஜா, எஸ்.திலகரட்ணம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

20 ஜனவரி 2012

இலங்கையின் கொலைக்களங்கள்"ஆவணப் படம் பல நாட்டு ஊடகங்களால் கொள்வனவு.

ITN தயாரிப்புக்களின் சக்தி வாய்ந்த ஆவணப்படமான சிறிலங்காவின் கொலைக்களங்கள், இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா நாட்டு ஒலி, ஒளிபரப்பாளர்களால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
'சனல் 04' தொலைக்காட்சி சேவைக்காகவே முதலில் தயாரிக்கப்பட்ட, ஒரு மணித்தியாலத்திற்கும் மேல் நீண்டு செல்லும் இவ் ஆவணப்படமானது DRG வழங்குனர்களால் அவுஸ்திரேலிய ஒலி, ஒளிபரப்பு சேவையான ABC க்கும், இந்தியாவின் AETN 18 மற்றும் TV Today Network ஆகியவற்றிற்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
சிறிலங்கா அரசாங்கத்திற்கும், தமிழ்ப் புலிகளிற்கும் இடையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் தொடர்பான காட்சிகளை ஆவணப்படுத்திய 'சிறிலங்காவின் கொலைக்களங்கள்' என்ற ஆவணப்படத்தை நோர்வேயின் NRK மற்றும் டென்மார்க்கின் DR ஆகியனவும் கொள்வனவு செய்துள்ளன.
கடந்த யூனில் இவ் ஆவணப்படத்தை 'சனல் 04' தொலைக்காட்சி சேவை இரவு 11 மணிக்கு ஒளிபரப்பிய போது ஒரு மில்லியன் வரையானவர்கள் பார்வையிட்டனர். இதற்கும் மேலாக, சனல் 04 தொலைக்காட்சி சேவைக்காக ITNல் தயாரிக்கப்பட்ட 'சிரியாவின் சித்திரவதை இயந்திரம்' - 'Syria’s Torture Machine' என்ற பிறிதொரு ஆவணப்படத்தையும் கொள்வனவு செய்வதற்கான அனைத்துலக உரிமைகளை DRG பெற்றுள்ளது.
ஊடகவியலாளரான ஜொனதன் மில்லரால் மேற்கொள்ளப்பட்ட இவ்விசாரணைத் திரைப்படமானது சிரியப் பொதுமக்கள் தடுத்து வைக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பான காணொளி ஆவணங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிக்காது என்கிறார் மகிந்த ராஜபக்ஸ.

புலம்பெயர் என்ற பதம் தமக்கு பிடிக்காது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மிஹிந்தலையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு புலம் பெயர் தமிழர்களை குறிப்பிட்டு ஆவேசப்பட்டு பேசியுள்ளார்.
புலிகளின் வலுவான வலையமைப்பு ஒன்று உலகின் பல நாடுகளில் பரவி வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர் - பல்வேறு வழிகளில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தும் முயற்சியில் இந்தபுலி ஆதரவாளர்கள் செயற்பட்டு வருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளர்.
வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு நாட்டுக்கு எதிராக சதித் திட்டம் தீட்டும் தரப்பினர் தங்களை புலம்பெயர் இலங்கையர் என அடையாளப்படுத்திக் கொள்கின்றனர். எனவே புலம்பெயர் என்ற சொல்லே தமக்கு பிடிப்பதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

19 ஜனவரி 2012

முள்ளிவாய்க்கால் நினைவிடம் அமைக்க 45இலட்சம் வழங்கினார் நடராஜன்.

தஞ்சை அருகே விளார் ரோட்டில் அமைக்கப்பட்டு வரும், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னத்துக்காக, சசிகலாவின் கணவர் நடராஜன் தனக்குச் சொந்தமான நிசான் கார், போர்ட் எண்டவர் கார், சொனாட்டா கார், ரோலக்ஸ் வாட்ச் ஆகியவற்றை மேடையிலேயே விற்றார்.
தஞ்சாவூரில் நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழர் கலை இலக்கிய விழா நடத்தப்படுகிறது. போயஸ் கார்டனிலிருந்து சசிகலா குடும்பத்தினர் விரட்டப்பட்ட நிலையில் தஞ்சையில் இந்த விழா நடந்தது.
விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனும் விழாவில் பங்கேற்றார்.
அப்போது, முள்ளிவாய்க்கால் நினைவிடத்துக்காக கூட்டத்திற்கு வந்தவர்களிடம் தனது கார்கள், வாட்சை விற்பதாக நடராஜன் அறிவித்தார்.
அதை அங்கிருந்தவர்கள் ரூ. 45 லட்சம் கொடுத்து வாங்க, அந்தப் பணத்தை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் நடராஜன் வழங்கினார்.
இதையடுத்துப் பேசிய நடராஜன், இனிமேல் எனது சொந்த கார்களை பயன்படுத்த மாட்டேன், இனி எங்கு சென்றாலும், பொது வாகனத்தையே பயன்படுத்துவேன் என்றார்.மேலும் தமிழர்கள் நலனுக்காகப் பாடுபட்டு வரும் பழ.நெடுமாறன், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோருக்கு தங்கப் பதக்கங்களையும், விருதுகளையும் அவர் வழங்கினார்.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு செனட்சபை உருவாக்கப்படவுள்ளதாம்!

சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகளை செனற் சபையில் உள்வாங்குவதன் மூலம் ஜனநாயகத்தை பேணிப் பாதுகாக்க முடியும் என்பதனாலும் இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு நிரத்தரத் தீர்வு காணும் வகையிலும் செனற் சபை ஒன்று அமைக்கப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற (19) அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்
மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் ஒத்தியங்கல் கொண்ட இணக்கப்பாட்டை ஏற்படுத்தவும் இந்த செனற் சபை உதவும் எனக் கூறிய அவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரும் பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து அரசாங்கம் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளது என்றும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு எதிராக செயற்படுவதாக சிங்கள நாளிதழ் குற்றச்சாட்டு!

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வலையமைப்பு செயற்பட்டு வருவதாக திவயின ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுவிழக்கச் செய்ய புலிகள் வலையமைப்பு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதங்கள் இருப்பதனால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருந்தது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்த அறிவிப்பு பிழையானது என தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
இது தொடர்பில் மேன்முறையீடு ஒன்றை செய்வதற்கு விடுதலைப் புலிகளின் சட்டத்தரணி புரூஸ் பின் என்பவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மேன்முறையீட்டை அமெரிக்க மாவட்ட நீதிமன்றமொன்று ஏற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

18 ஜனவரி 2012

சுடு நீர் ஊற்றி கொல்லப்பட்ட சாந்தவேலுவின் உடல் எங்கே?

சாந்தவேல் (39 வயது) பிளம்பிங்க் வேலை பார்த்த ஒரு கூலி தொழிலாளி, மனைவி மற்றும் இரு மகள்களுடன் (12 வயது, 9வயது) வாழ்ந்து வந்தவர். முதன் முறையாக சபரிமலை கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து முகப்பேரை சேர்ந்த சந்திரா குருசாமியிடம் பணம் செலுத்தி ஜனவரி 6ம் தேதி சபரிமலை சென்றார். ஆனால் இரண்டு நாள் கழித்து அவரது மனைவிக்கு கேரள காவல் துறையினர் கூப்பிட்டு உங்கள் கணவர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார் என்ற தகவலை சொல்லியிருக்கிறார்கள். அவரது மனைவியும் சொந்தகாரர்களும் கிளம்பி கோட்டயம் சென்ற பொழுது காவல்துறையினர் சரியான தகவலை தராமல் முறையாக காவல்துறை குற்றத்தை பதிவு செய்யாமல் ஒரு வெள்ளை காகிதத்தில் விபத்து என்று மட்டும் எழுதி கொடுத்து கணவரை கூட்டி செல்லும் படி சொல்லிவிட்டனர்.
அங்கிருந்து இரயில் மூலமாக சென்னை கொண்டு வந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 11ம் தேதி அனுமதித்துள்ளார்கள். அதன்பிறகு சிகிச்சை பலனின்றி சாந்தவேல் மரணம் அடைந்தார். கேரள மருத்துவமனையில் இருந்து சென்னை வரும் வழியில் தனது மனைவியிடம் அவர் சொல்லிய தகவல் “டீக்கடையில் வாக்குவாதம் நடந்தது அப்பொழுது என் மீது சூடுதண்ணியை எடுத்து ஊத்திவிட்டார்கள்” என்பது தான் இதை தவிர வேறு எந்த தகவலும் தெரியவில்லை. கூட்டிசென்ற குருசாமியும் இவரை காணவில்லை என்றோ தேடும் முயற்சியோ செய்யாமல் கூட்டிசென்ற மற்ற 79பேருடன் திரும்பி வந்துவிட்டார். சாந்தவேலை தேடும் எந்த விதமான முயற்சியையும் சந்திரா குருசாமி மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் சாந்தவேலின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும். கொலையை செய்த கொலைகாரர்கள் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்று பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும், தமிழுணர்வாளர்களும் அவர் உடலுடன் போராட்டம் செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் இன்று மாலை சுமார் நான்கு மணியளவில் அங்கு குழுமியிருந்த மல்லை சத்யா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பண்ருட்டி வேல்முருகன், மே பதினேழு திருமுருகன், வழக்குரைஞர்கள் அங்கயற்கன்னி, வடிவாம்பாள், தோழர் அதியமான் மற்றும் பல்வேறு அமைப்பினர்கள் சுமார் நூற்றிற்கு மேற்பட்டோர் கைது செய்து அழைத்து செல்லப்பட்டனர். பின்பு பின்வாசல் வழியாக வந்த காவல்துறையினர் சாந்தவேலின் உடலை கைப்பற்றிகொண்டு சென்றனர். பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.

பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் நீக்கப்பட வேண்டும்.

நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்றுள்ள ஐந்து இலங்கைத் தமிழர்களும் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் விசாரணைகள் நேற்று முன்தினம் ஹேக்கில் ஆரம்பமாகின.குறித்த ஐந்து பேரினதும் வழக்கு தீர்ப்பின்போது, கடந்த 2011 ஒக்டோபர் 21ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் நீக்கப்படவேண்டும்.
அத்துடன், பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியளித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவரினதும் தீர்ப்புகள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று குறித்த ஐந்து பேரினதும் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் Buruma மற்றும் Victor Koppe ஆகியோர் லக்சம்பேக் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, இந்த மேன்முறையீட்டின் போது விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்படுமானால் அது முழு ஐரோப்பாவிலும் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என உலக நெதர்லாந்து வானொலி தெரிவித்துள்ளது.

17 ஜனவரி 2012

ஆயுதம் ஏந்தி போராடப் போவதில்லை என ஜே.வி.பியின் இரு அணியும் அறிவிப்பு.

அரசாங்கத்தை கவிழ்க்க ஆயுதம் ஏந்திப் போராட போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியும், அதன் கிளர்ச்சிக்குழுவும் அறிவித்துள்ளன.
சூழ்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆயுத போராட்டத்தின் மூலம் அரசாங்கங்களை கவிழ்க்கும் நடைமுறையானது காலம் கடந்த ஓர் வழமையாகும் என இரு தரப்பும் கூறியுள்ளன.
தாம் ஒருபோதும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.. உலகின் எந்தவொரு நாட்டிலும் சூழ்ச்சித் திட்டங்களின் மூலம் அண்மையில் ஆட்சிகள் கவிழ்க்கப்படவில்லை எனவும், மக்கள் போராட்டங்களின் மூலமே ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்..
இலங்கை மற்றும் உலக அனுபவங்களை கருத்திற் கொண்டால் அயுத போராட்டம் பொருத்தமற்றது என்பது புரியும் என கிளர்ச்சிக்குழு உறுப்பினர் சமீர கொஸ்வத்த குறிப்பிட்டுள்ளார்... ...
ஆயுத போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக எவரேனும் குற்றஞ்சுமத்தினால் அவரது உள நிலை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியும், கிளர்ச்சிக்குழுவினரும் ஆயுத போராட்டமொன்றுக்கு தயாராவாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

சபரிமலை சென்ற ஐயப்ப பக்தர் கொதி நீர் ஊற்றப்பட்டு கொலை!சீமான் கடும் கண்டனம்.

சபரிமலை சென்ற சென்னையைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் மீது வென்னீரை ஊற்றி படுகாயப்படுத்தி அவரது உயிரைப் பறித்த மலையாளிகளின் கொடுஞ்செயலையும்,அச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாத கேரள காவல் துறையின் உதாசீனப் போக்கையும் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.
அவ்வறிக்கையில், ‘’சபரிமலைக்குச் சென்ற சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த ஐயப்ப சாமி பக்தர் சாந்தவேலு, பம்பை நதி அருகே தேநீர் அருந்தச் சென்றபோது கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது கடைக்காரர் அவர் மீது வென்னீர் ஊற்றித் தாக்கியதால் ஏற்பட்ட கடுமையான தீக்காயங்களால் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி பெரும் வேதனையளிக்கிறது.
கடந்த 8ஆம் தேதி பம்பையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வென்னீர் ஊற்றியதால் இடுப்பிலும், முதுகிலும் ஏற்பட்ட கடுமையானத் தீக்காயங்களுடன் கோட்டயம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சாந்தவேலுவின் உடல் நிலை மோசமானதையடுத்து, அவரது மனைவியும் உறவினர்களும் அவரை சென்னைக்கு அழைத்து வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனிக்காத நிலையில், திங்கட்கிழமை சாந்தவேலு உயிரிந்துள்ளார்.
முதல் முறையாக சபரிமலைக்குச் சென்ற சாந்தவேலு, அங்கிருந்த தேநீர் கடைக்காரருக்கும் தனக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதன் விளைவாகவே கடைக்காரர் உள்ளிட்ட சிலர் தன்னைத் தாக்கினார்கள் என்பதையும், அப்போது கடைக்காரர் கொதிக்கும் வென்னீரை தன் மீது ஊற்றியதாகவும் கோட்டயம் மருத்துவமனையில் தன்னை வந்த பார்த்த மனைவி உள்ளிட்ட உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.
மகரசோதியை முன்னிட்டு சபரிமலைக்கு பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் பம்பையில் குவிந்து கொண்டிருந்த நிலையில், அங்கு பாதுகாப்பிற்காக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கேரள அரசும், அதன் முதலமைச்சர் உம்மண் சாண்டியும் கூறிய நிலையில், அங்கு காவலர்கள் யாரும் வந்து தகராறைத் தடுக்காத்தும், அந்தச் சம்பவம் குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாததும் ஏன்?
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனை காரணமாக கேரளத்து அரசியல்வாதிகள்தமிழர்களுக்கு எதிராக கிளப்பிவிடும் பொய்ப் பரப்புரையின் காரணமாக பதற்றம் நிலவிவரும் நிலையில், ஐயப்ப பக்தர்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் உம்மண் சாண்டி அளித்த உறுதிமொழி வெற்று வார்த்தைகள் என்பது நிரூபணமாகியுள்ளது.
கேரளத்தில் தமிழர்களுக்கு எதிரான பகையுணர்வு எந்த அளவிற்கு உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒருஅத்தாட்சியாகும். சாந்தவேலுவை தன்னோடு அழைத்துச் சென்ற சந்திரகுருசாமி தன் குழுவினருடன்,தகராறு நடந்தபோது அவரை விட்டுவிட்டுச் சென்றுள்ளதாக அவரது மனைவி தமிழக
காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகாரின் மீது தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி முழுமையான புலனாய்வு செய்து, சந்தவேலுவைக் கொன்ற மலையாளிகளை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்று நாம் தமிழர்கட்சி கேட்டுக்கொள்கிறது.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனைக்குப் பின் ஐயப்ப பக்தர்கள் பலரும் தாக்கப்பட்டுள்ளனர். அது இப்போது ஒரு கொலையில் முடிந்துள்ளது.
இப்படிப்பட்ட சம்பவங்களுக்குப் பின்னரும் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்குத் தமிழ் பக்தர்கள் செல்ல வேண்டுமா என்பதை சிந்தித்துப்பார்க்க வேண்டும்.
கோயில்கள் நிறைந்த நம் தமிழ்நாட்டில் எல்லா கடவுள்களுக்கும் ஆலயங்கள் உள்ளதே. தமிழ்க் கடவுளாம் முருகனின் ஆறுபடை வீடுகளைத் தாண்டி புனிதத்தலம் வேறு என்ன வேண்டும்?
தமிழனை எவ்வளவு அடித்தாலும் அவன் சபரிமலைக்கு வருவான் என்ற எண்ணம் காரணமாகவே, சபரிமலை பக்தர்களுக்கு போதுமான வசதிகள் செய்யப்படாததும், அதன் காரணமாகவே கடந்த ஆண்டு புல்மோட்டில் விபத்தும் ஏற்பட்டது.
போதுமான தூய்மைச் சூழலற்ற நிலையிலேயே சபரிமலை யாத்திரைக்கு தமிழர்கள் சென்றுவருகின்றனர். எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு தமிழர்கள் அங்கு சென்றுவருவதால்தான் இன்றைக்கு ஒரு ஐயப்ப பக்தர் இப்படி கொடூரமான கொலை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சபரிமலைக்குச் செல்வதை தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி உள்ளன்போடு வேண்டுகோள் விடுக்கிறது’’என்று தெரிவித்துள்ளார்.

16 ஜனவரி 2012

தீர்வு இன்றேல் ஆயுதப் போராட்டம் மீண்டும் வெடிக்கும்!

இப்போது அரசதரப்பிலுள்ள அமைச்சர்கள், பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எல்லோருமே பேசுகின்ற ஒரே விடயம், ஜே.வி.பி.யின் ஒரு பிரிவினர் மூன்றாவது கிளர்ச்சிக்கும், விடுதலைப் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டத்துக்கும் தயாராகின்றனர் என்பதே. பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ஷ அவ்வப்போது கூறிவந்த இந்த விடயத்தை இப்போது எல்லா அமைச்சர்களும் வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
முன்னர் ஜே.வி.பி பலவீனப்படுவதை விரும்பிய அரசாங்கம் இப்போது அதனை விரும்பவில்லை. முன்னதாக ஜே.வி.பி.யை உடைப்பதற்காக விமல் வீரவன்ஷவையும், நந்தன குணதிலகவையும் பயன்படுத்திக் கொண்டது அரசாங்கம். ஆனால் இப்போது ஏற்பட்டுள்ள பிளவு அரசாங்கத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒன்றாக அமையவில்லை.
ஜே.வி.பி.யில் இரண்டு வகையான தரப்பினர் இருந்தனர். முதலாவது தரப்பினர் ஆயுதக் கிளர்ச்சிகளில் அவ்வளவு தொடர்பில்லாதவர்கள். அரசியல் சித்தாந்தம் பேசுபவர்கள். இவர்கள் எப்படியோ முன்னுக்கு வந்து தலைமைப் பதவியைப் பிடித்துக் கொண் டனர். அவர்கள் தான் விமல் வீரவன்ஷ, சோமவன்ச அமரசிங்க போன்றவர்கள். இவர்களுக்கு ஆயுதப்போராட்டத்தில் அனுபவம் மட்டுமன்றி அதில் நம்பிகையும் இல்லை.
இரண்டாவது வகையினர், ஜே.வி.பி.யின் ஆயுதக்கிளர்ச்சிகளில் தீவிரமாக இருந்தவர்களும், தீவிரப் போக்குடையவர்களும். பிரேம்குமார் குணரட்னம் மற்றும் அவருடன் இணைந்து கொண்டுள்ளவர்களும் இந்த வகையினர். பிரேம்குமார் குணரட்னம் பல்லேகல இராணுவ மூகாம் தாக்குதலில் தொடர் புடையவர் என்று கைது செய்யப்பட்டு, தடுப்பில் இருந்தபோது தப்பிச் சென்றவர்.
புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நம்பிக்கை கொண்ட இவர்கள் தனியே பிரிந்து சென்றிருப்பது தான் அரசுக்குக் கவலை. அதிலும் இன்னொரு அச்சம் அரசுக்கு உள்ளது. லலித்குமாரும், அவரது நண்பர் குகனும் யாழ்ப்பாணத்தில் காணாமற்போய் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்களை அரசபடையினரே கடத்தியதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ஆனால் அதைப் படையினர் மறுத்துள்ளனர் ஜே.வி.பி.யின் மாற்று அணியினர் வடக்கில் உள்ள புலிகளுடன் கைகோர்த்துக் கொண்டு ஆயுதப் போராட்டத்தில் இறங்கலாம் என்ற அச்சம் அரசுக்கு இருந்து கொண்டிருக்கிறது.அத்துடன் பிறேம்குமார் குணரட்னம் அணியினருக்கு வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களே நிதியுதவி செய்வதாகவும் அரசாங்கம் குற்றம்சாட்டி வருகிறது. ஜே.வி.பி.யில் இருந்தபோதே இந்தத் தரப்பினர் வடக்கில் தீவிரமாக அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கி விட்டனர். அவர்களில் உதுல் பிரேமரட்ண போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
தமக்குப் பின்னால், புலிகள் இருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுத்துள்ள அந்தக் குழுவின் தேசிய அமைப்பாளரான துமிந்த நாகவ, வரும் காலத்தில் பசில் ராஜபக்ஷ, நிமால் சிறிபால டி சில்வா போன்றவர்களுக்குப் பின்னாலும் புலிகள் இருப்பதாக அரசாங்கம் கூறக்கூடும் என்று கிண்டலடித்துள்ளார். இலங்கையில் புலிகள் இயக்கம் வேரோடு பிடுங்கியெறியப்பட்டு விட்டபோதும், அவர்களை வைத்து அரசியல் நடத்துவதை மட்டும் அரசாங்கம் கைவிடவில்லை. எதற்கெடுத்தாலும் புலிகளை வைத்துப் பூச்சாண்டி காட்டுவது அரசாங்கத்தின் வழக்கமாகி விட்டது.
போர் முடிவுக்கு வந்த பின்னர் குறைந்து போயிருந்த இந்தப் பழக்கம் இப்போது மீண்டும் அதிகக்கத் தொடங்கி விட்டது.அமைச்சர்கள் எல்லோரும் இப்போது இன்னொரு ஆயுதப்போர் தெற்கிலும் வடக்கிலும் உருவாகலாம் என்பது போல எச்சக்கின்றனர்.ஜே.வி.பி.யில் இருந்து பிரிந்து சென்றோராலும், வெளிநாடுகளிலும், வடக்கில் படையினரிடம் சிக்காமல் தப்பியுள்ள புலிகளாலும் ஆபத்து ஏற்படலாம் என்கிறது அரசாங்கம்.
தொடர்ச்சியாக அரசாங்கம் கூறிவரும் இந்தக் கருத்துகளை முற்றுழுதாக புறமொதுக்கி விட முடியாது. வலுவான புலனாய்வுக் கட்டமைப்பு ஒன்றைக் கொண்டுள்ள அரசாங்கம் இவ்வாறு எச்சரிப்பது ஆழமாக ஆராயப்பட வேண்டியது. மக்கள் போராட்டக் குழு என்ற பெயரில் செயற்படும் ஜே.வி.பி மாற்றுக் குழுவினர் மீது சந்தேகப்படும் அரசாங்கம், இதுவரையில் அவர்களில் யாரையும் பிடித்து விசாரிக்கவில்லை. தலைமறைவாக உள்ள பிறேம்குமார் குணரட்னத்தை மட்டுமே அதிகாரபூர்வமற்ற வகையில் தேடிக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் ஆயுதப் போராட் டத்துக்குத் திட்டமிடுவதாக அரசாங்கம் கூறுகிறது.
குறிப்பாக, அண்மைக்காலமாக பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஜே.வி.பி.யின் நடவடிக்கைகள் பல்கலைக்கழகங்களில் இருந்து தான் தொடங்குவது வழக்கம். எனவே இந்த இரண்டுக்கும் முடிச்சுப் போட்டு ஜே.வி.பி.யின் மூன்றாவது கிளர்ச்சி பற்றி கணக்குப் போடுகிறது அரசாங்கம்.
அதேவேளை வெளிநாடுகளில் அண்மையில் புலிகள் சார்ந்த சில நகர்வுகள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதாக அமைந்துள்ளது. இந்தநிலையில் தான் புலிகள் இரண்டாவது ஆயுதப் போராட்டம் பற்றிய அரசு அச்சம் வெளியிட்டுள்ளது. அடுத்தடுத்து தெற்கிலும் வடக்கிலும் ஆயுதப் போராட்டங்கள் முளை கொள்கின்றன என்று அரசாங்கம் எச்சரிக்கிறது.இது உண்மையாகவும் இருக்கலாம். ஏதேனும் தந்திரோபாய நோக்கம் கொண்டதாகவும் இருக்கலாம். ஒரு விடயம் மட்டும் அரசுக்குப் புரிந்துள்ளது போலுள்ளது.
அதாவது தெற்கிலும் வடக்கிலும் ஆயுதப்போராட்டங்களை முறியடித்த போதும் அதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து தீர்வு வழங்கவில்லை என்பதே அது.ஒன்றுக்கு இரண்டு ஆயுதப் போராட்டங்களில், பெரும் அழிவுகளுடன் தோல்வியடைந்த போதும் ஜே.வி.பி சார்ந்த அணியினர் இன்னொரு ஆயுதப் போராட்டத்துக்குத் தயாராகின்றனர் என்றால், அங்கே இருந்த தவறு திருத்திக் கொள்ளப்படவில்லை என்றே அர்த்தம்.
ஆயுதப்போராட்டத்தை அரசாங்கம் பயங்கரவாதச் செயலாக முத்திரை குத்திக் கொண்டாலும், அதற்குள்ள தார்மீக நியாயங்கள் தான் அதற்குக் காரணம் என்பதை ஏற்றேயாக வேண்டும். புலிகள் இயக்கமோ அல்லது ஜே.வி.பி.யோ அல்லது வேறேந்த இயக்கமோ ஆட்களைக் கொன்று சொத்துக்களை அழித்து இன்பம் காண வேண்டும் என்று ஆயுதப் போராட்டத்தை நடத்தவில்லை. அப்படி உருவாக்கப்பட்டிருந்தால், புலிகளாலோ, ஜே.வி.பி.யாலோ பெரியளவில் மக்கள் ஆதரவைப் பெற்றிருக்க முடியாது.
இரண்டு ஆயுதப் போராட்டங்களுக்கும் அடிப்படைக் காரணங்கள் இருந்தன. தமிழர்கள் இன ரீதியாக, மொழி ரீதியாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் தான் புலிகள் இயக்கம் தோற்றம் பெற்றது. உயர்கல்வித் துறை அமைச்சர் எஸ்.பி.திசநாயக்க கடந்தவாரம் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய போது இதனை ஏற்றுக் கொண்டிருந்தார்.
அதுபோலவே தெற்கில் ஜே.வி.பி.யும் ஆட்சி முறைச் சீர்கேடுகளாலேயே உருவாக்கம் பெற்றது. ஜே.வி.பி.யின் ஆயுதப் போராட்டம் இரண்டு முறை இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்பட்டது. ஆனால், புலிகளை அழிக்க அரசாங்கம் 30 ஆண்டுகாலம் போரிட வேண்டியிருந்தது. ஆக, இரண்டு முக்கியமான அமைப்புகளின் மூன்று ஆயுதப்போராட்டங்களை அடக்கிய அரசாங்கமாக இலங்கை அரசு விளங்குகிறது.
இந்த வகையில் இலங்கை அரசினதும் படைகளினதும் திறனை யாரும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. ஆனால், அழிக்கப்பட்ட இந்த இரண்டு ஆயுதப் போராட்டங்களும் மீண்டும் முளை கொள்வது உண்மையோ இல்லையோ, அப்படியானதொரு கருத்தை அரசாங்கம் முன்வைக்கிறது என்றால், இந்த ஆயுதப் போராட்டங்களின் மீது குறையோ தவறோ இல்லை. தவறுகளை தனியே ஆயுதப் போராட்டங்களை நடத்தியவர்கள் மீது சுமத்தி தப்பித்து விட முடியாது.
அந்த ஆயுதப்போராட்டம் தோற்றம் பெற்றதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதற்குத் தீர்வு கண்டிருக்க வேண்டும். ஜே.வி.பியின் கிளர்ச்சி தோற்கடிக் கப்பட்டு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பின்னர் தான், மீண்டும் அதுபற்றிய அச்சம் வந்துள்ளது. ஆனால்,விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட மூன்றேயாண்டுகளில் இப்படியான அச்சம் வந்துள்ளது.
இதிலிருந்து, ஆயுதப்போராட்டங்களைப் படைபலத்தின் மூலம் அழிப்பதற்கு முன்னுரிமை கொடுத்த அரசாங்கம், அந்த ஆயுதப் போராட்டங்களுக்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டிறிந்து அவற்றுக்குத் தீர்வு காணத் தவறிவிட்டது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இது அரசுக்குப் புரிந்திருக்கிறது, அதனால் தான் மீண்டும் ஆயுதப்போராட்டம் முளைகொள்ளுமோ என்று மிரள்கிறது. எந்தவொரு ஆயுதப்போராட்டத்துக்கும் ஆயுதவழியில் தீர்வு காண முடியாது. அதற்கான அடிப்படைக் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும்.
அப்படித் தீர்வு காணத்தவறினால், குறிக்கப்பட்ட கால இடைவெளிக்குள் மீண்டும் அதே ஆயுதவழிப் போராட்டம் தலைதூக்கும் என்பதே உலக வரலாறு. இந்தப் பாடத்தை அமெரிக்கா அடிக்கடி படிப்பித்தாலும், அது இலங்கை அரசின் தலைக்குள் ஏனோ ஏறுவதாகத் தெரியவில்லை.

சுபத்ரா
நன்றி – வீரகேசரி

15 ஜனவரி 2012

வலி,வடக்கு பிரதேச சபைத்தலைவரையும்,மக்களையும் தாக்கியது கடற்படை!

வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் மீது சேந்தாங்குளம் பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சேந்தாங்குளம் பகுதியில் அண்மையில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் நீண்ட காலமாக சனநடமாட்டம் இன்மையால் பல இடங்களில் பற்றைகள் காடு போல மண்டியிருந்தன இதனால் டெங்கு முதலான நோய்கள் பரவும் அபாயம் எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு குறித்த பற்றைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, அது குறித்து பிரதேச சபைத்தலைவர் கடற்படையினருடனர் கலந்துரையாடி இருந்தார். இதற்கு கடற்படையினரும் அனுமதி அளித்திருந்தனர்.
எனவே குறித்த பற்றைகளை அப்பகுதி மக்கள் நேற்று எரியூட்டினர். இதன்போது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் பற்றைகளை எரியூட்டியவர்களையும், சேந்தாங்குளம் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களையும் தாக்கினர்.அத்தோடு அவர்களை எரியும் பற்றைகளுக்கு தண்ணீர் ஊற்றி அணைக்குமாறும் கட்டளையிட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதேச சபைத்தலைவருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர் இன்னும் சில பிரதேச சபை உறுப்பினர்களுடன் சென்றிருக்கிறார்.கடற்படையினரால் தாக்கப்பட்டவர்களுடன் அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மீண்டும்அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் பிரதேச சபைத்தலைவர் மீது துப்பாக்கிப் பிடியால் தாக்கியதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

14 ஜனவரி 2012

சித்திரவதைகளுக்குள்ளான தமிழ் இளைஞர் உயர் நீதிமன்றில் மனு!

சிறிலங்காவில் விடுதலைப் புலிச் சந்தேக நபர் ஒருவர் தான் வெள்ளை வானில் கடத்தப்பட்ட பின்னர் காவற்துறையின் தடுப்புக் காவலில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக குற்றம்சாட்டி அது தொடர்பாக நீதிமன்றிற்கு விண்ணப்பம் ஒன்றை வழங்கியுள்ளார்.
புத்தள வாசியான 24 வயதுடைய தியாகராஜா பிரபாகரன் என்பவர் தான் நீதிமன்றிற்கு வழங்கிய விண்ணப்பத்தில், வெள்ளைவானில் வந்தவர்களால் கொழும்பில் வைத்து பெப்ரவரி 04,2009 அன்று தான் கடத்திச் செல்லப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் சிறிலங்கா காவற்துறையின் குற்ற புலன் விசாரணைப் பிரிவு குறிப்பிட்ட சந்தேக நபரை இவர் அறியாத ஓரிடத்தில் தடுத்து வைத்தது. அந்த இடம் வத்தளையாக இருக்கலாம் என இவர் நம்புகின்றார்.
தடுத்து வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில், குற்றப் புலனாய்வு அதிகாரிகள் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு தன்னைச் சித்திரவதைப்படுத்தியதாகவும் குறிப்பிட்ட சந்தேக நபர் தெரிவித்துள்ளார். தான் கடத்தப்பட்ட வேளையில் தனது இடக்கண் பார்வை பகுதியளவில் பாதிப்படைந்திருந்ததாகவும், சித்திரவதைகளின் பின் தற்போது இடக்கண் முற்றுமுழுதாகப் பார்வை இழந்திருப்பதாகவும் குறித்த சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு குற்றச்சாட்டுக்களுமின்றி கடந்த இரு ஆண்டுகள் மற்றும் பத்து மாதங்களாகத் தான் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், தன்னை விடுவிப்பதற்கான கட்டளையை தொடர்புபட்ட அதிகாரிகளிற்கு வழங்குமாறும் சந்தேக நபரான தியாகராஜா பிரபாகரன் தனது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். நீதிமன்ற விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் மிகத் தீவிரத் தன்மையானதாகும் என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இவரது விண்ணப்பத்தைக் கருத்திற் கொண்ட உயர் நீதிமன்றம் குறித்த சந்தேக நபரை மார்ச் 08 ல் விடுதலை செய்வதற்கான சாத்தியக்கூறு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும் அல்லது இவருக்கு எதிரான குற்றங்களைத் தாக்கல் செய்யுமாறும் சட்டமா அதிபரிற்கு கட்டளை பிறப்பித்துள்ளது.

தமிழர்களின் காணிகளை அபகரிக்கவே அமெரிக்க,இந்திய இராஜதந்திரிகள் வருகிறார்கள்!

இந்திய அமெரிக்க ராஜதந்திர குழுக்கள் இலங்கை வருவது தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக அல்ல மாறாக அம் மக்களின் காணிகளை கொள்ளையடிப்பதற்காகவேயாகும் என்று இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை கல்கிசை மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார். தமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்கு நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்திற்கு அழுத்தத்தை இவர்கள் கொடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மேலும் தெரிவித்திருப்பதாவது
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதோடு அதன் பரிந்துரைகளை நிறைவேற்றவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனை நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இலங்கை வருகிறார்.
இதேபோன்று அமெரிக்க ராஜதந்திரிகளும் இதற்காகவே வருகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ், வர்த்தக சமூகத்தையும் திருப்திப்படுத்துவதே இவர்களின் நோக்கமாகும். ஏனெனில் அவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தமிழ் மக்களின் காணிகளைக் கொள்ளையடித்து முதலீடுகளை மேற்கொள்ள முடியும்.
அத்தோடு இவ்வாறான முதலீடுகளை மேற்கொள்வதை சம்பந்தன் எம்.பி. தலைமையிலான கூட்டமைப்பு எதிர்க்காது. ஏனென்றால் கூட்டமைப்பும் முதலாளித்துவக் கொள்கையை ஆதரிக்கிறது. எனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு இந்திய அமெரிக்க பிரதிநிதிகளின் வரவால் எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை. மாறாக தமிழ் மக்கள் தமது காணிகளை இழக்கும் நிலைமையே உருவாகும் எனறார்.

13 ஜனவரி 2012

ஸ்ரீலங்கா படைகள் மீது ஐ.நா.நடவடிக்கை எடுக்காது!

ஹெய்டியில் சிறுமிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய சிறிலங்கா படையினர் மீது சிறிலங்கா அரசாங்கமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா கூறியுள்ளது.
இதுதொடர்பாக நியுயோர்க்கில் கருத்து வெளியிட்ட ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கி,
“நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஹெய்டியில் அமைதிகாப்புப் படையில் பணியாற்றிய சிறிலங்காப் படையினர் சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் பாலியல் ரீதியான சுரண்டலுக்கு உட்படுத்தியது பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டிய முழுப்பொறுப்பும் சிறிலங்கா அரசுக்கே உள்ளது.
இது அமைதிகாப்புப் படைக்கு படையினரை அனுப்பும் நாடுகளை சார்ந்த விவகாரம். இது அவர்களின் பிரச்சினை. இது அவர்களின் இறையாண்மைக்குட்பட்ட பொறுப்பு. அவர்களின் தேசிய சட்டங்களுக்குட்பட்டது.
அதற்காக இந்த விவகாரத்தில் ஐ.நா அக்கறைப்படவில்லை என்றோ இதன் தொடர்ச்சியைக் கவனிக்காமல் உள்ளதென்றோ அர்த்தமில்லை.
ஆனால் இது அந்த நாட்டின் தேசிய அதிகாரிகளின் நீதிமுறைக்குட்பட்டது.
குற்றச்சாட்டுகளில் சம்பந்தப்பட்டதாக இனங்காணப்படும் சிறிலங்காப் படையினர் கட்டாயம் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
2007 நவம்பரில் ஹெய்டியில் அமைதிகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த 950 சிறிலங்காப் படையினரில், 111 படையினரும் 3 அதிகாரிகளும் அந்த நாட்டு சிறுமிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மற்றும் சுரண்டலுக்குட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்ப்ப்பட்டிருந்தனர்.
சிறிலங்கா அரசினால் மிகவும் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரம் அண்மையில் தான் வெளிச்சத்துக்கு வந்திருந்தது.

புலனாய்வு பிரிவு எனக்கூறி பல்கலை மாணவனை விசாரித்த நபர் கைது!

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனத் தன்னை அறிமுகம் செய்து யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நகரில் மறித்து வைத்து விசாரணை செய்த நபர் ஒருவரை நேற்றுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். நெடுந்தீவைச் சேர்ந்த லோறன்ஸ் ஜோன் கெனடி என்ற இளைஞனே நேற்றுப் பிற்பகல் யாழ்ப்பாணப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டவராவார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:
யாழ். பல்கலைக்கழக மாணவன் ஆர்.கவிராஜன் நேற்றுப் பிற்பகல் போட்டோ பிரதி எடுப்பதற்காக யாழ். நகரில் உள்ள திரையரங்கு ஒன்றுக்கு அருகிலுள்ள கடை ஒன்றுக்குச் சென்றுள்ளார்.
அந்த வேளை கடைக்கு வந்த லோறன்ஸ் ஜோன் கெனடி என்ற பெயருடைய அடையாள அட்டையை வைத்திருந்த இளைஞன், தான் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் எனக் கூறி மாணவனை விசாரணை செய்ய முற்பட்டார்.
பல்கலைக் கழக இறுதியாண்டுப் பரீட்சைக்குத் தோற்றியிருந்த அந்த மாணவன் தனது கையில் “போருக்குப் பின்னரான காலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அகிம்சை வழியே சிறந்தது” என்ற தலைப்பிலான ஒப்படை ஒன்றை வைத்திருந்துள்ளார்.
குறித்த நபர் மாணவனை நீண்ட நேரமாக இடை மறித்து வைத்திருந்து விசாரித்துக் கொண்டிருக்கும் தகவல் யாழ். பொலிஸாருக்குப் பறந்தது. அங்கு வந்த பொலிஸார் இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த இளைஞர் நெடுந்தீவு சிவில் பாதுகாப்புக் குழுவை அடையாளப்படுத்தும் அடையாள அட்டையை வைத்திருந்ததாகத் தெரிய வருகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் சமன் சிகேராவைத் தொடர்பு கொண்டு கேட்டபோது,
இந்தச் சம்பவம் குறித்து எமக்குக் கிடைத்த தகவலை அடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். குறித்த இருவரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பல்கலைக்கழக மாணவரிடமிருந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பின்னர் அவரை உடனேயே விடுவித்துள்ளோம்.
நெடுந்தீவு சிவில் பாதுகாப்புக் குழுவைச் சேர்ந்தவர் எனக் கருதப்படும் இளைஞரைக் கைது செய்துள்ளோம். இந்த இளைஞன் ஏன் இவ்வாறு செய்து கொண்டார் என்பது பற்றித் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்றார். சிவில் பாதுகாப்புக் குழு என்பது பொலிஸாரால் கிராமிய மட்டத்தில் அமைக்கப்பட்ட அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

12 ஜனவரி 2012

ஸ்ரீலங்காவை கைவிட்டது நியூயோர்க் ரைம்ஸ்!

அனைத்துலக ரீதியாக பிரபலம் வாய்ந்த ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ ஏடு வெளியிட்டுள்ள, 2012ம் ஆண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களின் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறவில்லை.
2012ம் அண்டில் சுற்றுலா செல்வதற்கான மிகச்சிறந்த 45 இடங்களை ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ கடந்த 6ம் நாள் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் இருந்த சிறிலங்கா நீக்கப்பட்டுள்ளது.
தங்காலை விடுதியொன்றில் கடந்த நத்தார் நாளன்று பிரித்தானிய சுற்றுலாப் பயணி சுட்டுக்கொல்லப்பட்டு அவரது நண்பியான ரஸ்யப் பெண் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே சிறிலங்கா இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவை தளமாக கொண்ட ‘National Geographic Traveler‘ என்ற சஞ்சிகை, 2012ம் ஆண்டின் சுற்றுலா செல்வதற்கு சிறந்த நாடுகளில் ஒன்றாக சிறிலங்காவையும் தெரிவு செய்திருந்தது.
அதேபோல பிரித்தானியாவின் ‘Condé Nast Traveller’ என்ற இதழ் 2012இல் சுற்றுலா செல்வதற்கு மிகச்சிறந்த 5 இடங்களில் ஒன்றாக சிறிலங்காவையும் தெரிவு பட்டியலிட்டிருந்தது.
ஆனால் நத்தார் நாளன்று நிகழ்ந்த சம்பவத்தினால், ‘நியுயோர்க் ரைம்ஸ்‘ வெளியிட்ட சுற்றுலா செல்வதற்கு உகந்த மிகச்சிறந்த 45 இடங்களில் பட்டியலில் சிறிலங்கா இடம்பெறமுடியாமல் போயுள்ளது.
இது சிறிலங்காவின் சுற்றுலாத்துறை அதிகாரிகளையும், சுற்றுலா விடுதித் துறையினரையும் பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கடந்த ஆண்டில் சிறிலங்காவுக்கு 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்திருந்தனர். 2016ம் ஆண்டில் சிறிலங்கா 25 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் கவரும் இலக்கை நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்பு எங்கு சென்றாலும் கடைசியில் எம்மிடம்தான் வரவேண்டும்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிநாடுகளுக்கு விஜயங்களை மேற்கொண்டு எந்தத் தரப்புடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு என்று வரும் போது இலங்கை அரசாங்கத்துடன் தான் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். இதுதான் யதார்த்தம். அரசுடன் கூட்டமைப்பு பேச்சு நடத்தினாலும் நடத்தா விட்டாலும் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் வழங்கும் என்று பதில் வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
தென்னாபிரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் அங்கு பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றமை குறித்து விபரிக்கையிலேயே பதில் வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அரசாங்கத்தை பொறுத்தவரை வடக்கு கிழக்கு மாகாண மக்களின் தேவை எதுவோ அதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
அப் பகுதிகளில் விரைவான அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படும். அத்துடன் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்குவதற்குரிய நடவடிக் கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
இதற்காக அனைத்துக் கட்சிகளும் உள்ளடங்கிய நாடாளுமன்ற தெரிவிற்குழுவை நியமித்து அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அரசியல் தீர்வு யோசனையை தயாரிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
எனினும் அரசியல் தீர்வில் இந்த அரசாங்கத்திற்கு அக்கறையில்லை என சர்வதேச அளவில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவிற்குழுவில் அங்கம் வகிப்பதற்கு முன்வரவில்லை.
எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளி நாடுகளுக்கு விஜயம் மேற் கொண்டு எந்த தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினாலும் தீர்வு என்று வரும் போது இலங்கை அரசுடன் தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென வெளிவிவகார பதில் அமைச்சர் நியோமல் தெரிவித்தார்.