தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவத்தினை பிஸ்ரல் முனையில் மிரட்டிய பிரஜைகள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீரங்கா தனக்கு சல்யூட் அடிக்குமாறு மிரட்டி சல்யூட் அடிக்கவைத்திருக்கின்றார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாந்தை கிழக்கு அம்பாள்புரம் பகுதியில் தேர்தல்ப் பரப்புரைக்காகச் சென்ற ஸ்ரீரங்காவின் குழுவினருக்கும், அமைச்சர் றிசாட் பதியுதீன் குழுவினருக்கும் இடையில் முறுகல் இடம்பெற்றுள்ளது.
அம்பாள்புரம் பகுதியில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ராஜன் என்பவரது விளம்பரப் பதாதை எழுதித் தொங்கவிடப்பட்டிருக்கின்றது. அந்த இடத்திற்குச் சென்ற ரங்கா குழுவினர் குறித்த பதாதையினைக் கிழித்தெறிந்திருக்கின்றனர். பதாதை கிழிக்கப்பட்ட பொழுது அங்கிருந்த பதாதைக்குச் சொந்தமான ராஜன் என்பவர் அதனைத் தடுத்து நிறுத்த முற்பட்டிருக்கின்றார். இதனை அடுத்து ரங்கா குழுவினருக்கும், றிசாட் குழுவினருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றிருக்கின்றது.
ராஜன் என்பர் அம்பாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால் ரங்கா குழுவினர் தாக்க முற்பட்டதை அடுத்து அங்கு மக்கள் திரண்டு ரங்கா குழுவினரைத் தாக்கியிருக்கின்றனர். ரங்கா குழுவினர் தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் சென்றிருந்த வாகனச் சாரதி அவர்களைக் கைவிட்டுவிட்டு வாகனத்தை எடுத்துக்கொண்டு ஓடியிருக்கின்றார். இதனை அடுத்து ரங்கா குழுவினர் மீதான தாக்குதல் உக்கிரமடைந்து அதில் அங்கம் பெற்றிருந்தவர்கள் மோசமாக தாக்குதலுக்கு உட்படிருக்கின்றனர்.
இந்தச் சம்பத்தின் தொடராக முன்னாள் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போது றிசாட் பதியுதீனின் சகாவுமான சதாசிவம் கனகரத்தினத்திற்கும் பிரஜைகள் முன்னணித் தலைவர் ஸ்ரீரங்காவிற்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. றிசாட் பதியுதீனின் சகோதரனும் சதாசிவம் கனகரத்தினமும் ஸ்ரீரங்காவுடன் முரண்பட்டிருக்கின்றனர். சம்பவத்தினை அடுத்து ஆத்திரமடைந்த ஸ்ரீரங்கா கனரத்தினத்திற்கு பிஸ்ரலைக் காட்டி சுட்டுப்போடுவேன் என்று மிரட்டியதுடன். தனக்கு சல்யூட் அடிக்குமாறும் அச்சுறுத்தியிருக்கின்றார். அதன் பின்னர் கனரத்தினம் ஸ்ரீரங்காவிற்கு சல்யூட் அடித்திருக்கின்றார்.
இதேவேளை இன்று காலை மாந்தை கிழக்கு மக்களைச் சந்தித்த ரங்கா குழுவினர் மக்களை தமக்கு வாக்களிக்காது விடின் கூட்டமைப்பிற்கு வாக்களிக்குமாறும் றிசாட் குழுவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கோரிக்கைவிடுத்ததாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக