தமிழ்த் தேசியப்பற்றாளர் கனகசபை சிவராசா அவர்கள் கடந்த 11.03.2011 அன்று இயற்கை எய்தினார். 1970களில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த தமிழ் இளைஞர் பேரவையின் செயற்பாட்டுடன் விடுதலைப் பயணத்தில் தன்னை இணைத்துக் கொண்ட அவர், அரசியல் ரீதியாக வெகுசனப் போராட்டங்களில் ஈடுபட்டதோடு, ஆயுதப் போராட்டங்களின் தொடக்க காலம் முதல் இறுதிவரை நெருக்கடியான வேளைகளில் எல்லாம் துணிந்து நின்று தோள் கொடுத்தார்.
கிராம சேவகர், வடக்கு மாகாண கிராம சேவையாளர் சங்கத்தின் தலைவர், திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தின் தலைவர் உட்பட்ட பொதுப் பணிகளில் அயராது உழைத்த சிவராஜா அவர்கள் இறக்கும் போது அவருக்கு வயது 68.
2002 ஆம் ஆண்டு தமிழர்விடுதலைக் கூட்டணி தேர்தல்ப் பரப்புரை நடவடிக்கையில் ஈடுபட்டு தீவகம் பகுதிக்குச் சென்றிருந்த வேளை அங்கு ஈபிடிபியினரால் நடத்தப்பட்ட கொலை வெறித் தாக்குதலில் முள்ளந்தண்டுப் பகுதியில் பலத்த தாக்குதலுக்கு ஆளானார். அதன் காரணமாக ஏற்பட்ட எலும்புப் புற்றுநோய்த் தாக்கத்தின் காரணமாகவே அவர் தற்போது உயிரிழந்தார். அதே சம்பவத்தில் இருவர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
போர் நெருக்கடிகாலத்தில் வன்னி மக்களுடனேயே வாழ்ந்திருந்த அவர் போரின் பின்னர் வவுனியாவில் உள்ள இராணுவத்தினரின் நலன்புரி வாழ்வினையும் அனுபவித்தே யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
கனகசபை சிவாராஜா அவர்களின் இறுதி நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் நடைபெற்றன.
திருநெல்வேலி இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் நடைபெற்ற இறுதி வணக்க நிகழ்விற்கு சூழலியலாளர் பொ.ஐங்கரநேசன் தலைமை தாங்கினார்.
நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஸ் பிறேமச்சந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வராசா கஜேந்திரன், சொலமன் சூ சிறில், பேராசிரியர் க. சண்முகதாஸ், வலம்புரி நாளிதழ் ஆசிரியர் விஜயசுந்தரம் உட்பட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு நினைவுரை ஆற்றினர்.
இறுதி நிகழ்விலும் இறுதி ஊர்வலத்திலும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக