
18 மாதங்களாக பெரும்பாலும் ஒவ்வொரு நாளும் இவரையும் இவரோடு சேர்த்த நான்கு பெண்களையும் இலங்கை இராணுவத்தினர் இழுத்துச் சென்று பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி வந்த பயங்கரமான அனுபவம் தொடர்பாக சொன்னவை தாம் அவை.
ஓக்ஸ்போர்ட்டில் நேற்று உளநல மருத்துவரால் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த யுவதி தனது இரண்டரை வருட கால மௌனத்திற்குப் பின்னர் நேற்று முதன் முறையாக வாய்திறந்து இவற்றைச் சொன்னார்.
அகதி அந்தஸ்து தொடர்பான வழக்குகளில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக நான் ஈடுபட்டு வருகிறேன். அகதி அந்தஸ்து பெறுவதற்காக சொல்லப்படுகிற ஏராளம் பொய்கள், நடத்தப்படுகிற நாடகங்கள் குறித்து நானறிவேன்.
ஆனால் இந்தப் பெண்ணுடைய சாட்சியம் அவ்வாறான ஒன்றல்ல. இது அவருடைய நேரடி அனுபவமாக அவர் பட்ட துன்பமாக இருந்தது. அவருக்கேற்பட்ட இந்த நிலைமையைக் கேட்ட போது ஒரு புறத்தில் எனக்குக் கடும் கோபமாகவும் அதே நேரத்தில் ஆச்சரியமாகவும் இருந்தது. ஆச்சரியம் ஏனென்றால் அரசாங்கமும் ஜெனரல் சரத்பொன்சோகாவும் கொழும்பின் பிரதான ஊடகங்களும் போரின் இறுதிக்காலகட்டத்தில் எத்தகைய மனிதப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை என்று இன்றும் கூறி வருவது தான்.
ஒழுக்கங்கெட்ட படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கொடூரமான காட்டுமிராண்டித்தனமான மனிதாபிமானத்துக்கு முரணான நடவடிக்கை காரணமாக அந்த யுவதிக்கு இப்போது இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.
நேற்றைய எனது இந்த அனுபவம் எனக்கு 1996இல் வடக்கில் நடந்த அந்நச் சம்பவத்தை ஞாபகமூட்டியது. க.பொ.த உயர்தர வகுப்பு பரீட்சை முடித்து வந்த 18 வயதான கிரிசாந்தி குமாரசாமி என்ற பாடசாலை மாணவி தடுப்புக்காவலரணில் வைத்து 11 படையினரால் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதும், அவரைத் தேடிச் சென்ற தாயாரும் கூட பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டதும், பின் இருவரும் கொல்லப்பட்டதும் இவர்களைத் தேடிச் சென்ற சகோதரரும் அயலவரும் படுகொலை செய்யப்பட்டதும் நடந்தது.
கண்டதுண்டமாக வெட்டப்பட்டு புதைக்கப்பட்டிருந்த அவர்களது சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு மிகவும் அழுகிய நிலையில் கொழும்புக்கு மருத்துவ பரிசோதனைக்காக எடுத்து வரப்பட்ட போது காலமான குமார் பொன்னம்பலமும் நானும் தான் அச்சடலங்கைப் பார்வையிட முதன் முதலில் சென்றிருந்தோம்.
அங்கு அந்தச் சடலங்கைப் படம் பிடிக்க எமக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதிலிருந்து வெளிவந்த துர்நாற்றம் சகித்துக் கொள்ள முடியாததாக இருந்தது. கண்டதுண்டமாக வெட்டப்பட்ட சதைத் துண்டங்களாக தோல் உரிக்கப்பட்டு அவிக்கப்பட்ட கோழி இறைச்சித் துண்டங்களாக தரப்பாளினால் சுற்றப்பட்டவையாக அது இருந்தது.
ஒவ்வொரு உடலின் கழுத்திலும் நீல நிற நைலோன் கயிறுகளால் இறுக்கி முடிச்சுப் போடப்பட்டிருந்தன. பின்னர் அந்த உடல்கள் அரசாங்கச் செலவிலேயே எரியூட்டப்பட்டன.
ஒரு பெண்ணான ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவின் ஆட்சியின் சிறப்பு அது. சர்வதேச மன்னிப்புச் சபையின் அழுத்தம் காரணமாகவும், ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவம் காரணமாகவும் சம்பந்தப்பட்ட படையினர் மீது பாலியல் வன்புணர்வு மற்றும் படுகொலைக் குற்றம்சாட்டப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் அதில் உள்ள துயரம் என்னவென்றால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதனூடாக தண்டனையிலிருந்து விலக்களிக்கப்பட்டனர்.
அந்தப் பெண்ணின் அந்தரங்க உறுப்புக்களில் பீடிக்கட்டையால் சுடப்பட்ட தழும்புகளை நான் கண்டேன். அவர் எனது முன்னிலையிலேயே மயங்கி விழுந்தார். அவருடைய முழங்காலில் காயம் ஏற்பட்டது. அவர் அந்த உளநல மருத்துவரின் காலில் விழுந்து கெஞ்சினாள் தன்னை அந்த அறையில் தனியே விட்டுச் செல்ல வேண்டாம் என்று, அவள் அப்போதும் பயந்தாள் தான் வெளியே போனால் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்படுவேன் என்று.
அந்தப் பெண் உளநல மருத்துவர் தன்னைத் தொடுவதற்குக் கூட அப்பெண் அனுமதிக்கவில்லை. அவ்வளவுக்கு அவள் அஞ்சினாள். அவள் என்னுடன் பேசுவதற்குக் கூட அஞ்சினாள். ஆனால் அதற்குள்ளும் அவள் என்னை இவ்வாறு கேட்டுக் கொண்டாள். 'இவை எவற்றையும் எனது சகோதரிக்குச் சொல்லி விடாதீர்கள். சொல்ல மாட்டீர்கள் தானே?'
அந்த இரண்டு மணித்தியால விசாரணையின் போது என்ன நடந்தது என்பது முழுவதையும் இங்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. அவளுடைய ஆறா ரணகாயம் கொதித்தது.
அந்தக் குழந்தை சந்தோசமாகவும் நலத்துடனும் இருந்தது. அதற்குக் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அக்குழந்தை பெண்குழந்தையாக இருந்தது ஒரு விதத்தில் நல்லது. இல்லாவிட்டால் தாயாரால் அதனைத் தன்னுடன் சேர்த்துக் கொள்ள முடியாதிருந்திருக்கும். அது ஒரு ஆண்குழந்தையாக இருந்திருந்தால் பாலியல் வன்புணர்வக்கு உள்ளாக்கியவர்களை அது ஞாபகமூட்டிக் கொண்டே இருந்திருக்கும் என்றார் அந்த உளநல மருத்துவர்.
கொரியப்பெண்களைப் போல நாங்கள் மௌனமாக அழுந்தியபடி காத்தருக்க வேண்டும் போல் இருக்கிறது. அவர்களுக்கு இழைத்த அநீதியை ஏற்று மன்னிப்புக் கேட்க அறுபது ஆண்டுகள் ஆகியது ஜப்பானுக்கு.
தற்போதைய கற்றறிந்த பாடங்களுக்கான ஆணைக்குழு வெறும் ஒரு கண்துடைப்பே. ஐநாவோ போர்க்குற்றம் தொடர்பில் சீரிய கவனம் செலுத்துவதாகத் தெரியவில்லை.
போர்க்குற்றம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். அல்லாவிடில் நாங்கள் மனிதர்களே அல்ல.
நன்றி: பேர்ள் தேவநாயகம், சிறிலங்கா கார்டியன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக