11 மார்ச் 2011

குற்றத்திலிருந்து அரசியல்வாதிகள் தப்பிக்க முடியாது!

நீதிக்கு முன்னால் எல்லோரும் சமன் அதில் அரசியல்வாதிகள் மட்டும் தப்பிக்க முடியாது என பாலித கோகன்னா தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போது அவுஸ்திரேலியா பிரதமர் யூலியா ஹிலாட் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அவுஸ்திரேலியா அரசு அனைத்துலக குற்றவியல் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஆதரவுகளை வழங்கும் என அவுஸ்திரேலியா பிரதமர் ஹிலாட் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனுடன் சென்ற ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதில் தரும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளையும், தமிழ் மக்களையும் வெள்ளைக்கொடியுடன் சரணடையுமாறு தெரிவித்த ஐ.நாவுக்கான சிறீலங்கா பிரதிநிதி பாலித கோகன்னா அவர்களின் படுகொலைக்கு மறைமுகாக ஆதரவு வழங்கியதாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு தாக்கல் செய்யும் நடவடிக்கைகளை புலம்பெயர் தமிழ் சமூகம் மேற்கொண்டு வருகின்றது.
கோகன்னா அவுஸ்திரேலியா குடியுரிமை கொண்டவர் என்பதால் இது தொடர்பில் ஹிலாட் இடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எனக்கு இந்த வழக்கு தொடர்பில் தனிப்பட்ட முறையில் அதிக விபரங்கள் தெரியாது. ஆனால் நாம் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளுக்கு முழு ஆதரவுகளை தருவோம்.
சட்டம் எல்லோருக்கும் ஒன்று தான். அதில் அரசியல் தலைவர்கள் கருத்துக்கூறமுடியாது. சட்ட நடவடிக்கைகளில் நாம் தலையிடவும் முடியாது என ஹிலாட் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாலிதா கோகன்னா மீது அவுஸ்திரேலியா அரசு விசாரணைகளை ஆரம்பிக்கவேண்டும் என அவுஸ்திரேலியாவின் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் மோர்பி அண்மையில் தெரிவித்திருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக