28 மார்ச் 2011

பத்து வயது சகோதரி மீது படைகள் வல்லுறவு புரிந்தது!

தனது சகோதரி 10 வயதாக இருக்கும்போது இராணுவத்தினாலும் ஆயுதக் குழுவொன்றினாலும் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதால் இன்று மனநிலை பாதிக்கப்பட்டு வாழ்வதாகவும் தனது சகோதரன் 1990 இல் க.பொ.த. உயர்தரம் படிக்கும்போது கொலக்கொட்டி எனும் இராணுவப்படையால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், இன்றுவரை அவர் பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லையெனவும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனை பாண்டிருப்பைச் சேர்ந்த ரெட்ணம் பூங்கோதை என்பவர் தெரிவித்தார். இந்த ஆணைக்குழுவின் இறுதி அமர்வு அதன் தலைவர் சீ.ஆர்.டீ.சில்வா தலைமையில் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றபோது அதில் சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து சாட்சியமளிக்கையில்; 2007 ஆம் ஆண்டு இப்பகுதியில் இயங்கி வந்த ஆயுதக்குழுவொன்று நான் கடமை புரியும் வைத்தியசாலையில் வைத்து பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் பார்த்துக் கொண்டிருக்கும்போது எனது கண்களைக் கட்டி வெள்ளை வானில் கொண்டு சென்றது. அதன் பின் நான் சிறையில் வைக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலைபெற்று வந்தேன். எனது வீடு கடல்கோளால் சேதமடைந்து அதன் பின்னர் எனக்குக் கிடைத்த வீட்டில் ஆயுதக்குழு உறுப்பினர் ஒருவர் பலவந்தமாகக் குடியேறினார். அதனைத் தட்டிக் கேட்டதற்காக என்னைக் கடத்திச் சென்றதுடன், எனது வீட்டிலிருந்த ஐந்து இலட்சம் ரூபா பணத்தையும் நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். எனது உடலில் ஆணியேற்றி சித்திரவதை செய்ததுடன், பாலியல் சேஷ்டைகளும் புரிந்தனர். எனக்கு சிறுநீர் பருகத்தந்தார்கள். நான் ஒரு இருதய நோயாளி, தற்போது எனது தங்கையை பொலிஸார் கடத்தியுள்ளார்கள். அவர் எங்கு இருக்கின்றார் என்று தெரியாது. எதிர்காலத்தில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கின்றது. நான் ஒரு தாதிய உத்தியோகத்தர். எனவே, எனது வேலையை மீண்டும் பெற்றுக்கொள்ளவும் எனது தங்கையைத் தேடித்தரவும் ஆணைக்குழு உதவ வேண்டுமெனக் கண்ணீர்மல்க வேண்டினார். சேனைக்குடியிருப்பைச் சேர்ந்த சாமித்தம்பி நல்லம்மா இங்கு சாட்சியமளிக்கையில்; எனது மகன் சண்முகம் பாலகணேஷ் 10 ஆம் வகுப்புப் படிக்கும்போது 1990 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டார். அவர் பற்றி இதுவரை எதுவித தகவலும் இல்லை. எங்கோ ஒரு முகாமில் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களாம். அங்கு அவர் உள்ளாரா எனக் கண்டு பிடித்துத் தருமாறு தள்ளாடிய வயதில் மனம் உருகிக் கேட்டார். இதனை அவதானித்த ஆணைக்குழு உறுப்பினர் திருமதி மனோ இராமநாதன்,அம்மூதாட்டியை அழைத்து சிறு பண உதவியை வழங்கியதுடன்,மகனைக் கண்டுபிடிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்தார். தம்பிலுவிலைச் சேர்ந்த பத்மினி கனகேந்திரம் சாட்சியமளிக்கையில்; 2009.05.10 ஆம் திகதி எனது கணவர் அக்கரைப்பற்றிலிருந்து பஸ்ஸில் கொழும்புக்குச் செல்லும் வழியில் சியம்பலாண்டுவ வடினாகலை என்ற இடத்தில் வைத்து ஆயுதம் தரித்த சீருடை அணிந்த பொலிஸினால் கைதுசெய்யப்பட்டார். இத்தகவலை பஸ்ஸின் சாரதி, நடத்துனர் ஆகியோர் எமக்குத் தெரிவித்தனர். இதுவரை அவர் தொடர்பான தகவல்கள் ஏதுமில்லை. 2010 பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி காலை 10.45 மணியளவில் களுத்துறையிலிருந்து பொலிஸ் உயரதிகாரியொருவர் கதைப்பதாகவும் கணவரை விடுதலை செய்ய இரண்டு இலட்சம் ரூபா பணம் வேண்டுமென்றும் தாங்கள் தேசிய குற்றத்தடுப்புப் பிரிவினர் என்றும் கூறினார்கள். பணம் தராவிட்டால் பல சிக்கல்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் கூறினார்கள். எனக்கு 6 வயதுப் பிள்ளையொன்று உள்ளது. இதுபற்றி திருக்கோவில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தோம். மூன்று தடவை வந்து விசாரணை மேற்கொண்டு சென்றார்கள். இதுவரை எதுவித தகவலும் கிடைக்கவில்லையென்றார். திருக்கோவிலைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை அருளம்மா சாட்சியமளிக்கையில்; எனது மகன் ரவீந்திரன் அரியதாஸன் (21 வயது) 1996 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 16 ஆம் திகதி தலைமுடி வெட்டுவதற்கென வீட்டை விட்டு வெளியே சென்றார். இன்றுவரை வீடு திரும்பவில்லை. விசேட அதிரடிப்படை முகாம்கள்,பொலிஸ் நிலையங்கள் என்பனவற்றிலும் விடுதலைப்புலிகளின் பழுகாமம்,கொக்கட்டிச்சோலை, கிளிநொச்சி போன்ற இடங்களிலிருந்த முகாம்களிலும் விசாரித்தேன். இதுவரை எந்தத் தகவலும் இல்லை. மகனை நினைத்து நினைத்து எனது கணவர் நோயாளியாகிவிட்டார் என்றார். சாய்ந்தமருதைச் சேர்ந்த ஏ.அப்துல் மஜீட் சாட்சியமளிக்கையில்; எனது மகன் ஏ.எம்.றயிசுடீன் என்பவர் சாய்ந்தமருதில் வெல்டிங் கடையொன்று நடத்தி வந்தார். 2008 ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி வெள்ளை வானில் வந்தவர்களினால் வேலைத்தளத்தில் வைத்துக் கடத்திச் செல்லப்பட்டார். இவரைக் கடத்தும்போது அருகில் விசேட அதிரடிப்படையினர் இருந்தனர். இவரை கருணா குழு,விசேட அதிரடிப்படை முகாம்,பொலிஸ் நிலையங்கள், விடுதலைப்புலிகள் முகாம்கள் எனப் பல இடங்களிலும் தேடினோம். இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றார். தம்பிலுவிலைச் சேர்ந்த சங்கரப்பிள்ளை சபாபதி சாட்சியமளிக்கையில்; எனது மகன் சிறுவயதிலிருந்தே எம்மைவிட்டுச் சென்றிருந்தார். பின்னர் அவர் விடுதலைப்புலிகளிடம் ஒருவருடப் பயிற்சி பெற்று அங்கு புகைப்படப்பிடிப்பாளராகச் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து விலகி யாழ்ப்பாண யுவதியொருவரைத் திருமணம் முடித்து வன்னியில் வாழ்ந்து வந்தார். 2009.05.17 ஆம் திகதி முல்லைத்தீவில் வைத்து இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டார். இதுவரை அவர் தொடர்பாக எந்தவிதத் தகவலும் இல்லை. அவருக்கு ஐந்து பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர் பற்றிய தகவலை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக