19 மார்ச் 2011

ஜெனீவாவில் திணறுகிறது ஸ்ரீலங்கா!

ஜெனீவாவில் தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரிலும், அரசசார்பற்ற நிறுவனங்களின் கூட்டங்களிலும் சிறீலங்கா தொடர்பான நிலை தொடர்ந்து ஆராயப்பட்டு வருகின்றது.
சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள், அங்கு காணாமல்போனவர்கள், ஊடகசுதந்திரம், படுகொலைகள் தொடர்பில் பெருமளவான அரசசார்பற்ற நிறுவனங்கள் கவனம் செலுத்தி வருகின்றன.
சிறீலங்காவில் இருந்து வருகை தந்துள்ள மனித உரிமை செயற்பாட்டாளர்களான திருமதி நிமல்கா பெர்ணான்டோ, திருமதி சுனிலா அபயசேகரா, திரு பாக்கியசோதி சரணவமுத்து, மறைந்த ஊடகவியலாளர் பிரகீத் எக்நலிகொடவின் மனைவி சந்தியா எக்நலிகொட ஆகியோhருடன் கத்தோலிக்க அமைப்பான “பக்ஸ் றோமலின்” அமைப்பின் பிரதிநிதி திரு பேதுரு ஜெகதாசன், தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் திரு கிருபாகரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள், மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் பேசிய ஹங்கோரியின் பிரதிநிதி சிறீலங்கா தொடர்பில் பல கேள்விகளை எழுப்பியிருந்தார். ஆனால் அதற்கு பல தவறான தகவல்களுடன் ஜெனீவாவுக்கான சிறீலங்கா பிரதிநிதி ஹெனுகா செனிவரத்தினா பதில் அளித்திருந்தார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் மேலும் ஒருவாரம் நடைபெறவுள்ளபோதும், சிறீலங்கா தொடர்பான விடயங்கள் ஆராயப்படும் சாத்தியங்கள் குறைவாகவே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே, சிறீலங்காவை பொறுத்தவரை அங்கு நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு என்பன தற்போது செயலிழந்துள்ளதாக ஐ.நாவின் மண்டபத்தில் நடைபெற்ற அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் கூட்டத்தொடரில் பேசிய பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் திரு கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றின் செயற்பாடுகள் சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்திடம் சென்றுள்ளதகவும், அவை தொடர்பிலான தீர்மானங்களை சிறீலங்கா பாதுகாப்புச் செயலாளரும், சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் சகோதரருமான கோத்தபாயா ராஜபக்சாவே மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக