27 மார்ச் 2011

காணி,காவல்துறை எமக்கு வேண்டும்.

காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாக ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வட மாகாணத்தில் காவல்துறை அதிகாரங்களையும், காணி மற்றும் வன வள அதிகாரங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தக் கோரிக்கைகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் முன்வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 13ம் திருத்தச் சட்ட மூலத்தில் இந்த விடயங்கள் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ளதாக கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அதிகாரப் பகிர்வின் போது காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் பகிரப்பட வேண்டியது மிகவும் அவசியமானதென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பில் முதல் தடவையாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் நலத் திட்டங்கள் குறித்தே கடந்த கால சந்திப்புக்களின் போது கலந்துரையாடப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். உடல் நலக்குறைவினால் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 4ம் திகதி நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதுவரையில் தீர்வுத் திட்ட யோசனைகளை முன்வைக்கவில்லை என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அண்மையில் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக