17 மார்ச் 2011

டக்ளஷை புகழ்ந்து பாடிய சாந்தனும் சுகுமாரும்!

விடுதலைப்புலிகளினால் முன்னெடுக்கப்பட்ட தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பம் முதல் அதன் இறுதிக்காலம் வரை தேசிய எழுச்சிப் பாடகர்களாக செயலாற்றிய சாந்தன், சுகுமார் ஆகியோர் பாடிய ‘தேவாவின் கானங்கள்’ இறுவட்டு வெளியீட்டு நிகழ்வு நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் தொடக்கம் பெற்றது முதல் அதன் இறுதிக்காலம் வரையில் பலநூற்றுக் கணக்கான பாடல்களைப் பாடியிருந்த தாயகத்தின் முன்னணிப் பாடகர்களான சாந்தன், சுகுமார் ஆகியோர் பிரதானமாகப் பாடிய பாடல்களை உள்ளடக்கியதாக ஈ.பி.டி.பி.யினரின் இறுவட்டு வெளிவந்திருக்கின்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இறுவட்டினை வெளியிட்டுவைத்ததுடன், பாடகர்கள் சாந்தன், சுகுமார் உட்பட்டவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விருதுகளையும் வழங்கியிருக்கின்றார்.
வன்னிப் போர் தீவிரம் பெற்றிருந்த 2009 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாடகர் சுகுமார் அம்பலவன் பொக்கணை கிராமம் ஊடாக இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்தினைச் சென்று சேர்ந்து படையினரிடம் சரணடைந்திருந்தார். ஆனாலும் அவர் தடுப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கவில்லை.
பாடகர் சாந்தன் 2009ம் ஆண்டு மேமாதம் 18ம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு இராணுவத்தினரின் தடுப்பு முகாமில் இருந்து கடந்த ஆண்டு இறுதிப் பகுதியிலேயே விடுவிக்கப்பட்டிருந்தார்.
தேசியத்தலைவர் அவர்களையும், கரும்புலிகளையும், மாவீரர்களையும் பாடியவர்கள் இன்று தமிழின அழிப்பில் பெரிதும் துணைநின்ற சிங்கள அரசில் அமைச்சராகவுள்ள டக்ளஸ் தேவானந்தாவைப் புகழ்ந்து பாடியிருப்பது தமிழ் மக்கள் மிகுந்த வருத்தத்தினைத் தோற்றுவித்திருக்கின்றது என்றார் இசைக்கலைஞர் ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக