27 மார்ச் 2011

கே.பியை தேடுகிறது சர்வதேச காவல்துறை!

சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் பெயர் இன்னமும் நீக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மான் ஆகியோர் தேடப்பட்டு வருவோரின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அவர்களது பெயர்கள் சர்வதேச தேடப்பட்டு வரும் குற்றவாளிகளின் பெயர்ப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவு காணப்பட்ட போதிலும் குமரன் பத்மநாதன் தேடப்பட்டு வரும் ஓர் குற்றவாளியாகவே சர்வதேச அரங்களில் நீடிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. குமரன் பத்மநாதனின் அண்மைய புகைப்படங்களை இன்டர்போல் அண்மையில் வெளியிட்டுள்ளதாகவும், இதன் மூலம் குமரன் பத்மநாதனை கைது செய்வதில் இன்டர்போல் காட்டும் தீவிரம் வெளிப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. இன்டர் போல் காவல்துறையினர் இலங்கையைச் சேர்ந்த 81 பேரை தேடி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் 52 பேர் அரசாங்கத்தின் கோரிக்கைக்கு இணங்க தேடப்பட்டு வருவதாகவும் ஏனையவர்கள் வேறும் நாடுகளின் கோரிக்கைகளுக்கு அமைய தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தேடப்பட்டு வருவோரில் 30 பேர் பயங்கரவாதிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இன்டர்போலினால் தேடப்பட்டு வரும் இலங்கையர்களில் ஐந்து பெண்களும் அடங்குவதாகவும் இதில் செலிங்கோ குழும நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான சிசிலி கொத்தலாவலவும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக