23 மார்ச் 2011

ஐ.நாவைக் கண்டித்த தமிழீழ அரசின் பிரதிநிதி.

இன்று லிபியா விடயத்தில் காட்டிய அவசரத்தினை அன்று தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை வெளிக்காட்டவில்லை என ஐ.நா. மனித உரிமைகள் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா குற்றஞ்சாட்டினார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 16வது கூட்டத் தொடரில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளான சுகிந்தன் முருகையா, ஜனார்த்தனன் புலேந்திரன்(சந்தோஸ்), சிறிசஜீதா சிவராஜா ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.
22 மார்ச் 2011 - செவ்வாய்கிழமை இடம்பெற்ற பொது நிலவரங்களுக்கான பிரிவில், தமிழர் பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா ஆற்றிய உரையில், ஆயதப்போர்கள் இடம்பெறும் சூழல்களில் பெரும் இனப்படுகொலைகள் இடம்பெறும் வாய்ப்புக்கள் உள்ளது பற்றி, சர்வதேச சமூகம் விழிப்புடன் இருத்தல் வேண்டும் எனப் பல ஆண்டுகளுக்கு முன்பே, முன்னாள் ஐநா பொதுச்செயலாளர் கொபி அனான் ஆலோசனை கூறியிருந்த போதும், பல்வேறு ஆயதப் போர்ச்சூழல்களில் பொதுமக்கள் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலைமை, கவனிப்பாக கையாளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இலங்கைத் தீவில் இடம்பெற்ற போரினை, அதற்கான உதாரணமாக முன்வைத்த சிறிசஜீதா சிவராஜா அவர்கள், தொடர்ந்து தனதுரையில், தமிழர் தாயகப் பகுதியில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மையங்கள், தாக்கி அழிக்கப்பட்டு 100000 மேற்பட்ட மக்கள் போரின் இறுதி வாரத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்படுகின்றது. 40000 மக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று ஐநா அதிகாரிகளே சொல்லியிருந்த போதும், ஐநா அமைதி காத்துள்ளது.
இன்று செயலாளர் நாயகத்தின் சிறப்புக் குழு போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்று கூறுகின்றது என்றும், நேரிடையான முறையில் ஐநாவின் அன்றைய செயலற்றதன்மையை தமிழ் பிரதிநிதி எடுத்துரைத்தார்.
இன்று தமிழ்மக்களின் நிலைமை போர்க்காலத்திலும் பார்க்க மோசமாகவுள்ளது என்பதை சுட்டிக்காட்டிய தமிழர் பிரதிநிதி, சிங்கள அரசு, உலகம் முழுவதும் பயணம் செய்து, புலம்பெயர்ந்த தமிழ்சமூகத்தினை குற்றஞ்சாட்டுவதிலும், அவர்களது சனநாயக நடவடிக்கைகளை கொச்சைப்படுத்துவதிலும், கவனம் செலுத்துகின்றது என்றும் நாடுகடந்த அரசு பிரதிநிதி சிறிசஜீதா சிவராஜா சுட்டிக்காட்டினார்;. உலகசமூகம், தமிழ்மக்களிற்கு உதவிடும் என நம்பிக்கையை வெளியிட்ட தமிழர் பிரதிநிதி, ஐநாவின் இனத்துவேசத்திற்கு எதிரான சிறப்புப்பிரதிநிதியும் சிறீலங்காவின் நடவடிக்கைகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோளை விடுத்தார்.
இறுதியாக, உலக நாடுகள், புலம்பெயர் தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடல்களை நிகழ்த்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். கடந்தாண்டு 15வது மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் பங்கெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக