12 மார்ச் 2011

விஜய் நம்பியாரை காப்பாற்ற ஐ,நா,முயல்வதாக குற்றச்சாட்டு!

சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் இருந்து ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியாரை காப்பாற்றுவதற்கு ஐக்கிய நாடுகள் சபை முயன்று வருவதாக ஐ.நாவின் ஊடக அமைப்பான இன்னசிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறீலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களில் தொடர்புகள் உள்ளதாக ஐ.நாவுக்கான சிறீலங்கா பிரதிநிதி பாலித கோகன்னா மற்றும் ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதம அதிகாரி விஜய் நம்பியார் மீது நெதர்லாந்தை தளமாகக் கொண்ட அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்ட தகவல்களில், விஜய் நம்பியாரின் தகவலை ஐ.நா பேச்சாளர் பர்ஹான் ஹக் மறுத்துள்ளார்.
இன்னசிற்றி பிரஸ் இன் தகவல் தவறானது என அவர் தெரிவித்துள்ளார்.
வன்னியில் போர் உக்கிரமாக நடைபெற்றபோது ஐ.நாவின் நியூயோர்க் அலுவலகத்தில் அமைக்கப்பட்ட 24 மணிநேர நடவடிக்கை பிரிவில் பணியாற்றிய விஜய் நம்பியாருடன், பிரித்தானியாவை தளமாகக் கொண்ட த ரைம்ஸ் பத்திரிகையின் ஊடகவியலாளர் கொல்வின் தொடர்புகொண்டபோது, வெள்ளைக்கொடிகளுடன் சரணடைபவர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என தனக்கு சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா, கோத்தபாயா ராஜபக்சா மற்றும் பாலித கோகன்னா ஆகியோர் உறுதி வழங்கியதாக நம்பியார் தெரிவித்திருந்தார்.
ஆனால் ஐ.நாவின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், அவர்கள் நம்பியரை காப்பாற்ற முயல்வதாக பிறிதொரு ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய தூதுவரான நம்பியாரை பான் கீ மூன் ஏன் சிறீலங்காவுக்கு அனுப்பினார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. ராஜீவ் காந்தியின் மரணம், மற்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இந்தியா செயற்பட்டுவருவது என்பன தெரிந்த நிலையில் நம்பியாரை அங்கு அனுப்பியது பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
மகிந்தாவின் படை நடவடிக்கையை பாராட்டிய இந்திய இராணுவ ஜெனரல் சற்றீஸ் நம்பியாரின் சகோதரரே விஜய் நம்பியார் என்பதையும் ஐ.நா புறக்கணித்துள்ளது.
இது நம்பியாரின் தவறல்ல, பான் கீ மூன் அவரை அங்கு அனுப்பியிருக்க கூடாது என ஐ.நாவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த தறவு ஐ.நாவின் நன்மதிப்பையும், பான் கீ மூனின் நிர்வாகத்தையும் கெடுத்துவிட்டதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.
எனினும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் தனிப்பட்ட குழுவினரால் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பாலித கோகன்னாவின் பெயர் உள்ளதுடன், விஜய் நம்பியாரின் பெயரும் இரு பந்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாக அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக