10 மார்ச் 2011

ஸ்ரீலங்காவிற்கு பிரித்தானியா கொடுத்த அடி!

ஸ்ரீலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதியை அவுஸ்ரேலியாவுக்கும், பாலித கொஹன்னவை பிரித்தானியாவுக்கும் தூதுவர்களாக நியமிக்க ஸ்ரீலங்கா அரசு முன்மொழிந்த போதும் அதை இந்த நாடுகள் நிராகரித்துள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் திசார சமரசிங்கவை அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராகவும், தற்போது ஐ.நாவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக உள்ள பாலித கொஹன்னவை பிரித்தானியாவுக்கான தூதுவராகவும் நியமிக்க ஸ்ரீலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
இவர்களின் நியமனங்கள் தொடர்பான முன்மொழிவை இந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு ஸ்ரீலங்கா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் பிரித்தானியாவும், அவுஸ்ரேலியாவும் ஸ்ரீலங்கா அரசு முன்மொழிந்த பாலித கொஹன்னவையும், அட்மிரல் திசார சமரசிங்கவையும் தூதுவர்களாக ஏற்க மறுத்துள்ளன.
இறுதிப் போரின் போது சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் அளிப்பதாக ஸ்ரீலங்கா அரசின் சார்பில் வாக்குறுதி கொடுத்திருந்தார் பாலித கொஹன்ன. அவருக்கு எதிராக அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இறுதிப்போரின் போது ஸ்ரீலங்கா கடற்படையின் நடவடிக்கைத் தளபதியாக இருந்து பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களுக்கு பொறுப்பாக இருந்தவர் என்ற வகையில் அட்மிரல் திசார சமரசிங்க மீதும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் உள்ளன.
இவரை அவுஸ்ரேலியாவுக்கான தூதுவராக ஏற்கக் கூடாது என்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்திலும் குரல் எழுப்பப்பட்டிருந்தது.
ஸ்ரீலங்கா அரசாங்கம் முன்மொழிந்த தூதுவர்களை ஏற்க பிரித்தானியாவும் அவுஸ்ரேலியாவும் மறுத்துள்ளதால் வேறு புதியவர்களை முன்மொழிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேவேளை முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவை தூதுவராக ஏற்றுக் கொள்வதற்கு ஜப்பானிய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. முன்னதாக இவரை பிரித்தானியாவுக்கான தூதுவராக நியமிக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.
ஆனால் இறுதிப்போரின் போது ஸ்ரீலங்கா கடற்படைக்குத் தலைமை தாங்கிய அவரை- போர்க்குற்றங்களில் தொடர்புபட்டவர் என்பதால் தூதுவராக ஏற்க பிரித்தானியா மறுத்து விட்டது. இந்தநிலையிலேயே அவர் ஜப்பானுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக