26 மார்ச் 2011

வதை முகாமிலிருந்து இளைஞர் யுவதிகளை மீட்க மக்கள் குரல் கொடுக்க வேண்டும்.

கிளிநொச்சி பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானை சேர்ந்தவரான ஆசீர்வாதம் நியூஸ்டன்(வயது27) என்பவா் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினா் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு வவுனியா நெளுக்குளம் தொழினுட்பக் கல்லூரி புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு என்ற பெயரில் அடைக்கப்பட்டிருந்தார்.இவா் 21-03-2011 அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஊடகங்களுடாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறே வெலிக்கந்தை புனா்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் இளைஞா்களில் ஒருவா் 22-03-2011 இல் இறந்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு மரணங்களும் சந்தேகத்திற்குரிய விதமாகவே இடம்பெற்றுள்ளது.
புனர்வாழ்வு என்ற பெயரில் அடைத்து வைக்கப்பட்டுள்ள இளைஞா் யுவதிகள் மிக மோசமான உடல் உளரீதியான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருவதாகவும் கடந்த 21 மாதங்களாக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றதென்றும் பலருக்கு வெளி உலகுடன் எவ்வித தொடா்புகளும் இல்லையெனவும் அறிகின்றோம். சா்வதேச சட்ட வரையறைகளை மோசமாக மீறுகின்ற அடிப்படையிலேயே இவை நடைபெறுகின்றன.
இறந்த இளைஞா்கள் இருவரும் முகாம்களில் இடம்பெறும் சித்திரவதைகளில் இருந்து தப்பிக் கொள்ளுவதற்காக தாங்களாகவே தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும் அல்லது அங்கு இடம்பெறும் சித்திரவதைகளால் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டுமென்ற முடிவுக்கே நாம் வரவேண்டியுள்ளது.
இவ்வாறனதொரு சூழ்நிலையிலேயே அனைத்து தமிழ் இளைஞா்கள் யுவதிகளும் உள்ளனா்.
சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறும் வகையில் ஸ்ரீலங்கா அரசு மேற்கொள்ளும் இச் செயற்பாடுகளை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.
இணக்க அரசியல் என்ற போர்வையில் அரசுக்கு ஒத்துழைப்பதன் மூலம் இக் கொடுமைகள் மூடி மறைக்கப்படுமாயின் தான் மேற்கொள்ளும் கொடுமைகளை நிறுத்த வேண்டிய எந்தத் தேவையும் அரசுக்கு ஏற்படாது என்பதனை எமது மக்களுக்கு நாம் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவா்கள் சித்திரவதைகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டுமாயின் நாம் இதனை கடுமையாக எதிர்க்க வேண்டும்.
இன்று பல நாடுகளில் அரசுகளால் மேற்கொள்ளப்படும் பொது மக்கள் மீதான ஐனநாயக அடக்கு முறைகளுக்கு எதிராக அந்தந்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்போது அப்போராட்டங்களை அரசுகள் வன்முறைகளை கையாண்டு நசுக்குவதனை அனுமதிக்க சா்வதேச சமூகம் இன்று தயாராக இல்லை என்பதனை தமிழ்த் தேசம் உணர வேண்டும்.
நன்றி
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
skajendren@yahoo.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக