சிறீலங்கா அமைச்சர் மகிந்தா சமரசிங்காவினால் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட தரவுகள் தவறானவை. அவரின் தரவுகளை ஒப்பிடும்போது பலர் காணாமல்போயுள்ளனர். இது மிகவும் முக்கியமான விடயம்.
எனவே அமைச்சரின் தகவல்களை சரிபார்த்து, இந்த மக்களுக்கு என்ன நடைபெற்றது என்பதை காணாமல்போனவர்களுக்கான ஐ.நாவின் அமைப்பு அறியமுற்படவேண்டும் என பிரான்ஸ் நாட்டை தளமாகக் கொண்ட தமிழர் மனிதர் உரிமைகள் மையத்தின் பொதுச்செயலாளர் திரு சி. கிருபாகரன் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எமது அமைப்பு 1990 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதில் இருந்து நாம், சிறீலங்காவில் இடமபெற்றுவரும் மனித உரிமை மீறல்களை அறிக்கைகளாக சமர்ப்பித்து வருகின்றோம்.
2009 ஆம் ஆண்டு வடக்கில் பெருமெடுப்பிலான படை நடவடிக்கையை மேற்கொண்டு சிறீலங்கா அரசு போரில் வெற்றியீட்டிய பின்னரும், அங்கு இயல்புநிலை தோன்றவில்லை.
வடக்கு – கிழக்கில் வாழும் இடம்பெயர்ந்த மக்களின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. 70,000 தமிழ் மக்கள் தற்போதும் வதை முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் உள்ள மக்கள் மீதான சிறீலங்கா அரசின் நடவடிக்கை அனைத்துலக விதிகளை மீறும் செயலாகும்.
காணாமல்போதலும், படுகொலைகளும், கடத்தல்களும் வன்முறைகளும் சிறீலங்காவில் தொடர்கின்றன. பெருமெடுப்பில் சிங்களமயப்படுத்தல்களும் நிகழ்கின்றன.
சிறீலங்கா அமைச்சர் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் தடுப்புக்காவலில் இருந்த 739 பேர் காணாமல்போயுள்ளனர். இது மிகவும் முக்கியமான விடயம். எனவே இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல்போனவர்கள் தொடர்பான அமைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும்.
ஐ.நாவின் தகவல்களின் அடிப்படையில், சிறிய சிறீலங்கா என்ற தீவில், ஜனநாயகவழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக தெரிவித்துவரும் சிறீலங்கா அரசுகளின் ஆட்சியில் பெருமளவான மக்கள் காணாமல்போயுள்ளனர்.
சில தகவல்களை நான் இங்கு தருகிறேன். இந்த தகவல்களில் 1995 ஆம் ஆண்டு சிறீலங்கா இராணுவத்தினர் யாழ்குடாநாட்டை கைப்பற்றிய பின்னர் காணாமல்போன 600 பேர் உள்ளடக்கப்படவில்லை.
1997 ஆம் ஆண்டு சிறீலங்கா அரச தலைவர் ஆணைக்குழு மேற்கொண்ட விசாரணைகளில் 12,000 தமிழ் மக்கள் காணாமல்போனதற்கான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மட்டக்களப்பில் 7,000 தமிழ் மக்கள் காணாமல்போனதாக மட்டக்களப்பு பொதுமக்கள் சபை 1991 ஆம் ஆண்டு தெரிவித்திருந்தது.
சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா பதவியேற்ற பின்னர் 5,000 தொடக்கம் 6,000 பேர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் உள்ளடக்கப்படவில்லை. இறுதிப்போரில் 40,000 தொடக்கம் 60,000 மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறீலங்காவில் ஊடக சுதந்திரமும் முற்றாக மழுங்கடிக்கப்பட்டுள்ளது. அங்கு பல ஊடகவிலயாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான அழுத்தங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 16 ஆவது மாநாட்டில் கலந்துகொள்பவர்கள் ஏற்படுத்தவேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் விரைவாக முன்வைக்கப்பட வேண்டும். சிறீலங்காவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு அது அவசியமானது என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கம்: ஈழம் ஈ நியூஸ்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக