29 மார்ச் 2011

அந்தக்காட்சிகளால் நான் அதிர்ந்து போனேன்!

நான் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளேன். அந்தக் காட்சிகள் நம்ப முடியாதனவையாக இருந்தன. மைல் கணக்கில் நிலங்கள் தரை மட்டமாக்கப்பட்டிருந்தன. வீடுகள் ஷெல் தாக்குதலில் தரைமட்டமாகி இருந்தன. மரங்களின் மேற்பகுதிகள் எரிந்து போயிருந்தன என மாங்குளத்திற்கு விஜயம் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான இயன் பொத்தம் தெரிவித்துள்ளார். மாங்குளத்தில் விளையாட்டுத் திடல் ஒன்றை அமைப்பது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக கொழும்பிலிருந்து 300 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள மாங்குளத்திற்கு ஞாயிறன்று விஜயம் செய்த இயன் பொத்தம் அது தொடர்பாக செய்தியாளர்களுக்கு விளக்குகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தனது விஜயம் பற்றிக் குறிப்பிடுகையில், அங்கு பெரும் நிலப்பரப்பு ஒன்று எவ்வாறு தரைமட்டமாகிக் கிடக்கிறது என்பதைக் கண்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன் எல்லாமே தரை மட்டமாகக் கிடந்தன. அது ஒரு வெற்றுக்காடு போலக் காட்சியளித்தது என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரான அவர் தெரிவித்தார். போரில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கான பாடசாலைகள் அமைப்பது, ஆங்கிலம் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை அவர்களுக்கு வழங்குவது, முதியோர் இல்லம் அமைப்பது, போரால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது வாழ்க்கையைப் புனரமைக்க அடுத்து இரண்டு வருடங்களுக்கு உதவுவது என பல திட்டங்களை இலங்கையின் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரனின் அறக்கட்டளை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ளது. இதில் இணைந்து கொண்டே இயன் பொத்தமும் மைக்கேல் வஹனும் மாங்குளம் சென்றிருந்தனர். அங்கு முன்னாள் சிறுவர் போராளிகளுடன் கிரிக்கெட் விளையாட்டிலும் இவர்கள் ஈடுபட்டனர். மாங்குளம் பாடசாலைக்குச் சென்ற இவர்கள் இருவரும் உணவு, நுளம்புவலைகள், ரோச் லைற்றுகள், மற்றும் சமையல் உபகரணங்களை வழங்கினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக