31 மே 2011

ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப்பிடித்து தள்ளியது யார்?

உலகத் தமிழினத்தின் அன்புக்கும், மதிப்புக்கும் உரியவரும், எழுபத்தி எட்டு வயதிலும் அவரது இரு மொழித்திறமையால் தனது ஆழ்ந்த கருத்துக்களை எம்மினத்துக்காக சர்வதேசத்தின் முன் எடுத்துச்செல்ல என்றுமே தயங்காத ஈழவேந்தன் ஐயாவை, தமிழீழத் தேசியத் துக்கநாளான மே 18 ம் நாள்,.......கனடா மக்கள் அவையினரால் ரொறான்ரோ மாநகரில் நடாத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில், மக்களவையைச் (NCCT) சார்ந்தவர்கள் அவரது கழுத்தில்ப் பிடித்துத் தள்ளியதாக ஈழவேந்தன் ஜயா வேதனையுடன் கூறினார்.
மேடை அருகே நின்ற புதிய மக்களாட்சித் (NDP) தலைவர் ஜாக் லேயிற்றனையும் ராதிகாவையும் சந்தித்து வாழ்த்துத் தெரிவிக்க சென்றவேளை ஈழவேந்தன் ஐயாவின் கழுத்தைப் பிடித்துத் தள்ளியது தமிழினத்தை அவமதித்தது மட்டுமல்ல மானிடத்தையே மதிக்காத ஓர் செயலாகும்.
அதைப் பார்த்தவர்கள் அனுதாபத்துடனான அக்கறையுடன் அவருக்கு வருத்தத்தோடான ஆறுதலை வழங்கியபோது மக்களவையைச் சார்ந்த முக்கியமானவர்கள் பார்த்தும் பாராமுகம் காட்டியது தனக்கு வேதனை தருவதாகவும் கனடாத் தமிழரின் மூத்த அரசியல்வாதியான ஈழவேந்தன் ஐயா கும்பிட்டார்.
நேரில் கண்ட பலர் தொலைபேசிமூலம் தன்னை அழைத்து ஆறுதல் கூறியதாகவும், சாட்சி சொல்வதற்கு தாம் எப்பவும் வரத்தயார் எனவும், மக்களவையினர் செயலுக்கு தாம் மன்னிப்பு கேட்பதாகவும் அவர்கள் கூறியது கண்டு தான் பெருமையடைந்ததாகவும் தேசியத்தலைவரால் பரப்புரைக்காக தேசியப் பட்டியலில், நாடு நாடாக பரப்புரை செய்ய, நியமித்த ஈழவேந்தன் ஐயா குறிப்பிட்டார்.
பெரியார் கூற்றின்படி தன்மானம் இழந்தும் தமிழ்மானம் காக்க தான் உறுதி கொண்டுள்ளதகவும் இந்தியாவில் இருந்து இரண்டு தடவைகள், பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவேளையிலும், ஈழத் தமிழருக்குப் பரப்புரை செய்ததற்காக அங்கிருந்து நாடுகடத்தப்பட்ட அந்த நாவின் வல்லவன் கூறினார்.
இன்றுவரை, மக்களவை நிர்வாகம் மௌனம் சாதிப்பது அவர்களுடைய கொள்கையை, அவர்களின் மனப்போகை திட்டவட்டமாகக் எடுத்துக் கூறுவதாகவே அமைகிறது. இந்தக் கொடிய நிகழ்வு கனடாத் தமிழருக்கு மட்டுமல்ல உலகத் தமிழருக்கும் வேதனையும், வெட்கமுமான ஓர் விடயமாகும்.
அவரை இம்சைப்படுத்தி, அவமானப்படுத்தியவர்களின் வயதை விட ஈழவேந்தன் ஐயாவின் ஈழத்தமிழ்ர்களின் விடிவுக்கான போராட்ட்தின் இடைவிடாத பங்களிப்பின் வயதோ பலமடங்கு. ஈழவேந்தன் ஐயா ஒரு பகுதிநேர ஈழப் போராளி அல்ல, தந்தை செல்வா காலம்தொட்டு இன்றுவரை தொடர்ந்து முழுநேரப் போராளியாக செயற்பட்டு வரும் ஈழத்தாயின் ஓர் இணையற்ற புதல்வன்.
இந்தத் தண்டனையைப்பெற அவர் செய்த குற்றம்தான் என்ன? தன் மொழிக்கும், தனது இனத்தின் விடுதலைக்கும் ஏறக்குறைய 60 வருடகாலமாக அயராது உழைத்தது, உழைப்பது தவறா? அல்லது தேசியத் தலைவரின் கொள்கைக்கு அமைய இறைமையும் சுதந்திரமும் கொண்ட தமிழீழத்தை அமைக்க, தேசியத் தலைவரின் இலட்சியப் பாதையில் ஈழவேந்தன் ஐயா பயணிப்பது தப்பா? அவரின் கழுத்தைப் பிடித்து தள்ளியவர்களே சொல்லுங்கள்.
இந்த நிகழ்வு கனடா வாழ் தமிழருக்கு இழிவாக அமைந்தாலும், ஈழவேந்தன் ஐயாவுக்கு இது ஓர் பெருமைப்பட வேண்டிய விடயமாகும். தன் இனத்திற்காக இலங்கையில் சிங்களவனிடமும் கனடாவில் மக்களவையினரிடமும் (NCCT) அடிவாங்கிய ஒரே ஒரு மறத்தமிழனும், பாராளுமன்ற உறுப்பினரும் இவரே. தள்ளாத வயதிலும் தனியொருவனாக போரிட்டு தப்பிவந்த உங்கள் வீரத்தை, தீரத்தைக் கண்டு உலகத் தமிழினமே உன்னைச் சிரம்தாழ்த்தி வணங்குதய்யா.
ஈழவேந்தன் ஐயாவின் ஆழ்ந்த அரசியல் அனுபவத்தை எண்ணாது, 78 வயதிலும் காலை 8 மணிக்கே தமிழருக்கான பணியை ஆரம்பிக்கும் அவர் செயலை உணராது, அன்னாரின் அறிவை, ஆற்றலை, அனுபவத்தை மதிக்காது மக்களவையினர் செய்த மனிதாபிமானமற்ற செயலை உலகெலாம் வாழும் ஈழத் தமிழர் சார்பில் நாடுகடந்த தமிழீழ அரசின் கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு வன்மையாகக் கண்டிக்கிறது.
எமது பண்பாட்டுக்கு முரணான, எங்கள் கலாச்சாரத்துக்கு எதிரான, எம் பழக்க வழக்கத்துக்கு மாறான இச்செயல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல், இவர்கள் எம் மக்களின் சீற்றத்துக்கு ஆளாவதை யாராலும் தடுக்கமுடியாது.
கலாநிதி ராம் சிவலிங்கம்
கல்வி, கலாச்சார, உடல்நல அமைச்சு
நாடுகடந்த தமிழீழ அரசு
r.sivalingam@tgte.org

ஐ.நாவின் சட்ட திட்டங்களை மீறிப்பேசுகிறார் நவநீதம்பிள்ளை"ஸ்ரீலங்கா எச்சரிக்கை.

ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை ஐ.நாவின் சட்டதிட்டங்களை மீறும் வகையில் நடந்து கொள்வதாக சிறிலங்கா குற்றம்சாட்டியுள்ளது.ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டியது அவசியம் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஆரம்ப உரையாற்றிய போது நவநீதம்பிள்ளை வலியுறுத்தியிருந்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கையை நியாயப்படுத்தும் முயற்சிகளில் நவநீதம்பிள்ளை ஈடுபட்டுள்ளதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் வதிவிடப் பிரதிநிதி சேனுகா செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
“அதிகாரபூர்வமற்ற நிபுணர் குழு அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு நவநீதம்பிள்ளை கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
உறுதிப்படுத்தப்படாத தரவுகளின் அடிப்படையில் நிபுணர் குழு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு கருத்துக்களை வெளியிடுவது ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளரின் தொழில்சார் தன்மையை பாதிக்கும்.
உள்நாட்டு விசாரணைகள் பூர்த்தியாகாத நிலையில், அந்த விசாரணைகளில் திருப்தியில்லை என்று நவநீதம்பிள்ளை முன்கூட்டியே கருத்து வெளியிட்டுள்ளார்.
நவநீதம்பிள்ளையின் விமர்சனப் பாங்கான இந்த நடவடிக்கை சிறிலங்காவுடனான ஐ.நாவின் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக் கூடும்.“ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அனைத்துலக விசாரணைக்கு நாம் பூரண ஆதரவு வழங்குவோம்.

சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், அதற்கு ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு முழுமையான ஆதரவுகளை வழங்கும் எனவும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி நவநீதம்பிள்ளை அவர்கள் தெரிவித்துள்ளார்.
நேற்று (30) ஆரம்பமாகிய அதன் 17 ஆவது கூட்டத்தொடரில் பேசும்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கைக்கு நாம் முழுமையான ஆதரவுகளை வழங்குவோம். சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற நிபுணர் குழுவின் பரிந்துரைக்கும் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது முழுமையான ஆதரவுகளை வழங்கும்.
தற்போது எமக்கு கிடைத்துள்ள புதிய ஆதராங்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்வது முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதேசயம், பிள்ளையின் கருத்தை தான் வலுவாக ஆதரிப்பதாக ஐ.நாவின் நீதிக்குப்புறம்பான படுகொலைகள் விவகாரப் பிரதிநிதி கிறிஸ்தோப் கெயின்ஸ் தெரிவித்துள்ளார்.
எனினும், அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்படுவதை சீனா, பாகிஸ்தான், கியூபா ஆகிய நாடுகள் எதிர்த்துள்ளன.
இதனிடையே, அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கைகளை விடுத்துவரும் ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வரிசையில் தற்போது அயர்லாந்தும் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 மே 2011

ஸ்ரீலங்கா புரிந்த படுகொலை காணொளி உண்மையென நிரூபணம்.

ஜெனீவாவில் இன்று (30) ஆரம்பமாகிய .ஐ. நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் சிறீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் விவகாரமே முதலில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
சிறீலங்கா இராணுவத்தினரால் தமிழ் கைதிகள் படுகொலை செய்யப்படும் காணொளி காட்சியுடன் ஆரம்பமாகிய ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மூன்று வார கூட்டத்தொடர் அங்கு பல வாதப்பிரதி வாதங்களை தோற்றுவித்துள்ளது.
சிறீலங்கா படையினரின் இந்த படுகொலைக் காணொளி உண்மையானது என்பதை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சமர்ப்பித்து உரையாற்றிய ஐ.நாவின் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் விவகாரத்திற்கான பிரதிநிதி பேராசிரியர் கிறிஸ்ரோப் ஹெயின்ஸ் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஐந்து நிமிடங்கள் பதிவு செய்யப்பட்ட அந்த காணொளி உண்மையானது என தெரிவித்துள்ள அவர், சிறீலங்கா அரசின் பொய் பிரச்சாரங்களை முறியடித்துள்ளார்.
காணொளி உண்மையானது என்பதை சுயாதீன நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்தாக தெரிவித்துள்ள ஹெயின்ஸ், சிறீலங்காவில் வன்முறைகள் எவ்வளவு உக்கிரமாக நடந்துள்ளன என்பதை இது எடுத்துக்காட்டுவதாகவும், இது ஒரு அப்பட்டமான போர்க்குற்றம் எனவும் தெரிவித்துள்ளார்.
காணொளி போலியானது, அதனை ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நிகழ்ச்சி நிரலில் இணைக்க முடியாது என சிறீலங்காவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நாடுகள் போட்ட கூச்சலை தென்ஆபிரிக்காவின் சட்டத்துறை பேராசிரியரான ஹெயின்ஸ் இன்று முறியடித்துள்ளார்.
மனித உரிமைகள் சபையில் அவர் ஆற்றிய உரையின் இறுதியில் காணொளி உண்மையானது என்பதை தெளிவுபடுத்தியதுடன், சிறீலங்காவின் வன்முறைகளையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் நவநீதம் பிள்ளை அவர்கள், தமக்கு புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், 2009 ஆம் ஆண்டு சிறீலங்கா அரசுக்கு ஆதரவாக கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை மறுஆய்வு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிள்ளையின் கருத்தை வலுவாக ஆதரித்த அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தமது கருத்துக்களையும் தெரிவித்திருந்தன.
சிறீலங்காவில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு சமர்பித்துள்ள பரிந்துரைகளை சபை ஆய்வு செய்யவேண்டும் என அமெரிக்கத் தூதுவர் எயிலீன் சம்பர்லின் டொனகோ தனது உரையில் தெரிவித்துள்ளார்.
போரில் வன்முறைகளை யார் மேற்கொண்டது என்பது இங்கு முக்கியமல்ல, அங்கு மேற்கொள்ளப்பட்ட வன்செயல்கள் தொடர்பில் அனைத்துலக தரத்திலான விசாரணைகள் அவசியம் என்பதே முக்கியமானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், சிறீலங்கா விவகாரத்தை மீண்டும் ஆய்வு செய்வதற்கு ஆபிரிக்க மற்றும் அரபு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சிறீலங்காவின் அமைதி முயற்சிக்கு அனைத்துலக சமூகம் ஆதரவுகளை வழங்கவேண்டும் என பாகிஸ்தான் தூதுவது சமீர் அக்ரம் தெரிவித்துள்ளார். அரபு நாடுகள் சார்பாக பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை சரிபார்க்கப்பட்ட தகவல்களை கொண்டது அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவிற்கு எதிராக அமெரிக்கா செயற்பட வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை.

சில சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இலங்கைக்கு எதிராக செயற்படுமாறு அமெரிக்காவை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெனீவாவில் இன்றைய தினம் ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டுமென அந்த அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
சர்வதேச அனர்த்த குழு,மனித உரிமை கண்காணிப்பகம்,சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட 11 சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இவ்வாறு இலங்கைக்கு எதிராக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக செயற்பட வேண்டுமென அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரனிடம் குறித்த மனித உரிமை அமைப்புக்கள் எழுத்து மூலம் கோரியுள்ளன.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை இந்த அமைப்புக்கள் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
நிபுணர் குழு அறிக்கையை ஏற்றுக்கொள்ளல், நம்பகரமான விசாரணைகள் நடத்தப்படுவதனை உறுதி செய்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு தராதரம் பார்க்காது தண்டனை வழங்குதல், சுயாதீனமானதும், பக்கச்சார்பற்றதுமான முறையில் விசாரணை நடத்துதல், நிபுணர் குழு அறிக்கையின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்தல் ஆகிய கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமை அமைப்புக்கள் கோரியுள்ளன.
சர்ச்சைக்குரிய நிபுணர் குழு அறிக்கைக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் பிரித்தானிய புலம்பெயர் தமிழர்கள் ஐரோப்பிய ஒன்றிய நாடொன்றில் எதிர்வரும் ஜூன் மாதம் கூட்டமொன்றை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

நிபுணர் குழு அறிக்கை நடைமுறைக்கு வரவேண்டும்.

இலங்கையின் கடப்பாடு பற்றிய ஐநா செயலாளர் நாயகத்தின் நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து சில விடயங்களைப் பேச அனுமதியுங்கள். என ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆiணாயாளர் நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 17 ஆவது அமர்வு இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் தனது ஆரம்ப அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச படைகளாலும் விடுதலைப் புலிகளாலும் போரின் இறுதிக்கட்டத்தில் சர்வதேச மனித உரிமைச் சட்டங்களுக்கு எதிராக பாரிய அளவில் இழைக்கப்பட்ட வன்முறைகள் குறித்த நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணையை நடத்தவேண்டிய கடப்பாடு அரசுக்கு உண்டு. அத்தோடு இந்த நிபுணர்குழு மேற்கொண்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கோரிக்கையுமாகும்.
இலங்கை தொடர்பான தனது முன்னைய அக்கறையின் வெளிச்சத்தில் இந்த முக்கியமான அறிக்கையிலுள்ள புதிய தகவல்கள் குறித்து மனித உரிமைக் கவுன்ஸில் தனது எதிர்விளைவை வெளிப்படுத்துவது முக்கியம் என நான் கருதுகிறேன். எனவும் வலியுறுத்தி உள்ளார்.

ஈழத்தமிழர் விவாதத்தில் கலந்து கொள்ள வைக்கோ பெல்ஜியம் செல்கிறார்.

ஈழத் தமிழர் இனப்படுகொலை குறித்து விவாதிக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பெல்ஜியத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ம.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டு அமைப்பு, ஈழத் தமிழர் இனப் படுகொலை குறித்து விவாதிக்க ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து உள்ளது. இந்தக் கூட்டம், பெல்ஜியம் நாட்டின் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஜூன் 1ம் தேதி நடக்கிறது.
இந்த கூட்டத்தில் ஈழத் தமிழர்கள் சார்பில் கலந்து கொண்டு உரையாற்றுமாறு வைகோவிற்கு ஐரோப்பிய நாடாளு மன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்பாளருமான பால்மர்பி அழைப்பு விடுத்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் துயர் துடைக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை குறித்து இந்தக் கூட்டம் முடிவெடுக்க உள்ளது.
இதில் கலந்து கொள்வதற்காக வைகோ இன்று அதிகாலை 1 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரஸ்ஸல்ஸ் நகருக்குப் புறப்பட்டு சென்றார் வைகோ என்று கூறப்பட்டுள்ளது.

29 மே 2011

இலங்கையின் செயற்பாடுகள் சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு வழிகோலும்.

குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதியான நியாயமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் தவறுமானால், இது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றின் விசாரணைக்கு வழிகோலும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. இவ்வாறு ரொய்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய அரசாங்கத்தினதும் மேற்குலக நாடுகளினதும் அழுத்தங்களின் காரணமாக இலங்கை அரசாங்கமானது யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் ஊடாக ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. எந்தவொரு நீதித்துறைசார் அதிகாரங்களையும் கொண்டிராத அரசாங்க அதிகாரிகளுக்கு பரிந்துரை மட்டும் வழங்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, யுத்தக் குற்றச்சாட்டுகள் உள்ளடங்கலாக இலங்கைக்குள் இடம்பெற்றுள்ள முக்கிய மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆய்வொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளது.
தேங்கிக் கிடக்கும் முக்கிய குற்றச்சாட்டு கள் தொடர்பான முறைப்பாடுகளை அலசி ஆராய்வதற்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழுவொன்றை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம். நியமிக்கப்படவுள்ள இக்குழுவானது நாட்டின் சகல பாகங்களிலும் இடம்பெற்றுள்ள மிகவும் முக்கியமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆராயும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரியந்த பெரேரா ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்நாட்டு போர் முடிபடைந்த 2009-ம் ஆண்டில், இலங்கைப் படைகளால் பல ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மீறல்களை நிரூபிக்கத்தக்க வகையில் நம்பகமான ஆய்வொன்றை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என அமெரிக்காவின் தலைமையின் கீழ் மேற்குலக நாடுகள் அழுத்தம் கொடுத்துள்ளன. இவை தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் செய்யப்பட்ட பொய்யான பரப்புரைகள் எனக் குற்றம் சாட்டியுள்ள அரசாங்கம், ஐ.நாவின் வல்லுநர் குழுவால் முன்வைக்கப்பட்டுள்ள யுத்தக் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக் கூறியுள்ளது. அத்துடன் இலங்கைப் படைகள் பொதுமக்களை குறிவைத்துத் தாக்குதல்களை மேற்கொண்டன என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளது.
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு நீதியான நியாயமான இணக்கப்பாட்டை ஏற்படுத்த அரசாங்கம் தவறுமானால், இது அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு வழிகோலும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள ஐ.நா. பாதுகாப்பு சபைக்கூட்டத்தில் இலங்கைக்கு சீனாவும், ரஷ்யாவும் ஆதரவு வழங்குவதற்கு சாத்தியபாடுகள் மிகக் குறைந்ததாகக் காணப்படுவதாக பெரும்பாலான இராஜதந்திரிகள் எதிர்வு கூறுகின்றனர்.

சீனா,ரஷ்யா ஆகிய நாடுகளின் ஆதரவு கோரி நிற்கும் புலம்பெயர் தமிழர்கள்.

ஸ்ரீலங்கா அரசின் இனக்கொலைக்கு எதிராக புலம்பெயர் தமிழர்கள் சீனா மற்றும் ரஸ்யா ஆகிய நாடுகளின் ஓத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட வேண்டுமென சீனாவிடமும், ரஸ்யாவிடமும் உதவி கோரப்படவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைகள் தொடர்பில் சீன மற்றும் ரஸ்ய அதிகாரிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளதாக இராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்திற்கு கொழும்பை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடம் புலம்பெயர் தமிழர்கள் ஆதரவு கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் உற்பத்திகளை சர்வதேச ரீதியில் விற்பனை செய்ய முடியாத வகையில் தடுப்பதற்கும் சில புலம்பெயர் தமிழர்கள் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை மற்றும் பாதுகாப்புப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு இந்தியாவையும், சீனாவையும் இலங்கை அதிகமாக நம்பியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இனக்கொலை காணொளி ஐ.நா.மனித உரிமை கூட்டத்தொடரில் காண்பிக்கப்படுகிறது.

சரணடைந்த தமிழ் மக்களை சிறீலங்கா இராணுவத்தினர் கோரமாக படுகொலைசெய்யும் காட்சிகள் அடங்கிய காணொளி நாளை (30) ஆரம்பமாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் காண்பிக்கப்படவுள்ளதாக ஐ.நா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதி கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் இந்த காணொளியை அதன் உண்மைத்தன்மை தொடர்பில் நிபுணர்கள் ஆராய்ந்து சமர்ப்பித்த ஆதரங்களுடன் நாளை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 17 ஆவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கவுள்ளார்.
2010 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிக்குப் புறம்பான படுகொலைகள் தொடர்பில் ஐ.நாவின் சிறப்பு பிரதிநிதியாக கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் நியமனம் பெற்ற பின்னர் அவர் சமர்ப்பிக்கும் முதலாவது ஆவணம் இதுவாகும்.
இந்த காணொளிகளை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியிருந்தது.
கிறிஸ்ரோஃப் ஹெயின்ஸ் கடந்த வருடம் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டபோதும், சிறீலங்கா அரசு அதற்கான அனுமதிகளை வழங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

28 மே 2011

ஆனை விழுந்தான் பகுதியில் மனித மண்டையோடு மீட்பு!

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் ஆனை விழுந்தான் 10ஆம் குறுக்குத் தெருவில் மனித மண்டையோடொன்று நேற்று மு.ப. 11 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த மண்டையோட்டுக்கு அருகில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் போராளிகளுக்கு வழங்கப்படும் இரண்டு இலக்கத் தகடுகளும் காணப்பட்டன.
வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் 10ஆம் குறுக்குத் தெருவில் அமைந்துள்ள அணைக்கு அண்மித்த பகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் போது அணையுடன் அமைந்திருந்த கைவிடப்பட்ட காவலரண் முன்பாக மேற்குறித்த மனித மண்டையோடு மீட்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு நேரடியாக விஜயம் செய்த கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிவான் பொ. சிவகுமார், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி எஸ்.சிவரூபன், அக்கராயன் காவற்துறையினர் ஆகியோரின் முன்னிலையிலேயே விசாரணை இடம்பெற்றது.
மனித மண்டையோட்டுடன் மீட்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளினால் போராளிகளுக்கு வழங்கப்படும் 'த.வி.பு ஐ 7176' என்ற தகடு இரண்டும் காணப்பட்டது. அத்துடன் ரவைக்கூடு தாங்கி (ஜக்கற்) மீட்கப்பட்டது.
அதிலிருந்து வெடிக்காத நிலையில் இரண்டு கைக்குண்டுகளும், மகசின் இரண்டும், துப்பாக்கிரவைகள் சில, சிறிய ஒயில் குப்பியொன்றும், பற்தூரிகை, ரோச், பற்றரி சார்ஜர் என்பனவும் மீட்கப்பட்டன.
இடுப்பின் கீழ் பகுதிகள் மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்தன. பின்னர் இராணுவத்தினரால் அது இழுத்து எடுக்கப்பட்டது. இதன்போது ஜீன்ஸிலிருந்து மேலும் சில எலும்புகள் மீட்கப்பட்டன. அத்துடன் இவற்றுக்கருகில் வீழ்ந்து வெடித்த நிலையில் புதையுண்டிருந்த ஆர்.பி.ஜி.யின் எஞ்சிய பாகங்களும் மீட்கப்பட்டன. யுத்தத்தின் போது ஆர்.பி.ஜி. தாக்கு தலில் கொல்லப்பட்ட புலி உறுப்பினருடையதாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. இந்தப் பிரசேதத்தில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப் பிடத்தக்கது.

தளபதி பதுமனை தொடர்ந்து காவலில் வைக்குமாறு ஸ்ரீலங்கா நீதிமன்று உத்தரவு.

விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட முன்னாள் கட்டளைத் தளபதி பதுமன் மீது திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. பதுமன் என்று அழைக்கப்பட்ட சிவசுப்பிரமணியம் வரதநாதனை தீவிரவாத விசாரணைப் பிரிவு காவல்துறையினர் நேற்று திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி தபகேந்திரன் முன்னிலையில் நிறுத்தியிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்டக் கட்டளைத் தளபதியாக இருந்த இவர், சிறிலங்கா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், படையினரை கொன்றதாகவும், குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவருக்கு எதிராக 1979ம் ஆண்டின் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் 48வது இலக்கத்தின் விதிமுறையின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இதையடுத்து புலிகளின் முன்னாள் தளபதி பதுமனை ஜுலை 26ம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

27 மே 2011

கே.பி.ஊடாக மேற்கொள்ளப்படும் சதி முயற்சிகளை முறியடிப்போம்.-தமிழீழ விடுதலைப்புலிகள்.

2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/04/11
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
27/05/ 2011.
கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன் ஊடாக சிங்கள அரசு மேற்கொள்ளும் சதிமுயற்சிகளை முறியடிப்போம்.
2009 மே மாதம் 18 ஆம் நாளிலிருந்து எமது ஆயுதப்போராட்டம் மெளனிக்கப்பட்டுள்ளதாக அறிவித்த நிலையில், எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தை நாம் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வருகின்றோம்.
எமது சுதந்திர விடுதலைப் போராட்ட வரலாற்றில் அதியுச்ச தியாகங்களை எமது போராளிகள் செய்திருக்கிறார்கள். காலத்துக்குக் காலம் எமது அமைப்பின் போராட்ட முறைகளை மாற்றியமைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்து வந்திருக்கின்றோம்.
கரந்தடிப் படை நடவடிக்கையில் தொடங்கி எதிரியால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரும் படை நடவடிக்கைகள் பலவற்றை எதிர்த்தும், எதிரியின் படைத்தளங்களைத் தகர்த்தும், எமது நிலப்பகுதிகளை மீட்டெடுத்து, ஒரு நாட்டுக்குரிய முழுமையான நிர்வாக மற்றும் படைக்கட்டமைப்புக்களை நிலைநிறுத்தி, தனிச்சுதந்திர தேசத்துக்கான கட்டுமானங்களை உருவாக்கி மக்களின் சுதந்திர வாழ்வுக்கு உறுதிப்படுத்தப்பட்ட அரசொன்றை நடாத்தி வந்தோம்.
எமது விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை உலகம் புரிந்துகொள்ளாமல் எம்மைப் பயங்கரவாதிகளாகச் சித்தரித்ததாலும், இராஜதந்திர சூழ்ச்சிகளாலும், பெரும்பலத்தோடு நடத்தப்பட்ட பன்னாட்டுப் போர்நெறிகளை மீறிய கொடூர போரினாலும் நாம் ஆயுதப் போராட்டத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளோம். எனினும், எமது மக்களின் தேசிய ஒருமைப்பாட்டுணர்வையும், தமிழீழ விடுதலை மீது கொண்ட அசைக்க முடியாத பற்றுதலையும், எமது மாவீரர்களின் தியாகத்தின் வழிகாட்டுதலையும் துணையாகக் கொண்டு நாம் எமது போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை உணர்ந்து செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம்.
ஐ.நா நிபுணர்குழுவால் வெளியிடப்பட்ட அறிக்கையிலும், வேறுபல நடுநிலையாளர்கள் வெளிப்படுத்திய ஆவணங்களிலும் சிங்கள அரசு தமிழர்மீது மேற்கொண்ட இனப்படுகொலை தொடர்பான உண்மைகள் மெல்லமெல்ல வெளிவந்துகொண்டிருக்கும் இக்காலத்தில் மகிந்த அரசு செய்வதறியாது திணறிக்கொண்டிருக்கின்றது.
இதேவேளை, தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சிங்கள தேசத்தைக் கிலி கொள்ள வைத்துள்ளது. ஈழத்தமிழர் மேல் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலை தொடர்பான எதிர்ப்புணர்வும், ஈழத்தமிழரின் அரசியல் உரிமையை வென்றெடுப்பதற்கான ஆதரவும் தமிழகத்திற் பெருகிவரும் நிலையில் செல்வி ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் தமிழக முதலமைச்சராக ஆட்சிப் பொறுப்பேற்றதைத் தனக்குப் பாதகமாவே நோக்குகின்றது சிங்களப் பேரினவாத அரசு.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையும் தமிழகத் தேர்தல் முடிவும் மகிந்த அரசுக்கு மிகப்பெரும் ஆபத்தாகவே முடியுமென்று உணர்ந்துகொண்ட சிங்கள அரசியல் ஆலோசகர்களின் மதிநுட்பமான சதித்திட்டமிடலில் முன்னிறுத்தப்படுவரே கே.பி என்ற திரு செல்வராசா பத்மநாதன். இந்தியத் துணைக்கண்டத்தில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கெதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சக நோக்கோடு கே.பி ஊடாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை வெளியிட்டுவருகிறது சிறிலங்கா அரசு.
சிறிலங்கா அரசபடைகளின் பிடியிலுள்ள எவருமே விடுதலைப் புலிகள் அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்திச் செயற்பட முடியாது. இதுவரை காலமும் அவ்வாறு நடந்ததில்லை; இனியும் நடக்கப்போவதுமில்லை. அவ்வகையில் திரு. செல்வராசா பத்மநாதனும் தன்னை விடுதலைப் புலிகளின் உறுப்பினராக அடையாளப்படுத்துவதும், தான்தான் எஞ்சியிருக்கும் மூத்த போராளியென்று சொல்லிக்கொள்வதும், எமது அமைப்பின் சார்பில் பேசுவதும் தவறானது. அவர் எதிரியின் பிடிக்குட் சிக்கிய நாளிலிருந்து அவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் சார்பில் கருத்துச் சொல்லும் தகுதியை இழந்துள்ளார். அதன் பின்னரான அவரது செயற்பாடுகள், கருத்துக்கள் எவையுமே தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினது அல்ல என்பதைத் தெளிவுபடுத்துகின்றோம். எமது மக்களின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நாசகாரத் திட்டங்களுக்கு கே.பி அவர்கள் துணைபோகின்றார் என்பதையே அவரின் நடவடிக்கைகள் வெளிக்காட்டுகின்றன.
திரு. செல்வராசா பத்மநாதன் தொலைக்காட்சி நிறுவனமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தற்போதைய தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களைக் கொலைசெய்வதற்கு விடுதலைப்புலிகள் திட்டமிட்டார்கள் என்ற அவதூறை வெளிப்படுத்தியிருக்கிறார். இது அபாண்டமான பொய்க்குற்றச்சாட்டு. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் எமக்கு எதிரான உணர்வலைகளைக் கிளறிவிடும் நயவஞ்சகச் சூழ்ச்சியோடே இச்செவ்வி வடிவமைக்கப்பட்டு வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதைத் தமிழ்நாட்டு உறவுகளும் அரசியல் தலைவர்களும் புரிந்துகொள்வார்கள் என நம்புகின்றோம்.
அன்பான தமிழ்பேசும் உறவுகளே,சிங்கள அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் இராஜதந்திர சதிவலைக்குள் புதைந்துபோகாமலும் கே.பி போன்றோரை முன்னிலைப்படுத்தி மேற்கொள்ளப்படும் வஞ்சகச் சூழ்ச்சிக்குத் துணைபோகாமலும் விழிப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”
ஆ.அன்பரசன்,
ஊடகப்பிரிவு,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.

கோத்தபாய புரிந்த 62 கோடி ரூபா மோசடி!

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே செய்துள்ளதாக தற்போது தெரியவந்திருக்கும் 62 கோடி ரூபா மோசடியானது மூன்றாம் ஈழ யுத்தத்தில் நடந்த பாரியளவிலான நிதி மோசடி எனவும் இலங்கை இராணுவ வரலாற்றில் நடந்த மிகப்பெரிய மோசடியெனவும் மூத்த இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது .
இதற்கு முன்னர் இலங்கை இராணுவத்தில் இடம்பெற்ற மிகப்பெரும் மோசடியானது 80 மில்லிமீற்றர் எறிகணைத் தொகையை ஏற்றிய கப்பல் ஒன்றுக்கு 100 கோடி ரூபா செலுத்தி சிம்பாப்வே நாட்டிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட போது விடுதலைப் புலிகள் அந்தக் கப்பலைக் கடத்துவதற்கான சூழ்ச்சியை உள்ளிருந்து செய்த மோசடியே மிகப் பெரிய மோசடியாகும்.
இதுதொடர்பாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர; நடத்திய விசாரணைகளில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ரொஹான் தலுவத்த இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பு கூறவேண்டியவர் என்பது தெரியவந்தது. இவ்வாறான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட தலுவத்தவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே தேசிய மாணிக்கக்கல், ஆபரண அதிகார சபையின் தலைவராக நியமித்தார்.
இதனைத் தவிர இரண்டாவது பாரிய மோசடியானது
பிரித்தானியாவிடமிருந்து சீ 130 ரகத்தைச் சேர்ந்த மூன்று விமானங்களைக் கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதியுடன் நிதியைப் பெற்று அந்தப் பணத்தில் இரண்டு விமானங்களை மாத்திரம் கொள்வனவு செய்த மோசடியாகும்.
இதன்போது 90 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டதாக கணிக்கிடப்பட்டிருந்தது. இந்த மோசடியுடன் சம்பந்தப்பட்ட முன்னாள் விமானப்படைத் தளபதி எயார் மார்ல் ஜயலத் வீரக்கொடியை பாகிஸ்தானுக்கான இலங்கை உயர் ஸ்தானிகராக தற்போதைய ஜனாதிபதி நியமித்தார் .
அதேவேளை, இலங்கை கடற்படையின் டோரா தாக்குதல் படகிற்காக 30 மில்லிமீற்றர் ஆயுதக் கட்டமைப்பொன்றை நிர்மாணிக்கும் பணிகளில் 76 கோடி மோசடி செய்யப்பட்டது இதுகுறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் கடற்படைத் தளபதி எட்மிரல் தயா சந்தகிரியை குற்றவாளியெனப் பெயரிட்டது. எனினும், இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதி சந்தகிரியை இலங்கை பொசுபேட் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார்.
இந்த நிலையில், வெள்ளைக்கொடி வழக்கில் சரத் பொன்சேக்கா வழங்கிவரும் சாட்சியங்களின் போது கோதாபய ராஜபக்சே வின் மேலும் பல கொள்ளையடிப்புக்கள் குறித்த தகவல்கள் வெளிவரவிருப்பதாகவும், இந்தத் தகவல்கள் வெளிவந்தால் முப்படைத் தளபதிகளையும் மீறிச் சென்று போர் மூலம் பெருந்தொகை பணத்தை சம்பாதித்தவர் என பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்சே வரலாற்றில் இடம்பெறக் கூடும் என இந்தத் தகவல்களை வழங்கிய மூத்த இராணுவ அதிகாரி மேலும் தெரிவித்தார்.

வெள்ளைக்கொடி விவகாரம் ஊடகவியலாளர் நாட்டை விட்டு ஓட்டம்.

வெள்ளைக்கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் தலைவர்களைப் படுகொலை செய்யுமாறு கோத்தாபய ராஜபக்ஷ வழங்கிய பணிப்புரையை பகிரங்கப்படுத்திய ஊடகவியலாளர் அமல் சமந்த நாட்டைவிட்டுத் தப்பியோடியுள்ளார்.வெள்ளைக் கொடியுடன் சரணடைய வரும் விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களை படுகொலை செய்துவிடுமாறு கோத்தபய ராஜபக்ஷ உத்தரவிட்டிருந்த விடயம் அமல் வசந்த மூலமாகவே சரத் பொன்சேகாவிற்கு அறியக் கிடைத்திருந்ததை அடுத்து பிரஸ்தாப ஊடகவியலாளருக்கு கோதபாய ராசபக்ஷ கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.
சரத் பொன்சேகா உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பின் உயரதிகாரிகளுக்கு மிக நெருக்கமானவரும், நான்காம் கட்ட ஈழப்போரின் போது மாவிலாறு யுத்தக் களமுனை தொடக்கம் ஜனாதிபதி ஊடகப் பிரிவினருடன் இணைந்து ரூபவாஹினி தொலைக்காட்சிக்கான நேரடித் தகவல்களை வழங்கியவருமான ஊடகவியலாளர் அமல் வசந்த தற்போது சுவிஸ் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவின் சிபாரிசின் கீழ் நான்காம் கட்ட ஈழப் போரின் போது ரூபவாஹினியில் இருந்து அமல் வசந்த, ராமவிக்கிரம, சுயாதீன தொலைக்காட்சியில் இருந்து ரொட்ரிகோ ஆகியோர் யுத்தத்தின் தகவல்களை தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களுக்கு நேரடியாக வழங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை ஜனாதிபதி ஊடகப் பிரிவின் முன்னை நாள் தமிழ் அதிகாரியான அஷ்ரப் அலீ ஒருங்கிணைத்து வந்திருந்தார்.
அவ்வாறான நிலையில் அமல் வசந்தவும் அஷ்ரப் அலீயும் கடமை நிமித்தமாக ஒரு தடவை கோத்தாபய ராசபக்ஷவின் அலுவலகத்தில் இருந்துகொண்டிருந்த போதே வன்னியிலிருந்த இராணுவ கட்டளை தளபதிக்கு வெள்ளைக்கொடியுடன் வரும் விடுதலைப்புலி தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார் என தெரியவருகிறது.
சரத் பொன்சேகாவிற்கு மிகவும் நெருக்கமானவர் என்ற வகையில் ஊடகவியலாளர் அமல் வசந்த அவ்விடயத்தை சரத் பொன்சேகாவிற்கு தெரிவித்துள்ளார். அதனையே அவரும் பிரட்ரிக்கா ஜேன்ஸிடம் பிரஸ்தாபித்திருந்ததுடன், நீதிமன்ற சாட்சியமளிப்பின் போது சண்டே லீடர் ஆசிரியரிடம் பேசும் போது தான் தனிப்பட்ட ரீதியில் கூறியதாக சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சரணடைய வரும் விடுதலைப்புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்லுமாறு தான் கூறிய விடயம் அமல் வசந்த ஊடாகவே சரத் பொன்சேகாவிற்கு தெரியவந்ததை அறிந்து கொண்ட கோதபாய ராசபக்ஷ அவருக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்ததையடுத்து அமல் வசந்த நாட்டை விட்டு தப்பியோடி தற்போது சுவிட்சர்லாந்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்.
அமெரிக்க தெற்காசிய விவகாரங்களுக்கான உதவிச்செயலாளர் றொபட் ஓ பிளேக்கின் உதவியுடன் நேபாளத்திற்குத் தப்பிச் சென்ற அமல் வசந்தவிற்கு பின்னர் சுவிஸ் நாட்டில் அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இவருடன் ரூபவாஹினி செய்தி ஆசிரியர் காமினியும் சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார். அவரிடம் வன்னி இறுதிக்கட்ட யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் படங்களும் உள்ளதாக தெரியவருகிறது.

26 மே 2011

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப த.தே.கூ.செயற்பட்டால் யுத்த காலத்தில் ஏற்பட்ட கதியே ஏற்படும்.

இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப தமிழ் தேசியக் கூட்டமைப்பு செயற்படுமாயின் பேச்சுவார்த்தையிலிருந்து உடனடியாகவே விலகிக் கொள்ளவேண்டும். தற்போது ஏற்பட்டுள்ள பேச்சுவார்த்தைச் சூழலில் இனப்பிரச்சினை தொடர்பில் ஒரு தீர்வுத் திட்டத்தை உடனடியாக முன்வைத்து பேச்சுவார்த்தையில் உடனடியாக ஈடுபடவேண்டுமெனவும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலே இதனைத் தெரிவித்தார் ஸ்ரீகாந்தா. இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அண்மைக்காலங்களில் இப் பேச்சுவார்த்தையானது பிரயோசனம் அற்றது எனவும், இதனை இலங்கை அரசாங்கமே முறித்துக்கொள்ளும் எனவும் தமது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். இறுதி யுத்தத்தின் பின்னர் ஐ.நா.வின் விசாரணைகளின்படி அவர்களின் ஆலோசனைகளை வைத்துக்கொண்டு தற்போதய பேச்சுவார்த்தையை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பேச்சுவார்த்தையின்போது சர்வதேச சமூகத்தின் பிரசன்னமும் தேவை.
கடந்த காலங்களில் குறிப்பாக 70ம் ஆண்டுக்குப் பின்னரும், 80ம் ஆண்டு காலப்பகுதியில் ஜே.ஆர்.உடன் அன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பிரதான கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி அடிக்கடி பேச்சுவார்த்தைகளைப் பேசிக்கொண்டிருந்தது. இறுதியில் இடம்பெற்ற கதி இந்தப் பேச்சுவார்த்தையிலும் நடக்கக் கூடாது. இதற்குத் தமிழ் மக்கள் விடவும் கூடாது. பேச்சுவார்த்தையை இலங்கை அரசாங்கம் முடித்துக் கொள்ளுமென்றோ, பிரயோசனம் அற்றது என்று கூறுவது அனைத்து மக்களையும் அதிர்ச்சியடைய வைக்கிறது. இந்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுவதானால் யுத்த காலத்தில் நடந்த கதியே மீளவும் ஏற்படும். இனியும் இந்தியாவை நம்பிக்கெட முடியாது. இலங்கை அரசாங்கத்துடன் சீனா, பாக்கிஸ்தான் உறவு கொள்வதைக் காரணங்காட்டி இந்தியாவும், சீனாவைக் காரணங்காட்டி பாக்கிஸ்தானுடன் இந்தியாவும் இராஜாங்க உறவுகளை மேற்கொண்டு வருகிறது. சாகச அரசியலுக்கு இனி இடமில்லை.
நாம் பொறுப்புள்ள அரசியற் கட்சி என்ற வகையில் இனப் பிரச்சினைத் தீர்வை உடனடியாக முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு அவர்களுடைய மரபுவழிப் பிரதேசத்தில் சுயாட்சி செய்வதற்கான ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்து அரசாங்கத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டுமென தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தலைவர் என். சிறிகாந்தா தெரிவித்தார்.

சகோதரனை சிறையில் அடைத்து வைத்துக்கொண்டு சகோதரிக்கு இராணுவப் பயிற்சியா?

அண்ணன் இராணுவ முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளபோது சகோதரிக்கு இராணுவ முகாமில் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி வழங்கப்படுகின்றது எனவும் இது உயர் கல்வியை எதிர்பார்க்கும் மாணவர்களின் மன நிலையை பெரிதும் பாதித்துள்ளதாகவும் சுதந்திரமான உயர் கல்விக்கும் குந்தகம் ஏற்படுத்தி உள்ளது எனவும் ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க நேற்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் கட்டாய தலைமைத்துவப் பயிற்சி தொடர்பாகவே அநுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். சபை நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்ட போது, ஐ.தே.க. உறுப்பினரான ஜோன் அமரதுங்க பொது மக்களின் அதி முக்கிய விடயம் தொடர்பாகக் கவன ஈர்ப்பு பிரேரணை ஒன்றை முன்வைப்ப தாகக் கூறி எழுந்தார். ஆனால் சபாநாயகர் அதற்கு இடமளிக்க முடியாது என்று மறுத்துவிட்டார்.
சபாநாயக்கர் அவர்களே! நாடாளுமன்றின் நிலையியர் கட்டளையின் 17 ஆம் பிரிவின் கீழ் நாட்டின் முக்கியத்துவம் தொடர்பான ஒரு விடயம் தொடர்பாக உறுப்பினர் ஒருவருக்கு சபையின் முன் சமர்ப்பிக்கும் உரிமை உண்டு என அமரதுங்க குறிப்பிட்டார்.
இன்று பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி அளிப்பதன் மூலம் தனி மனித உரிமை மீறப்பட்டுள்ளது.
இது தொடர்பாகச் சபையில் பேச எனக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் ஜோன் அமரதுங்க கூறினார். ஆனால், சபாநாயகர் அவரது கூற்றை நிராகரித்ததுடன் அடுத்த நிகழ்வுகளை ஆரம்பிக்கும்படி அறிவித்தார்.
இதனால் ஐ.தே.க. உறுப்பினர்கள் அனைவரும் பதாகைகளுடன் எழுந்து நின்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். சில உறுப்பினர்கள் சபாநாயகருக்கு முன்னால் வந்தும் பதாகைகளைத் தூக்கிப் பிடித்தவாறு நின்றனர்.
சபாநாயகரின் உத்தரவைத் தொடர்ந்து ஆளும் கட்சி கொறடாவான தினேஷ் குணவர்த்தன 'பீடைகொல்லிகளைக் கட்டுப்படுத்துவது'' தொடர்பான திருத்தச்சட்டமூலத்தை சபையில் முன்வைத்தார்.இந்த சட்டவரைவு தொடர்பாக எந்த விதமான விவாதமும் இடம்பெறாமல் நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.சட்ட வரைபு நிறைவேற்றப்பட்டதும் சபை நடவடிக்கைகள் இன்று 26 ஆம் திகதி பிற்பகல் ஒரு மணிவரை ஒத்தி வைக்கப்படும் என சபாநாயகர் அறிவித்தார்.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பதாகைகளுடன் எழுந்து நிற்க, விளையாட்டுத்துறை தொடர்பாக அமைச்சர் அளுத்கமகே சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பெரிதும் பயன்படுத்திக் கொண்டார் ஜே.வி.பி. உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க.பல்கலைக்கழக புகுமுக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி வழங்குவது தொடர்பாகப் பேச ஜோன் அமரதுங்காவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதும், தனது ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் பெரும் பகுதியை இந்த விடயம் தொடர்பாகப் பேசுவதிலேயே செலவிட்டார்.
இதனை விளையாட்டுத்துறை அமைச்சர் ஆட்சேபித்த போதும் இந்த மாணவர்களும் இளைஞர்கள்தான். இவர்களுக்கும் விளையாட்டுடன் தொடர்பு உண்டு. எனவே விளையாட்டுத்துறைகள் தொடர்பாகப் பேசும்போது அவர்களைப் பற்றியும் பேசமுடியும் என்றார் அநுர குமார திஸாநாயக்க.
தமிழ் மக்கள் இராணுவ நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு இராணுவ முகாம்களில் தலைமைத்துவப் பயிற்சி என்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சகோதரன் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள போது தங்கைக்கு இராணுவ முகாமில் கட்டாயப் பயிற்சி என்பது விரும்பத்தகாத ஒன்று. அவர்கள் உள ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனுரகுமார திஸாநாயக்க உரையாற்றும்போதும் ஐ.தே.க. உறுப்பினர்கள் பதாகைகளுடன் எழுந்து நின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.எழுந்து நின்றவாறே அநுர குமார திஸாநாயக்காவின் பிரேரணையை வழிமொழிந்தனர். இப்பொழுதும் கூட காலம் கடந்து விடவில்லை. புத்திஜீவிகளும் மாணவர்களும் பல்கலைக்கழக சமூகமும் மாணவர்களுக்கு இராணுவ முகாமில் பயிற்சி வழங்குவதை எதிர்க்கின்றனர். எனவே அரசாங்கம் இந்தத் திட்டத்தை ரத்துச் செய்யவேண்டும் என்று வலியுறுத்திக் கூறியதுடன் பதாகைகளை சுருட்டிக் கொண்டு ஆசனங்களில் அமர்ந்து விட்டனர்.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு தலைமைத்துவப் பயிற்சி அளிப்பது ஒன்றும் புதிய விடயம் அல்ல. உயர் கல்வியை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு இராணுவப் பயிற்சியோ துப்பாக்கிப் பயிற்சியோ வழங்கப்படவில்லை.
எதிர்க்காலத்துக்குத் தேவையான விளையாட்டு மற்றும் கணினி ஆங்கில மொழிப்பயிற்சி என்பனவற்றுக்கான ஆரம்பப் பயிற்சிகளே வழங்கப்படுகின்றன. இதனை மாணவர்கள் பெரிதும் வரவேற்கின்றனர். அரசியல்வாதிகளே இதனை அரசியல்சாயம் பூசி இலாபம்தேட முனைகின்றனர். எவர் எதிர்த்தாலும் இந்தப் பயிற்சிகள் தொடரும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

25 மே 2011

காங்கிரசை வீழ்த்திய சீமானுக்கு மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் வாழ்த்து!

அன்பு தம்பி செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர்
கதவு எண்.8.மருத்துவமனை சாலை,
செந்தில் நகர்,
போரூர்- 600 116, சென்னை
தமிழகம், இந்தியா.
கரு : காங்கிரசை வீழ்த்தியதற்கு செந்தமிழன் சீமான் மற்றும் நாம் தமிழர் இயக்கத்திற்கு வாழ்த்துகள்
அன்புடையீர்,
கடந்த மே 13 தேதி வெளியான தமிழக தேர்தல் முடிவுகளானது, உலகத்தமிழர்கள் மத்தியில் பெரும் ஆனந்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை. அதற்கு காரணம், பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இலங்கை இனவெறி அரசு, ஈழத்தில் காவுக்கொள்ள துணைப்போன காங்கிரஸ் கட்சி, தமிழக தேர்தலில் வாங்கிய பலத்த அடிதான். தமிழனை அழிக்க துணைப்போன காங்கிரஸ் கட்சி, இப்பொழுது தமிழ்நாட்டில் அழிந்து போகும் நிலை வந்துள்ளது.
தமிழக தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளில், 58 தொகுதிகளில் தோல்வியை கண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் இரண்டாக பிரிந்ததால்தான், அந்த 5 தொகுதிகளில் கூட காங்கிரஸ் வென்றுள்ளது. தமிழக மண்ணில், காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள இந்த மிகப்பெரும் சரிவுக்கு காரணம், அக்கட்சியின் தமிழர் விரோத நடவடிக்கைகளே. காங்கிரஸ் கட்சியின் தமிழர் விரோத போக்கை மக்களிடம் கொண்டு சேர்த்து, அக்கட்சியின் உண்மையான முகத்திரையை தமிழக மக்கள் முன் கிழித்ததில் நாம் தமிழர் அமைப்புக்கும், உங்களுக்கும் உள்ள பங்கை யாரும் மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.
காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல், அக்கட்சியின் தமிழர் விரோத போக்கிற்கு உடந்தையாக இருந்த திமுகவும் நடந்து முடிந்த தேர்தலில் பலத்த அடி வாங்கியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் நடந்த மிகப்பெரும் அமைதிப் புரட்சிக்கு காரணம் 2- ஜி காற்றலை ஊழல் விவகாரம் தான் என்பது போன்ற ஒரு தோற்றத்தை முன்வைத்து, தமிழீழ விவகாரமும், நாம் தமிழர் இயக்கம் மற்றும் தங்களின் அரசியல் பிரச்சாரங்கள் ஆகியவை எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சிலர் முயலலாம். இருப்பினும், தமிழக தேர்தலில் வாக்களித்த ஒவ்வொரு தமிழருக்கும், உலகெங்கும் பரந்து வாழும் தமிழர் அனைவருக்கும் தெரியும் தமிழகத்தில் நடந்த முடிந்துள்ள அமைதிப்புரட்சியில் தங்களின் பங்கும், நாம் தமிழர் இயக்கத்தின் பங்கும் என்னவென்பது.
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கயிருக்கும் இத்தேர்தலுக்கு பிறகு, தமிழீழ விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கைகளை உலகதமிழர்கள் மிக உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இலங்கையில் நடந்தது இன அழிப்பு போர் என்றும், அவ்வின அழிப்பை போரை முன்னெடுத்த மகிந்த இராஜபக்சே, கோத்தபய இராஜபக்சே மற்றும் இராணுவ உயரதிகாரிகள் போர் குற்றவாளிகள் என்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றபட வேண்டும் என்பதே உலகத்தமிழர்களின் ஒருமித்த கருத்தாகும். அத்தீர்மாணம் நிறைவேற்றப்படுவதற்கு, தாங்களும் நாம் தமிழர் இயக்கமும் அழுத்தம் கொடுப்பீர்கள் என்று நம்புகின்றேன். எதிர்காலத்தில் தமிழகத்திற்கு வருவதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைக்குமானால், உங்களையும் நாம் தமிழர் இயக்க நிர்வாகிகளையும் கண்டிப்பாக வந்து சந்திக்கின்றேன்.
எனது அன்பிற்கும் மரியாதைக்குமுரிய தம்பி செந்தமிழன் சீமான் அவர்களே, உங்கள் தமிழின சேவை என்றென்றும் தொடர எனது உள்ளம் நிறைந்த வாழ்துகள். நன்றி
இங்கனம்,
பேராசிரியர் இராமசாமி
பினாங்கு மாநில துணை முதல்வர், மலேசியா.

ராஜபக்ஷ,சோனியா உள்ளிட்டோரை சர்வதேச நீதிமன்றில் ஏற்றுவது விரைவில் நடக்கும்.

ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு. இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.
வேலூரில் கடந்த 18-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மற்றும் தேர்தல் வெற்றி விழா நடைபெற்றது.
பாதையைத் தேடாதே... உருவாக்கு!’ கம்பீரமாக பிரபாகரன் சிரித்துக்​கொண்டு இருக்க, கீழே சிறுமி ஒருத்தி, 'வீர வணக்கம்... வீர வணக்கம்!’ என்றபடியே நாம் தமிழர் கட்சிக் கொடியைப் பிடித்துப் பேரணியைத் தொடக்கி வைத்தனர்.
பேரணியின் நடுவே ராஜபக்ஷே வேடத்தில் ஒருவர் செருப்பு மாலையுடன் நின்றார். ராஜபக்ஷே வேடம் அணிந்தவரை பேரணியில் அடித்தபடியே வந்தனர்.
மாலை பொதுக் கூட்டம் தொடங்கியது.
முதலில் இயக்குநர் செல்வமணி உரையாற்றுகையில்,
காங்கிரஸுக்கு யாரும் ஓட்டுப் போடா​தீங்கன்னு எல்லோரும் கத்தினோம். அதற்கு நல்ல பயன் கிடைத்து உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இனி யாரும் இருக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்யப்போகிறோம். காங்கிரஸில் இருப்பவர்கள் அங்கே இருந்து ஓடி​விடுங்கள்.
ஏன்னா இப்ப உங்களுக்கு ஐந்து தொகுதிகள் கிடைச்சிருக்கு. அடுத்த தேர்தல்ல யாருக்கும் டெபாஸிட் கூட கிடைக்காது. ஒரு பேச்சுக்குச் சொல்லுறேன்... தீ என்று சொன்னால் சுடாது. இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கிற மேடையில் குண்டு வெடிச்சா என்ன ஆகும்? சீமான், நான், செல்வபாரதி, தீரன், சந்திரசேகர்னு எல்லோரும் மேல போக வேண்டியதுதான்.
ஆனா ராஜீவ் காந்தி இறந்தாரே... அப்ப அவர்கூட இருந்த 7 போலீஸ்காரர்களும் 10 பொதுமக்களும்தான் இறந்தார்கள். அப்போது வாழப்பாடியார், மூப்பனார் எல்லாம் எங்கே இருந்தார்கள்? குண்டு வெடிப்பது அவர்களுக்கு முன்கூட்டியே தெரியுமா? உண்மையை எப்பவும் மறைக்க முடியாது.
சிறையில் இருக்​கும் என் தம்பி, அக்காமார்களை விரைவில் விடுதலை செய்... இல்லை என்றால், நாங்களும் வருகிறோம். சிறைச்சாலையைத் தயார் செய்....'' என்று முடிக்க, கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
இறுதியில், ஆக்ரோஷத்தோடு வந்து நின்ற சீமான்,
கடந்த ஆண்டு மே 18-ம் தேதி மதுரையில் நாம் தமிழர் கட்சியைத் தொடக்கினோம். அதற்கு முந்தைய ஆண்டு 2009 மே 18-ம் தேதி ஈழத்தில், முள்ளி வாய்க்காலில் நம் தமிழ் சகோதர -சகோதரிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.
ஒரு காக்கை இறந்தால், அந்த காக்கை இனம் கூடிக் கரையும். ஒரு தெரு நாய் இறந்தால், அந்தத் தெரு முழுக்கக் குரைத்தபடி திரியும் தெருநாய் இனம்.
நம் தமிழ் சொந்தங்கள் அங்கு வன்புணர்ச்சி செய்யப்பட்டு மடிகிறார்கள். இதை நான் தொலைக்காட்சியில்தான் பார்த்தேன். ஆனால், நம் தமிழ்நாட்டில் எத்தனை பேர் தொலைக்காட்சியில் பார்த்து இருப்பார்கள்? எல்லோரும் மானாட மயிலாடவும், நாயாட நரியாடவும்தான் பார்த்தார்கள்.
இந்தக் கூட்டம், வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் போடப்பட்ட கூட்டம் அல்ல. தமிழர்களின் இரத்தம் குடித்த கூட்டத்தை விரட்டி அடிக்கப் போடப்பட்ட கூட்டம்.
பா.ம.க., விடுதலைச் சிறுத்தைகளைப் பார்த்துக் கேட்கிறேன்... பதவி ஆசையில் நம் இனத்தை அழித்தவனிடம் போய் நீங்கள் மண்டியிட்டீர்களே... இப்போது மக்களின் தீர்ப்பு எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?
நடந்து முடிந்தது தேர்தல் களம் அல்ல... அது ஒரு யுத்த களம்! ஐந்து தொகுதியில் ஜெயித்ததை நினைத்துக் கொக்கரிக்காதீர்கள். அந்த ஐந்து தொகுதிகளுக்கு வர எனக்கு நேரம் இல்லை. உங்களை வேரோடு அழிக்கும் வரை நான் ஓயப்போவது இல்லை.
தி.மு.க. தனது வரலாற்றில் எதிர்க் கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளது. மறுபடியும் நீங்கள் கூட்டணி வைத்தால் 23 ஸீட்டுகள் இல்ல. மூணு ஸீட்டுகள்கூட வாங்க முடியாது. மேலும், சாதி அரசியலை வைத்து இனி எவனும் தமிழ்நாட்டில் அரசியல் பண்ண முடியாது.
ராஜபக்ஷே, சோனியா, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, கருணாநிதி போன்ற எல்லோரும் நம் தமிழ் இன மக்கள் கொடுமையாகச் சாகக் காரணமாக இருந்தார்கள். அவர்களை சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்றுவதே நாம் தமிழர் கட்சியின் முடிவு.
இது கூடிய விரைவில் நடக்கும்!'' என சீமான் பேச்சு முழுக்க அனல் பறந்தது.
வலி இருந்தால்தானே வார்த்தைகளில் தீப்பறக்கும்!
நன்றி - ஜூனியர் விகடன்.

றோவின் சதிதான் கே.பி ஊதிய பீப்பி!

கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதன் இந்திய தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் பின்னணியில் றோ புலனாய்வுப் பிரிவு செயற்பட்டுள்ளதாக இந்திய செய்தி சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத்துறையான றோ மேற்கொண்டிருக்கின்றது எனத் தகவல் வெளியாகி உள்ளது.
இதுநாள் வரை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியை பயன்படுத்திக்கொண்டு விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் பணியை மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியும், அதன் (மத்திய) அரசும், ஜெயலலிதா தேர்தலில் வெற்றிபெற்றதும் அவர் மூலமாக சிக்கல் ஏதும் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவரையும் வளைக்கும் முயற்சியை தொடங்கியது.
இதன் முதல்கட்ட நடவடிக்கையாகத்தான் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேர்தல் வெற்றிக்காக ஜெயலலிதாவை தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததோடு, தேநீர் விருந்துக்கு டில்லி வருமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.ஏற்கனவே விடுதலைப் புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் எதிரான உணர்வுகளைக் கொண்டிருந்த ஜெயலலிதா,2009 போரில் இலங்கை இராணுவத்தினரின் கொடூரச்செயல்கள் குறித்த தகவல்கள் மற்றும் அது குறித்த செய்திகளை அறிந்த பின்னர்தான் ஓரளவுக்குத் தனது நிலையை மாற்றிக்கொண்டார்.
குறிப்பாக இலங்கையில் ஈழத்தமிழர்கள் முகாம்களில் படும் அவதிகளை நேரில் கண்டறிந்து வந்த ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக எடுத்துக் கூறிய உண்மைகள்தான் அவரை ஓரளவுக்கு மாற்றியது.
அத்துடன் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்கள் வாயிலாகவும் அவருக்கு இலங்கை நிலவரம் குறித்து எடுத்துச் சொல்லப்பட்டது.அதன் பின்னரே இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷவுக்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கினார் ஜெயலலிதா.
இந்நிலையில் அவரது இந்த மாற்றம், வெறும் வாக்குகளை பெறுவதற்காகத்தானோ அல்லது அவர் மாறவே இல்லையோ என்ற எண்ணம், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர் ஜெயா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியின்போது தோன்றியது.
அதாவது ஈழத் தமிழர் பிரச்சினை ஒரு சர்வதேச பிரச்சினை என்றும், மத்திய அரசு சம்பந்தப்பட்ட விடயம் என்றும், இதில் மாநில அரசு ஓரளவுக்குத்தான் தலையிட முடியும் என்றும் கூறியதைப் பார்த்தபோது, ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்பினர்களின் மனதில், 'ஐயோ... இவரும் கருணாநிதி கூறியதைப் போன்றே கை கழுவும் பாணியில் பேசுகிறாரே...!' என்ற ஐயம் ஏற்பட்டது. இந்நிலையில், போர்க் குற்றச்சாட்டிலிருந்து இலங்கையையும், ஜனாதிபதி ராஜபக்ஷவையும் முட்டுக்கொடுத்துக் காப்பாற்ற தீவிர முயற்சியில் இறங்கியுள்ள மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு, ஆதரவாகவும், ஜனாதிபதி ராஜபக்ஷவை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும் என ஈழத் தமிழருக்கு ஆதரவாகக் கருத்துக் கூறிய ஜெயலலிதாவிடமிருந்தும், தமிழகத்திலிருந்தும் குரல் எழும்பாத வகையில் முடக்கிப் போட திட்டமிட்டுள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.
இதன் முதல்கட்டமாக ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திருப்பும் நடவடிக்கையை இந்திய உளவுத் துறையான 'றோ' மூலம் மேற்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளன.இதன் ஓர் அங்கமாக, இலங்கையில் இராணுவத்தின் பிடியில் இருக்கும் கே.பி. என்கிற பத்மநாதனை இந்திய தொலைக்காட்சி ஒன்றின் மூலம் பேட்டி எடுத்து வெளியிட வைத்துள்ளது.இந்திய தொலைக்காட்சிக்காக அந்தப் பேட்டி எடுக்கப்பட்டது எனக் கூறப்பட்டாலும், அந்தப் பேட்டியில் கேட்கப்படும் கேள்விகளும் அதற்கு கே.பி. கூறும் பதில்களும், கே.பியை ஒரு பகடைக்காயாகப் பயன்படுத்தி ஜெயலலிதாவை ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் திசை திருப்ப 'றோ' முயற்சிப்பது தௌ;ளத் தெளிவாகியுள்ளது எனக் கூறப்படுகிறது.
விடுதலைப் புலிகளே ராஜீவ் காந்தியைக் கொன்றதாகக் குறிப்பிடும் கே.பி., அதற்காக மன்னிப்புக் கோருகிறார். பின்னர் அவர் குறிப்பிடுகையில், ஜெயலலிதா மீது புலிகள் ஆத்திரம் அடைந்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு அதன் காரணமகவே 'இசட்' ரக பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டது என்றும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் புலிகள் ஜெயலிதாவையும் சுட்டுக்கொன்றிருப்பார்கள் என்றும் கே.பி. அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

24 மே 2011

கருணாவை அமைச்சராக்கி விட்டு என்னை சிறையில் தள்ளி விட்டனர்"குமுறும் சரத்பொன்சேகா.

தாய் நாட்டை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதோடு சிங்களமக்களையும் படுகொலைகள் செய்த கருணாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தனக்கோ சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இன்று கொழும்பு மேல்நீதிமன்றில் நடைபெற்ற வெள்ளைக்கொடி வழக்கில் சாட்சியம் அளிக்கும்போது தெரிவித்தார்.
நாட்டையும் அழித்து, பொதுமக்களையும் அழித்து, பொதுச் சொத்துகளுக்குச் சேதம் ஏற்படுத்திய கருணா நீதிமன்றில் நிறுத்தப்படாமல் இலங்கை அரசாங்கத்தால் அமைச்சர் பதவி வழங்கப்பட்டு சுகபோகம் அனுபவிக்கின்றார். ஆனால், நாட்டுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு பயங்கரவாதத்தை ஒழித்த தான் சிறைத்தண்டனை அனுபவிப்பதாக அவர் தெரிவித்தார்.
தான் இராணுவத்தில் இருந்த போது மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதாகவும், போரின்போது ஆபத்தான கட்டங்களில் இராணுவத்தினர் சிக்கி தவிக்கும்போது அவர்களை பல தடவைகள் மீட்டதாகவும், இராணுவத் தளபதியாக வருவதற்கு முன்னரும் பல தடவைகள் இந்த ஆபத்தான பணிகளைச் செய்ததாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
1986ஆம் ஆண்டின் செப்டெம்பர் நடுப்பகுதியில் யாழ். மண்டைதீவு பகுதியை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கும் நடவடிக்கையில் தற்போதைய பாதுகாப்புச் செயலாளராகக் கடமையாற்றும் கோட்டாபய ராஜபக்ஷ அன்று கட்டளைத் தளபதியாகவும், தான் சிங்கப் படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்ததாகவும், மண்டைதீவை மீட்கும் பொறுப்பு அன்று மேஜர் ஜெனரல் கொப்பேகடுவவினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாகவும் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
அன்றைய தினம் மாலை ஊர்காவற்றுறையிலிருந்து மண்டைதீவுக்கு நுழைவாயில் வழியாகச் செல்லாமல், முழுப் படையினரும் களத்தில் இறங்கிப் போராடினர். அதன்போது இராணுவத்தினர் பலர் உயிரிழக்க நேரிட்டது. அந்த அழிவில் இருந்து காப்பாற்ற தனக்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் இருந்தும் தான் படைகளுடன் மண்டைதீவு நுழைவாயில் வழியாக உள்நுழைந்து 40 நிமிடங்களில் முழுத் தீவையும் மீட்டெடுத்ததாக சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
தான் தனது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் ஆகியோரிடத்தில் நேரத்தை செலவழிக்காமல் இராணுவத்துக்காக, நாட்டுக்காக சேவை ஆற்றியதாகவும், தனது தாயாரும், தந்தையும் சுகவீனமுற்று இறக்கும்போது அவர்களுக்கு அருகில் கூட இருக்க நேரம் கிடைக்கவில்லை. அந்த வேளைகளில் தான் போர்க் களத்தில் பணியாற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2006 ஆம் ஆண்டு மூன்றாவது ஈழப்போரின் பின் யாழ்ப்பாணத்தில் அதிஉயர் பாதுகாப்பு வலயங்களை அமைத்தோம். அதன்பின்னர் ஜனாதிபதியை சந்தித்தோம். அதன்போது சிரேஷ்ட அதிகாரிகளிடம் யுத்தம் எப்போது முடிவுறும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேட்டார். சிலர் 8 வருடங்களாகும் என்றனர். ஆனால் நான் 3 வருடங்களில் முடிவுக்கு கொண்டுவரலாம் என்றேன். அதனை நான்காவது ஈழப்போரில் சாதித்துக் காட்டினேன்.
இந்த வழக்குடன் தொடர்புடைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, வேறு எவரையும் இராணுவத் தளபதியாக நியமித்திருந்தாலும் யுத்தத்தில் வெற்றிபெற்றிருப்போம் என்று கூறியுள்ளார். அவ்வாறானால், ஏன் கடந்த 30 வருட காலமாக யுத்தத்தில் வெற்றிபெற முடியாமல் போனது? பாதுகாப்புச் செயலாளரின் கூற்று பொய்யாகிவிட்டது என அவர் தெரிவித்தார்.
நான் இராணுவத்துக்காக எனது சிரமங்களையும் பாராமல் அர்ப்பணிப்புடன் செயற்பட்டபடியால்தான் ஜானாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை அன்று தளபதியாக நியமித்திருந்தார். ஆனால், இன்றோ அவரும், சகாக்களும் திட்டமிட்டு என்னைத் சிறைக்குள் தள்ளிவிட்டார்கள். இது எந்த வகையில் நியாயம்?� என்றார் சரத் பொன்சேகா.
இதனையடுத்து இந்த வெள்ளைக் கொடி வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சிங்களத்து அடிமை கே.பி.இந்திய ஊடகத்திற்கு பேட்டி!

விடுதலைப்புலிகளின் தாக்குதல் பட்டியலில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இருந்ததாக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினரும், தற்போது சிறீலங்கா அரசின் கைக்கூலியாகவும் செயற்பட்டுவரும் கே.பி எனப்படும் சிங்களத்து அடிமை குமரன் பத்மநாதன் நேற்று (23) இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கியுள்ள நேர்காணலை தமிழ் இனத்திற்கு எதிரான போக்கை கொண்ட இந்திய ஊடகங்கள் முதன்மைப்படுத்தி வருகின்றன.
சிறீலங்காவுக்கு இந்திய படையினரை அனுப்பி பல ஆயிரம் தமிழ் மக்களை படுககொலை செய்த இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலையில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும், புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டம்மானும் தொடர்ப்புபட்டிருந்ததாக தெரிவித்துள்ள கே.பி, என்ற சிங்களத்து அடிமை அதற்கு தான் வருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவை விடுதலைப்புலிகள் படுகொலை செய்ய முயன்றதாகவும் அவர் மேலும் தெரிவித்து, போர்க்குற்றவாளி மகிந்தாவுக்கு எதிராக தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அலையை திசைதிருப்பவும் முற்பட்டுள்ளார்.
உலக தமிழ் சமூகத்திற்கு எதிரான கொடூர சிந்தனை கொண்ட இந்திய ஊடகம் ஒன்றே திட்டமிட்டு இந்த நேர்காணலை மேற்கொண்டுள்ளதுடன், அதனை பிரபலப்படுத்தி தமிழ் இனத்தின் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகளை மறைக்கவும் முற்பட்டுள்ளது.
குறிப்பிட்ட ஊடகம் சிறீலங்கா அரசிடம் இருந்து பெருமளவான நிதியை பெற்றுக்கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக புலம்பெயர் தமிழ் மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.

22 மே 2011

யாழில் மீண்டும் குடும்பப் பதிவுகளை தொடங்கியுள்ள சிங்களப்படைகள்.

யாழ். குடாநாட்டில் குடும்பப் பதிவுகள் மற்றும் குடும்பப் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகளைப் படைத்தரப்பு சத்தமின்றி மீண்டும் ஆரம்பித்துள்ளது எனக் குற்றஞ்சாட்டப்படுகின்றது. குறிப்பாக வரணி மற்றும் சங்கானை உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேரடியாக இப்பதிவு மற்றும் புகைப்படம் பிடிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
முன்னதாகப் பெருமெடுப்பில் இராணுவப் பதிவு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதற்கெதிராக நீதிமன்றம் சென்றிருந்தது. இதையடுத்து பதிவு நடவடிக்கைகளை தாம் கைவிடுவதாக படைத்தரப்பு அப்போது அறிவித்திருந்தது.
எனினும் வன்னியில் பெரும்பாலான குடும்பங்களை பதிவு செய்வதிலும் குடும்ப அங்கத்தவர்களை உள்ளடக்கி புகைப்படம் பிடித்து தகவல் திரட்டுவதிலும் படைத்தரப்பு தொடர்ந்தும் ஈடுபட்டே வருகின்றது. இந்நிலையிலேயே யாழ். குடாநாட்டிலும் கிராமங்கள் தோறும் சத்தமின்றி பதிவு நடவடிக்கைகளை மீண்டும் படைத்தரப்பு ஆரம்பித்துள்ளது.
குறிப்பாக வரணி மற்றும் சங்கானைப் பகுதிகளில் இப்பதிவு நடவடிக்கைகள் பெரும் பாலும் பூரணப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. படை முகாம்களிலிருந்து நேரடியாக வருகை தரும் படையினரே படிவங்களை விநியோகித்து விபரங்களைத் திரட்டி வருவதாகவும் புகைப்படங்களைத் தாமே கமரா மூலம் எடுத்துச் செல்வதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இது இவ்வாறிருக்கையில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் யாழ். குடாநாடு முழுவதிலும் பதிவுகள் ஆட்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அந்தந்த பகுதிகளுக்கான கிராமசேவகர் பிரிவுகளில் இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து சங்கானை பிரதேச செயலாளர் திருமதி பாபு கூறுகையில், கடந்த சில நாட்களாக யாழ். குடாநாடு முழுவதும் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பதிவு நடவடிக்கையானது பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பதிவுக்கான விண்ணப்பங்கள் இங்குள்ள வீடுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
யாழ்.குடாநாட்டிலுள்ள மக்களின் விபரங்களை கணனி மயப்படுத்துவதற்காகவே இந்த பதிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

ஸ்ரீலங்காவிற்கு எதிரான பரப்புரையை முறியடிக்க சிறப்புப் பிரிவு அமைத்துள்ள மகிந்த.

சிறிலங்கா அரசுக்கு அடுத்தவாரம் தொடங்கப் போகும் புதிய தலைவலியை சமாளிக்க ஸ்ரீலங்கா அரசானது முன்கூட்டியே பரப்புரைகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது. அடுத்தவாரம், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 17வது கூட்டத்தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
மே மாதம் 30ம் திகதி தொடக்கம் ஜுன் 17ம் திகதி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் ஏதும் கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறான தீர்மானம் கொண்டு வரப்படுவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படாது போனாலும் அதனைச் சமாளிப்பதற்கான தயார்படுத்தல்களில் சிறிலங்கா அரசு தற்பொழுது இறங்கியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான நகர்வுகளை முறியடிக்க சிறப்பு அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, நிமால் சிறிபால டி சில்வா மற்றும் சட்டமா அதிபர் மொகான் பீரிஸ் ஆகியோரைக் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை சிறிலங்கா அரசாங்கம் ஜெனிவாவுக்கு அனுப்பவுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தக்குழு விரைவில் ஜெனிவா சென்று முன்கூட்டிய தற்பாதுகாப்பு பரப்புரை நடவடிக்கைளில் உடனடியாக இறங்கவுள்ளதுடன் சனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காணொலிப் பதிவு போலியானது என்றும் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
மேற்படி காணொளி படைச் சிப்பாய் ஒருவரால் கைத்தொலைபேசியில் எடுக்கப்பட்டது என்றே கூறப்பட்டிருந்தது. ஆனால் அது ஒரு தரமான ஒளிப்படக் கருவியால் எடுக்கப்பட்டதென்று சிறிலங்கா அரசு கூறியுள்ளது. இந்நிலையில் ஜெனிவா கூட்டத்தொடர் குறித்து இன்று கருத்து வெளியிட்டுள்ள சண்டே ரைம்ஸ் பத்திரிகை சிறிலங்கா அரசுக்கு புதியதொரு தலைவலி அடுத்த வாரம் ஆரம்பிக்கவுள்ளதாக தனது பத்தியொன்றில் கூறியுள்ளது.
இந்தக் கூட்டத்தொடருக்கு தாய்லாந்து தலைமை தாங்கவுள்ளதுடன் மேலும் 47 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

21 மே 2011

கந்தரோடையில் பெளத்த ஆதாரம் என்பதில் உண்மையில்லை.

யாழ். மாவட்டம், கந்தரோடையில் இடம்பெற்று வரும் அகழ்வாராய்ச்சி தொடர்பில் சிங்களப் பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளன. ஆனால் இந்தச் செய்தி தொடர்பில் யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியர் புஷ்பரட்னம் மறுப்புத் தெரிவித்திருக்கிறார்.
கந்தரோடையில் புராதன காலத்துக் குடியிருப்பு மற்றும் பௌத்த குருமாரின் புராதன வாழ்விடம் என்பன அமைந்திருந்தமைக்கான சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை நிறைவேற்றுப் பணிப்பாளர் நாயகம் கலாநிதி செனரத் திஸாநாயக்க தெரிவித்தார் என்று லங்காதீப என்ற சிங்களப் பத்திரிகை தனது 17ஆம் திகதிய பதிப்பில் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியை யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை மறுத்துள்ளது. அதேவேளை, குறித்த செய்தி தொடர்பாக தொல்லியல் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அது பொய்யான செய்தி கலாசார அமைச்சின் அனுமதியின்றி நாம் எந்தவொரு ஆய்வு முடிவுகளையும் வெளியிடுவதில்லை என்று தெரிவித்தார் பிரதி ஆணையாளர் நிமல் பெரேரா.
அத்தகைய எந்த ஒரு ஆதாரமும் கந்தரோடையில் இருந்து இதுவரையில் பெறப்பட்டதாக அறிக்கையிடப்படவில்லை என்று யாழ். பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வுத்துறையும் அடித்துக் கூறியது. இதுவரை நடத்தப்பட்ட ஆய்வில் பெருங்கற் கால பண்பாட்டை ஒத்ததானகுடியிருப்புக்கள் அங்கிருந்ததற்கான ஆதாரங்களே கிடைத்துள்ளன. பௌத்த அடையாளத்துக்கான எவையும் கிடைக்கவில்லை. அண்மையில் வெண்கலச் சூலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது'' என்று ஆய்வுடன் தொடர்புடைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
'கந்தரோடையில் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ். பல்கலைக்கழகத்தின் தொல்லியல் ஆய்வுப் பிரிவின் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணம் தலைமையில் மாணவர்களும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த அகழ்வாராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளனர் எனவும் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்'' என்று லங்காதீப செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி யாழ். பல்கலைக்கழக தொல்லியல் துறைத் தலைவர் பேராசிரியர் புஸ்பரட்ணத்திடம் கேட்டபோது, 'ஆய்வின் இறுதியில் பல்கலைக்கழகமும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து முடிவுகளை வெளியிடுவது என்பதே ஒப்பந்தம். அப்படியிருக்கையில் இப்படி ஒரு செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியமளிக்கிறது'' என்றார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள கந்தரோடை தொல்லியல் சான்றுகள் புத்த சமய காலத்திற்கு முற்பட்ட பெருங்கற்காலத்திற்குரியவை என்று பல வரலாற்று ஆய்வாளர்களும் வரலாற்றுப் பேராசிரியர்களும் தெரிவித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தின் மிகப் பழைய நாகரீகத்திர்க்குரிய ஆதாரமாக அமைந்துள்ள இந்தச் சான்றுகள் தமிழ்பௌத்தத்திற்குரியவை என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

எந்த இணக்கப்பாடும் இதுவரையில் ஏற்படவில்லை.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் ஆலோசனைகள் தொடர்பில் இலங்கையிடம் இருந்து பதில் தொடர்ந்தும் எதிர்பார்க்கப்படுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெசர்கி இதனை தெரிவித்துள்ளார்.
இன்னர் சிட்டி பிரஸ், நேற்று எழுபபிய கேள்வி ஒன்றின்போதே மார்டின் நெசர்கி இந்த கருத்தை வெளியிட்டார்.
ஏற்கனவே ருவண்டா பிரச்சினையில் பான் கீ மூனுக்கு அதிகாரமில்லை என்ற காரணத்தினால், விசாரணைகளை இடம்பெறவில்லை.அதேபோல இலங்கை தொடர்பிலும் நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சுதந்திர பொறிமுறை தவிர்க்கப்படுமா என்று இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
அத்துடன் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் நிரந்தரப் பிரதிநிதி பாலித கோஹனவுக்கும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையில், நிபுணர் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் இணக்கம் ஏற்பட்டுள்ளதா? என்றும் இன்னர் சிட்டி பிரஸ் கேள்வி எழுப்பியது.
அதே நேரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு, பாதுகாப்பு சபை என்பவற்றின் அனுமதியை பெற்ற பின்னரே பான் கீ மூன், நடவடிக்கைகளை மேற்கொள்வாரா? என்ற கேள்வியையும் இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பியது.
இவை யாவற்றும் ஒரு பதிலை வழங்கிய பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி, இலங்கை தொடர்பான நிபுணர் குழு அறிக்கை, பான் கீ மூனிடம் கையளிக்கப்பட்ட பின்னர், அது பகிரங்கப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அது தொடர்பிலான கருத்து இலங்கையிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கப்படுகிறது
எனவே, அதற்குள் எந்தவிதமான இணக்கப்பாடுகளோ உடன்படிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை என்று குறிப்பிட்டார்.அவ்வாறான இணக்கப்பாடுகள் இருப்பின் அது தொடர்பாக வெளிப்படுத்தப்படும் என்றும் மார்டின் நெசர்க்கி கூறினார்.

20 மே 2011

நெடியவன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன!

நோர்வேயை மையமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர் நெடியவனை அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பேரின்பநாயகம் சிவபரன் எனப்படும் நெடியவனை கைது செய்து ஒஸ்லோ நீதிமன்றில் ஆஜர்படுத்தியதாக நோர்வே ஊடகங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
நெடியவனுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து நீதிமன்றில் விசாரிக்கப்பட்டது.
நெடியவனிடம் விசாரணை நடத்துவதற்கு நெதர்லாந்தைச் சேர்ந்த நீதவான் ஒருவரும் ஐந்து சட்டத் தரணிகளும் நோர்வேக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
விசாரணை நடத்தும் நெதர்லாந்து அதிகாரிகளுக்கு நோர்வே அரசாங்கம் உதவிகளை வழங்கி வருவதாக ரிவி2 ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
நெதர்லாந்தில் கைது செய்யப்பட்ட ஏழு விடுதலைப் புலி உறுப்பினர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்தும் நோக்கில் நெதர்லாந்து அதிகாரிகள் நோர்வே சென்றுள்ளனர்.
இதேவேளை, நெடிவனிடம் எவ்வாறான விசாரணகைள் நடத்தப்பட்டன தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளரா, அவருடன் வேறும் எவரும் கைது செய்யப்பட்டனரா என்பது தொடர்பான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
தற்போது வந்த தகவலின்படி நெடியவன் அவர்கள் பிணையில் விடுதலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.நாவே மீண்டும் தவறை செய்யாதே"என அமெரிக்காவில் கூடிய மக்கள் முழக்கம்.

சிறீலங்கா அரசின் இனஅழிப்பின் உச்சக்கட்டமாக கடந்த 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளின் இரண்டாவது ஆண்டு நிகழ்வு நியூயோர்க்கில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு நேற்று (19) நடைபெற்றுள்ளது.
கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் அதில் கலந்துகொண்டிருந்தனர்.
ஐ.நா நிபுணர் குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பரிந்துரைகளை ஐக்கிய நாடுகள் சபை நடைமுறைப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
“ஐ.நாவே மீண்டும் தவறைச் செய்யாதே” “ பான் கீ மூன் – உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்” போன்ற கோசங்களும் அங்கு எழுப்பப்பட்டன.
சிறீலங்காவில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தகவல்களை முன்கூட்டியே அறிந்திருந்தபோதும், அதனை தடுப்பதற்கு தவறிவிட்டது என வெள்ளைமாளிகையின் முன் போராட்டத்தை நடத்திவரும் கலாநிதி கே தயாபரன் தமிழ்நெற் இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார்.
தற்போது ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை வெளிவந்துள்ள நிலையில் தற்போதைய ஒபாமா அரசு சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு ஒன்றை அமைக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உலகில் ஒடுக்கப்படும் மக்களுக்கு தமிழ் மக்களின் பிரச்சனைகள் நல்ல உதாரணம் என அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் அரசியல்த்துறை பேராசிரியர் கிளன் மொறிஸ் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் மனித உரிமை ஆணைக்குழுவிலும் அவர் அங்கம் வகித்திருந்தார்.
சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர்க்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, நோர்வே மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், இது சிறிலங்கா அரசின் இயங்குநிலையை குறைத்துள்ளதாகவும் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலகம் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும். நாம் எந்த சூழ்நிலையிலும் எமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

19 மே 2011

வவுனியாவிலும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வுகள்.

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளுக்கான இரண்டாமாண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு வவுனியா நகரசபை மண்டபத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான என்.சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம் மற்றும் வவுனியா நகரசபை உறுப்பினர்கள், வன்னிப்பிரதேச பிரதேச சபைகளின் தலைவர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலதரப்பினரும் இதில் கலந்து கொண்டு தீபம் ஏந்தி மலரஞ்சலி மற்றும் மௌனஞ்சலி செலுத்தினர்.
இந்த நிகழ்வில் நினைவுரைகளும் இடம்பெற்றன.

என்று என் இலட்சியத்தை தொடுகிறேனோ அன்றுதான் பார்வதியம்மாவின் அஸ்தியை கரைப்பேன்.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே 18ஆம் தேதி முள்ளிவாய்க்காலில் அந்நாட்டு அரசு நடத்திய இனப்படுகொலையை கண்டித்தும், ஈழத் தமிழர்களுக்கு எதிரான இலங்கை அரசின் கொடும் போர் குறித்து ஐ.நா.நிபுணர் குழு அளித்த அறிக்கைக்கு ஆதரவாகவும், இலங்கையை இனப்படுகொலை செயத நாடு என அறிவிக்க வலியுறுத்தியும் நாம் தமிழர் கட்சி சார்பில் 18.05.2011 அன்று வேலூர் பெரியார் பூங்காவில் இருந்து கோட்டை அருகே உள்ள மைதானம் வரை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
பேரணிக்குப் பின்னர் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான்,
கடந்த 2010 இதே மே 18ஆம் தேதி மதுரையில் நாம் தமிழர் என்கிற இயக்கம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்பட்டது. கட்சி தொடங்கி ஏழே மாதத்தில், இரண்டு மாத போராட்டத்தில் ஐந்து மாதம் சிறைப்படுத்தப்பட்டேன். சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தேர்தல் வந்துவிட்டது.
ஓராண்டுக்குள் என்ன சாதித்தாய் என்று எல்லோரும் கேட்கலாம். என் இனத்தின் எதிரிகளை கொன்றொழித்தோம். வீழ்த்தி காட்டினோம். அரசியல் களத்திலே எல்லோரும் தேர்தலை, தேர்தலாக பார்த்தார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி அதை யுத்த களமாக பார்த்தோம். யாருக்கு யாருக்குமான யுத்தம். என் இனத்தை கொன்ற காங்கிரஸ் கட்சிக்கும், இன உணர்வுள்ள தமிழர்களுக்கான யுத்தம்.
இந்த தேர்தலை பிரபாகரன் தம்பி சீமானுக்கும், காங்கிரஸ் தலைவி சோனியா மகன் ராகுல் காந்திக்கும் நடக்கும் சண்டையாகத்தான் நான் கருதினேன். என் தாய் ஈழம், தமிழ் ஈழம் மண்ணில் என் இனத்தை கொன்று ஒழிப்பதற்கு, சிங்கள இனவெறி அரசுக்கு இருகரமும் கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சி, என் இன்னொரு தாய் ஈழம், தமிழகத்திலே நிர்மூலமாக வீழ்த்தி காட்டுவேன் என்ற லட்சிய உறுதியோடுதான்.
என் அண்ணன் பிரபாகரனை பெற்ற வீரமாதா திருமதி பார்வதி அம்மாள் அவர்களுடைய புனித சாம்பல் எனக்கு வந்தது. என்னைப்போலவே அண்ணன் நெடுமாறன், அண்ணன் வைகோ அவர்களுக்கும் வந்தது. அவர்கள் இருவரும் கடல் நீரிலே கரைத்தார்கள். ஆனால் நான் பத்திரமாக இன்னும் என் அறையில் வைத்திருக்கிறேன். என்றைக்கு என் லட்சியத்தை தொடுகிறேனோ, அன்றுதான் என் தாயின் சாம்பலை நான் கரைப்பேன்.
என் தாயின் சாம்பல் மட்டுமல்ல. தமிழ் சொந்தங்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது அவர்களை உசுப்பிவிடுவதற்காக தீக்குச்சாக மாறி வெந்து செத்தானே என் தம்பி முத்துக்குமாரின் புனித சாம்பலும் என்னிடத்தில்தான் இருக்கிறது. அதையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். என் இனம் என்று விடுதலை அடைகிதோ, அன்றுதான் அந்த சாம்பலை நான் கரைப்பேன். அதுவரை ஒவ்வொரு போருக்கும், ஒவ்வொரு களத்திற்கும் நான் செல்லும்போது அந்த சாம்பல் மீது சத்தியம் செய்துதான், நானும் என் தம்பிகளும் களத்திலே இறங்குவோம் என்றார்.

18 மே 2011

அனைத்துலக நடவடிக்கைக்கான நேரம் வந்துள்ளது.

ஐ. நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கும், அதன் பரிந்துரைகளுக்கும் நியூசிலாந்து அரசு பூரண ஆதரவை வழங்கும் எனவும், சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்காது விட்டால் அனைத்துலக சமூகம் நடவடிக்கை எடுக்கும் எனவும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் முரே மக்கலி தெரிவிதிருந்தார் ஆனால் தற்போது அனைத்துலக சமூகத்தின் நடவடிக்கைக்கான நேரம் வந்துள்ளது என நியூசிலாந்தின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெயித் லொக்கே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் 28 ஆம் நாள் இடம்பெற்ற விவாதத்தின் போது ஐ.நா அறிக்கை தொடர்பில் நியூசிலாந்தின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் நியூசிலாந்தின் கிறீன் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் லொக்கே கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு பதில் கொடுக்கும்போதே ஐ. நாவின் நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கும், அதன் பரிந்துரைகளுக்கும் நியூசிலாந்து அரசு பூரண ஆதரவை வழங்கும் என மக்கலி தெரிவித்திருந்தார்.
எனினும் தற்போது ஐ.நா அறிக்கையை சிறீலங்கா அரசு நிராகரித்து வருவதால் அனைத்துலக சமூகம் நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கெய்த் தெரிவித்துள்ளார்.
ஐ.நா அறிக்கை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் தீர்மானத்தை கொண்டுவந்துள்ளபோதும், விசாரணைகளை சிறீலங்கா அரசிடமே அது விட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவத்தை நாம் கைவிட முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் துயர்தனை மறப்போமா நாங்கள்!

ஸ்ரீலங்காவின் பேரினவாத சிங்கள அரசான மகிந்த கும்பல் உலக அராஜக அரசுகளுடன் கூட்டிணைந்து தமிழின அழிப்பை மேற்கொண்ட,காட்டு மிராண்டித்தனமாக என்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட எம் சொந்தங்களை கொன்று வீசிய அந்த படு பாதகத்தின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.உணர்வுள்ள,தன்மானம்மிக்க தமிழரெல்லாம் கொதித்தெழுந்த நாளும் இந்நாளே!ஏன் உலகெங்கும் வாழும் மனிதாபிமானிகளும் கிளர்ந்தெழுந்த நாளும் இந்நாளே!இந்நாளை நாம் நினைவு கூர்வதுடன் அங்கே மரணித்துப்போன ஆயிரமாயிரம் உறவுகளுக்கும் எம் அக வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.மேலும் எமது தாயகத்தில் தன்னாட்சி பெற்ற இனமாக நாம் வாழ்வதற்கு உலக அரங்கில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பயன் படுத்தி ஒன்று பட்ட இனமாக ஜனநாயக பாதையிலே எம் வெற்றியை இட்டுச்செல்வோம்.அந்த வெற்றியை எம் வீரர்களுக்கும் மக்களுக்கும் காணிக்கையாக்குவோம்.சர்வாதிகாரம் மேலோங்கி நின்றாலும் இறுதியில் ஜனநாயகமே வெல்லும்.

17 மே 2011

ஐ.நா.முன்றலில் அணிதிரளத் தயாராகும் தமிழினம்.

எதிர்வரும் மே-18 புதன்கிழமை நியூ யோர்க் - ஜெனீவா ஐ.நா பீடங்களுக்கு முன்னால் அணிதிரள ஐரோப்பா - அமெரிக்கா வாழ் தமிழர்கள் தயாராகி வருகின்றனர். ஐ.நா நிபுணர் குழுவின் பரிந்துரைகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடலுக்கான ஏற்பாடுகள் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றுவருகின்றன.
கடந்த காலங்களில் ஐநாவுக்கு முன்னால் அணிதிரண்டதற்கும் இந்த ஒன்றுகூடலுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை வெளியில் நின்று எடுத்துரைத்தோம். ஆனால் இன்று நிபுணர் குழுவின் அறிக்கையே உண்மையின் சாட்சியமாக ஐநாவுக்குள்ளேயே உள்ள நிலையில் அதனை முன்நகர்த்த வேண்டிய பொறுப்பு எங்கள் கைகளிலும் உள்ளதென துணை அமைச்சர் சுதர்சன் சிவகுருநாதன் தெரிவித்தார்.
இந்த ஒன்றுகூடலில் பங்கெடுப்பதற்குரிய பேருந்து வசதிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
நியூயோர்க்கில் கலந்து கொள்வதற்கான பயண ஒழுங்குகளுக்கு : 416 291 7474 - 647 822 8062 - 514 400 6970 ஆகிய தொலைபேசி இலக்கங்களோடு கனடா வாழ் தமிழர்கள் தொடர்பு கொள்ளுமாறும் ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கீழ் வருகின்ற தொடர்பிலக்கங்களோடு தொடர்பு கொண்டு பயண விபரங்களை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
பிரான்ஸ் : 06 66 90 06 08 - 06 62 36 50 07
பிரித்தானியா : 0208 470 6655 - 0791 220 6171
சுவிஸ் : 076 541 63 26 - 078 850 90 22

ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் முகாம்களில் வாடுகின்றனர்.

யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த நூறாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இன்னமும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
2011 ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் 13ம் திகதி வரையிலான காலப்பகுதியில் 1139 குடும்பங்கள் மெனிக்பாம் மற்றும் கொடிகாமம் முகாம்களிலிருந்து வெளியேறியுள்ளன.
அநேகமானவர்கள் இடம்பெயர் முகாம்களை விட்டு வெளியேறியுள்ள போதிலும் சொந்த இடங்களில் இன்னமும் மீள் குடியேறவில்லை என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகார இணைப்புக் காரியாலயம் அறிவித்துள்ளது.
நிலக்கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்கள் மட்டுமே இடம்பெயர் முகாம்களில் தொடர்ந்தும் தங்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த பலர் தமது சொந்த வீடுகள் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலை தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

16 மே 2011

தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு கண்டனம்.

போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணைகள் தேவை என்ற ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரித்தும் கண்டித்தும் கொழும்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தால் நடத்தப்பட்ட தீர்மானத்திற்கு தமிழ்த்தரப்புகள் ஆதரவு வழங்கியுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இன்று இந்த அமைப்பினால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
வடபகுதியிலிருந்து சென்றிருந்த தமிழ்த்தரப்பு சட்டத்தரணிகள் இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள். மனித உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதும் மனித உரிமை மீறல்களுக்கெதிராக துணிந்து நின்று செயற்படுவதிலும் சட்டத்துறை சார்ந்தவர்களுக்கு பாரிய பொறுப்பு உள்ளது. ஆனால் அதனை மறந்து எமது சட்டத்தரணிகள் கொழும்பில் செயற்பட்டிருப்பது வேதனைக்கும் வெட்கத்திற்குரியதும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களது முள்ளிவாய்க்கால் படுகொலை சர்வதேச ரீதியாக நீதி வழங்க வேண்டும் என்று உலகெங்கும் குரல் ஒலித்துக் கொண்டிருக்கையில் சட்டத்தரணிகள் சார்ந்த எம்மவர்கள் செயற்படும் விதத்தையே எமது கட்சி கண்டிக்கின்றது என்றும் இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்க துணிவில்லாது விட்டாலும் அவற்றிலிருந்து ஒதுங்கி நிற்பதற்கு தமிழ் சட்டத்தரணிகள் பேரில் நிற்கும் பிரதிநிதிகள் முன்வரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த குற்றச்சாட்டை யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவி செல்வி சாந்தினி அபிமன்னசிங்கம் மறுதலித்திருக்கின்றார். அவ்வாறு தமது பிரதிநிதிகள் எவரும் அக்கூட்டத்திற்கு சென்றிருக்கவில்லை எனவும் தான் அறிந்த வரையில் தமிழ்த் தரப்பு சட்டத்தரணிகள் அங்கு பிரசன்னமாகியிருக்கவில்லை எனவும் வழமையாக இடம்பெறுகின்ற கூட்டம் ஒன்றிற்கென அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் யாராவது விசயம் தெரியாது போய் மாட்டுப்பட்டிருக்கலாமேயன்றி தமிழ் சட்டத்தரணிகள் அதற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

போர்க் குற்றம் தொடர்பில் சுவிஷும் கனடாவும் கலந்துரையாட உள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை குறித்து சுவிட்சர்லாந்தும், கனடாவும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளன. ஜெனீவாவில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இது நட்புரீதியற்றது என இலங்கை அரசு தனது எதிர்ப்பைத் வெளியிட்டுள்ளது. கொழும்பில் உள்ள கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி மற்றும் சுவிஸ் தூதுவர் தோமஸ் லிற்சர் ஆகியோரை அழைத்து வெளிவிவகார அமைச்சு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஒட்டாவா மற்றும் பேர்ன் பகுதிகளில் உள்ள இலங்கை தூதரகங்களும் இந்த கூட்டத்தை நிறுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஜெனீவாவில் நடைபெறும் கூட்டம் வழமையாக நடைபெறும் கூட்டம் எனவும், அதில் பல விடயங்கள் கலந்துரையாடப்படுவதாகவும் கனேடியத் தூதுவர் புறூஸ் லெவி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா.நிபுணர்குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிஸ் அரசும் தனது ஆதரவுகளை தெரிவித்துள்ளதாக இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அதிகாரி பிரான்ஸ் செனிட்டர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸிற்கும், இலங்கைக்கான சுவிற்சர்லாந்து தூதுவர் தோமஸ் லிற்செருக்கும் இடையில் உத்தியோகபூர்வமற்ற சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றிருந்தது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கைக்கு சுவிற்சர்லாந்தும் தனது ஆதரவை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா மூன்றாவது முறையாக முதல்வரானார்.

தமிழக முதல்வராக இன்று ஜெயலலிதா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டார். கவர்னர் பர்னாலா பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அப்போது ஜெயலலிதா ஏற்றுக்கொண்ட உறுதிமொழி:
பதவிப்பிரமாணம்:
‘’ஜெ. ஜெயலலிதா என்னும் நான் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பின் பால் உண்மையான நம்பிக்கையும், மாறாப்பற்றும் கொண்டிருப்பேன் என்றும், இந்திய நாட்டின் ஒப்பில்லாத முழு முதல் ஆட்சியையும், ஒருமையையும் நிலைநிறுத்துவேன் என்றும்,
தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சராக, உண்மையாகவும், உளச்சான்றின் படியும், என் கடமைகளை
நிறைவேற்றுவேன் என்றும், அரசியல் அமைப்பிற்கும், சட்டத்திற்கும் இணங்க, அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பை விலக்கி, பலதரப்பட்ட மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன் என்றும், ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.
ரகசிய காப்பு பிரமாணம்:
ஜெ.ஜெயலலிதா என்னும் நான் தமிழ்நாட்டு அரசின் முதலமைச்சர் என்ற முறையில் எனது கவனத்திற்கு உள்ளாவதும், தெரியவருவதுமான எந்த பொருளையும் முதலமைச்சரின் கடமைகளை நிறைவேற்ற தேவையான அளவுக்கு அன்றி, ஒருவரிடமோ, பலரிடமோ நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ அறிவிக்கவோ, வெளிப்படுத்தவோ மாட்டேன் என்று ஆண்டவன் மீது ஆணையிட்டு உறுதி மொழிகிறேன்.

15 மே 2011

எனது பிள்ளையை விடுவிப்பதாக கூறி கருணா குழுவினர் காசு வாங்கினர்.

திருகோணமலையில் 13.05.2011 அன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஒரு தாயின் சோகக்கதை:
கருணா குழவைச் சேர்ந்த நாதன், சுரங்க என்ற 2 பேர் எனது பிள்ளையை எடுத்து தரலாம் என காசு வாங்கினார்கள்.
2008 மார்ச் 19 ஆம் திகதி எனது மகனை கடத்திக்கொண்டு போய்விட்டார்கள். நாங்கள் எல்லா இடங்களும் அலை அலை என்று அலைந்து திரிஞ்சம். பொலிஸ், ஆமி, நேவி என்று எல்லா இடமும் போய் கேட்டும் எங்கட பிள்ளையை தாங்கள் பிடிக்கயில்லை எண்டு சொல்லியினம். ஆனால் எங்கட வீடுகளுக்கு வந்த சி.ஐ.டீமார் இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தருவம் எண்டு சொன்னாங்கள். கருனான்ட ரீமில உள்ளவர்கள் சொன்னார்கள் உங்கட பிள்ளையை நேவிதான் பிடித்தது. இவ்வளவு காசு தந்தால் பிள்ளையை எடுத்து தரலாம் எண்டு அதனால காசும் கொடுத்தோம். ஆனால் எங்களுக்கு எந்த விதமான பலனும் கிடைக்கயில்லை. நாதன், சுரங்க என்ற கருணா குழவைச் சேர்ந்த 2 பேர் என்னட்ட மட்டும் இல்ல எங்கட எல்லாருட்டயும் காசு தந்தால் பிள்ளைகளை விடுவிக்கலாம் என்று சொன்னதனால் பல லட்சம் ரூபாய் கொடுத்து விட்டோம். வாங்கியவர்களை அடையாளம் காட்டுகிறோம். தொலைபேசி இலக்கங்களை தருகிறோம் என்டு சொல்லியும் யாரும் நடவடிக்கை எடுக்ககிறதா தெரியவில்லை.


தமிழ் கைதிகள் மீது சிங்களக் குண்டர்கள் தாக்குதல்.

சிறீலங்கா அரசின் வாவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் மேற்கொண்ட உண்ணாநிலை போராட்டத்தின் மீது சிறீலங்கா அரசின் சிறைக்காவலர்கள் நடத்திய தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
வவுனியா சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை தொடர் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கி வந்த சிறீலங்கா அரசு, அண்மையில் நான்கு கைதிகளை அனுராதபுரம் சிறைக்கும் மாற்றியிருந்தது.
சிறீலங்கா அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வவுனியா சிறையில் உள்ள 200 இற்கு மேற்பட்ட கைதிகள் கடந்த வெள்ளிக்கிழமை (13) உண்ணநிலைப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் கைதிகளின் இந்த ஜனநாயகப் போராட்டத்தின் மீது சிறீலங்கா சிறை அதிகாரிகளும், சிங்களக் காடையர்களும் மேற்கொண்ட தாக்குதலில் பல தமிழ் கைதிகள் காயமடைந்துள்ளனர். இவ்வாறு காயமடைந்தவர்களில் அகிலன் (29) என்பவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

14 மே 2011

போர்க் குற்றவாளிகளுக்கு எதிராக பல நாடுகளில் வழக்கு.

அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிராக 30 நாடுகளில் வழக்குகளைத் தொடர்வதற்கு புலம்பெயர் தமிழர் அமைப்புகள் முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா. நிபுணர் குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையிலேயே அவர்கள் அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருக்கெதிரான வழக்குகளைத்தாக்கல் செய்யவுள்ளதாக அறிய முடிகின்றது.
தற்போதைக்கு மேற்கு ஐரோப்பா, கிழக்கு ஐரோப்பா மட்டுமன்றி ஆசியாக்கண்டத்தின் சில நாடுகளிலும் அவ்வாறான வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கான முயற்சிகள் பிரஸ்தாப அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
உலகின் மிகப் பெரும் செல்வந்தர்கள் சிலரும், நிதி நிறுவனங்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் அவர்களுக்கான ஆதரவை வழங்க முன்வந்துள்ள அதே வேளை, ஆரம்ப கட்டமாக இலங்கையின் முக்கியஸ்தர்களுக்கு எதிராக ஒரு சில நாடுகளில் தற்போதைக்கு வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.