02 ஆகஸ்ட் 2011

ஸ்ரீலங்கா நாடாளுமன்றக் குழுவுடன் இந்தியா சென்ற செல்வம் அடைக்கலநாதன்!

மஹிந்தராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற சபாநாயகருமான சமல் ராஜபக்ச தலைமையிலான இலங்கை நாடாளுமன்றக் குழு இந்தியாவிற்கான பயணத்தினை மேற்கொண்ட போது இந்திய நாடாளுமன்றில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்பினால் இலங்கை நாடாளுமன்றக் குழு திக்குமுக்காடிப்போனதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதேவேளை தாய்த் தமிழக மற்றும் ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையினைத் தோற்றுவிக்கும் சம்பவம் ஒன்றும் நிகழ்ந்தேறியிருக்கின்றது. இந்தியா சென்ற இலங்கை நாடாளுமன்றக் குழுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதனும் இடம்பெற்றிருந்தமை தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியினைத் தோற்றுவித்திருக்கின்றது.
இலங்கை நாடாளுமன்றக் குழுவிற்கு இந்திய நாடாளுமன்றம் வரவேற்பு வழங்கினால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களால் எதிர்ப்புத் தெரிவிக்கப்படும் என்று அ.தி.மு.கவினர் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில் இலங்கை நாடாளுமன்றக் குழு இந்தியா சென்றிருந்தது. இந்தக் குழுவில் செல்வம் அடைக்கலநாதன் இடம்பெற்றிருந்ததன் பின்னணி என்ன என்ற கேள்வி தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
ஈழத்தமிழ் மக்களுக்காக நம்பிக்கை தரும் வகையில் தமிழக மக்களும், தமிழக அரசும் குரல்கொடுக்க ஆரம்பித்திருக்கும் இந்நிலையில் செல்வம் அடைக்கலநாதனின் இலங்கை நாடாளுமன்றக் குழு ஊடான பயணம் வேதனையினைத் தோற்றுவித்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான உறவினை இந்திய மத்திய அரசும், இந்தியக் கொள்கைவகுப்பாளர்களும் தனிப்பட்ட ரீதியில் வைத்திருக்கின்ற சூழலில் செல்வம் அடைக்கலநாதனின் இந்தியப் பயணம் தேவைதானா? என்று எமது செய்தியாளரிடம் கேள்வி எழுப்பினார் தமிழக சட்டத்தரணி ஒருவர்.
“இலங்கை அரசு யுத்தத்தை வெற்றிகொண்ட மமதையில் இருக்கிறதே தவிர, தமிழ் மக்களின் மனங்களை வென்று அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிரந்தர அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அது தயாரில்லை” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த சனியன்று சென்னை பெரியார் திடலில் இடம்பெற்ற இந்திய மார்க்ஸிய கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கலந்து கொண்டு தெரிவித்திருந்தார். ஒரு மணி நேரம் இடம்பெற்ற உரை முழுமையிலும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களே தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த உரை இடம்பெற்று இரண்டு நாட்களில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதியாக கூட்டமைப்பின் மற்றொரு முக்கியஸ்தர் செல்வம் அடைக்கலநாதன் இந்தியா சென்றிருக்கின்றார்.
இந்திய நாடாளுமன்றில் போர்க்குற்றவாளிகளுக்கு வரவேற்பா? என்று தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டபோது அந்தக் கூச்சல் செல்வம் அடைக்கலநாதனுக்கும் எதிரானதாகவே அமைந்திருந்தது. ஈழத்தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு தம்மால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தமை தாய்த் தமிழக மக்களின் மனங்களில் வேதனையினைத் தோற்றுவித்திருந்ததாக அறியவருகின்றது.
உள்ளுராட்சி சபைத் தேர்தலின் வெற்றியினை அடுத்து தமிழகத்தில் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதாக தமிழகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந் நிலையில் கூட்டமைப்பின் இணைச் செயலர்களான செல்வம் அடைக்கலநாதனும், சுரேஷ் பிறேமச்சந்திரனும் வெவ்வேறு முகங்களை இந்தியாவில் வெளிப்படுத்தியிருப்பதற்கு உள்நோக்கம் உண்டா? அல்லது இதுவும் கூட்டமைப்பின் அரசியல் இராஜதந்திரமா? என்பது சாதரண பொதுமக்களுக்கு புரியவில்லை என்பதற்கும் அப்பால் எழுச்சி கொண்டிருக்கும் தமிழக மக்களுக்கும், அரசுக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை இதற்கான பதிலினை கூட்டமைப்பு வெளிப்படுத்தும் என்று நோக்கர்கள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக