வன்னியில் பாரிய சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கையில் இராணுவத்தினரும் பொலிஸாரும் ஈடுபட்டிருப்பதாக வன்னியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கு உட்பட்ட ஒட்டுசுட்டான், தட்டையர் மலை, வித்தியாபுரம், முத்துஐயன் கட்டு வலது கரை, இடது கரை, சாளம்பன் உட்பட்ட கிராமங்களைச் சுற்றிவளைத்த நூற்றுக்கணக்கான இராணுவத்தினர் மக்களின் வீடுகளின் கம்பி வேலிகளை அறுத்துக் கொண்டு வீடுகளுக்குள் நுழைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டில் உள்ளவர்களின் பெயர் விபரங்கள், ஆள் அடையாள அட்டைகளின் விபரங்களைப் பதிவு செய்திருப்பதுடன் வீடுகளுக்குள்ளும் துருவித் துருவித் தேடுதல் நடத்தி வருவதாக அங்கிருந்து எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒட்டுசுட்டானில் பொலிஸ் நிலையம் எதுவும் இல்லாத நிலையில் அங்கு பொலிஸார் வரவளைக்கப்பட்டிருக்கின்றமை மக்கள் மத்தியில் சந்தேகம் வலுப்பெற்றிருப்பதாகத் தெரியவருகின்றது. இதேவேளை வன்னியின் பல பாகங்களிலும் இவ்வாறான நடவடிக்கைகள் கடந்த இரவு முதல் இடம்பெற்று வருகின்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை குறித்த பகுதிகளில் நின்றிருந்த இராணுவத்தினர் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு புதிய இராணுவத்தினர் அந்தப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக