12 ஆகஸ்ட் 2011

அமெரிக்க போர் விமானங்களின் பிரவேசம் பொய்யர்கள் யார்?

இலங்கையின் வான் பரப்பில் அமெரிக்காவின் போர் விமானங்கள் அத்துமீறிப் பிரவேசித்தன என்ற செய்தியை இலங்கை விமானப் படை வட்டாரங்களே முதலில் கசியவிட்டு பரபரப்பாக்கிய போதிலும் இறுதியில் அரசாங்கம் அதனை மறுத்துள்ளதால் இதன் பின்னணி என்ன என்ற கேள்வி பல்வேறு மட்டங்களிலும் எழுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறான சம்பவம் எதுவும் இடம்பெறவில்லை என அமெரிக்கா மறுக்க, இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் இவ்விவகாரம் ஒரு அறிக்கைப் போரை உருவாக்கியிருந்தது. இருந்த போதிலும் இறுதியில் இலங்கை வான் பரப்பில் அமெரிக்க போர் விமானங்கள் எதுவும் பிரவேசிக்கவில்லை என சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதன் மூலம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு முயன்றாலும், ஜே.வி.பி. போன்ற எதிர்க்கட்சிகள் விட்டுவிடத் தயாராகவில்லை. இவ்வாறான சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை எனில் கடந்த வாரஇறுதி ஆங்கிலப் பத்திரிகையில் வெளியான செய்தியை விமானப்படைப் பேச்சாளர் கப்டன் அன்று விஜயசூரிய எதற்காக உறுதிப்படுத்தினார் எனவும், சிங்கள இனவாத அமைப்புக்கள் இதனை அடிப்படையாக வைத்து அமெரிககாவுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு எதற்காக தூண்டிவிடப்பட்டன எனவும் கேள்வி எழுப்பப்படுகின்றது.
அரசுக்கு நெருக்கமாகவுள்ள ஊடகத்துறை வட்டாரங்களிலிருந்து கசிந்துள்ள தகவல்களின்படி அலரி மாளிகையிலிருந்தே இது தொடர்பான தகவல் கசியவிடப்பட்டது. இலங்கையை அமெரிக்கா ஆக்கிரமிக்கத் தயாராகின்றது போன்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் இந்தச் செய்தி வெளியாகியிருந்தமையும் கவனிக்கத்தக்கது. குறிப்பிட்ட ஆங்கிலப் பத்திரிகையில் இந்த செய்தி வெளியாகியதையடுத்து கொழும்பிலுள்ள அரசியல் கட்சிகள் பலவும் அது தொடர்பில் தமது கண்டனங்களை வெளிப்படுத்தின.
ஆக்கிரமிப்பதற்கு முன்னோடியாக உளவு பார்ப்பதற்காகவே அமெரிக்க விமானங்கள் சென்றுள்ளன என சில கட்சிகளும், இது இலங்கைக்கு விடுக்கப்பட்டுள்ள இறுதி எச்சரிக்கை என வேறு சில கட்சிகளும் அறிக்கைகளை வெளியிடன. போதாக்குறைக்கு விமானப்படைப் பேச்சாளர் கப்டன் அன்று விஜயசூரியவும் அமெரிக்க போர் விமானங்கள் இலங்கையின் வான் பரப்புக்குள் அத்துமீறின என்ற செய்தியை உறுதிப்படுத்தினார். இவர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷவுக்கு மிகவும் நம்பிக்கையானவர்.
இதனால் கோதாபாயவின் அனுமதி இல்லாமல் அந்தத் தகவலை அவர் வெளியிட்டிருக்க மாட்டார். இருந்தபோதிலும், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இந்தச் செய்தியை திட்டவட்டமாக மறுதலித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இருந்தபோதிலும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சீன விஜயத்தை நோக்கமாகக் கொண்டுதான் இந்தத் தகவல்கள் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு பரபரப்பாக்கப்பட்டதாக சிரேஷ்ட அமைச்சர்கள் கருதுவதாக கொழும்பிலுள்ள ஊடகவட்டாரங்கள் தெரிவித்தன. அமெரிக்காவினால் இலங்கை பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளது என சீனாவுக்கு காட்டுவதுதான் இதன் நோக்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுகின்றது.
அமெரிக்க விமானங்கள் அத்துமீறி இலங்கையின் வான் பரப்புக்குள் பிரவேசித்திருந்தால், குறிப்பிட்ட அமெரிக்க விமான பைலட்டுடன் இலங்கைக் கட்டுப்பாட்டாளர்கள் மேற்கொண்ட உரையாடலின் ஒலிப்பதிவை வெளியிடுமாறு அமெரிக்கா கேட்டுக்கொண்டதையடுத்தே கொழும்பு அடிபணிந்ததாகத் தெரிகின்றது. நான்கு நாட்களாக இடம்பெற்ற சர்ச்சையை அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண இறுதியாக முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றார். இருந்தபோதிலும் உண்மை நிலை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி. இப்போது கோரிக்கை விடுத்திருப்பது அரச தரப்பை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக