நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கிறீஸ் மர்ம மனித அச்சுறுத்தல், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். கிறீஸ் மனிதன் என்ற மாயை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி, அதனூடாக சில அரசியல் கட்சிகளைத் தடை செய்யும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு
கடந்த காலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த வெள்ளை வான் அச்சுறுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்த தரப்பினரே தற்போது இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்துள்ளன.
சிக்கியவர்களில் பலர் இராணுவச் சிப்பாய்கள்!
கிறீஸ் மர்ம மனிதர்களாக நடமாடிய நபர்கள், பிரதேச மக்களின் கைகளில் சிக்கிய பின்னர் அவர்களில் ஏராளமானோர் இராணுவச் சிப்பாய்கள் எனத் தெரியவந்துள்ளது. அத்துடன், இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி விடுதலையாகியுள்ளனர்.
கிறீஸ் மர்ம மனித பதற்றத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து, இராணுவ நிர்வாகத்திற்குத் தேவையான புறச்சூழலை பாதுகாப்புச் செயலாளர் ஏற்படுத்தி வருகிறார்.கிறீஸ் மர்ம மனிதர்களிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் போர்வையில், கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபித்து சுமார் 5 ஆயிரம் இராணுவத்தினர் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தலா ஒரு விசேட அதிரடிப்படை முகாமை அமைப்பதற்கும் இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தின் ஊடாக பாதுகாப்புச் செயலாளர் திட்டமிட்டுள்ளார் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கிறீஸ் மனித மர்ம????
பதிலளிநீக்கு