22 ஆகஸ்ட் 2011

மர்ம மனிதர்களை சுற்றி வளைத்த மக்கள் மீது படைகள் தாக்குதல்!

மன்னார் பேசாலையில் மர்ம மனிதர்களைச் சுற்றிவளைத்ததற்காக அந்தக் கிராம மக்கள் மீது இராணுவத்தினரும் கடற்படையினரும் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒருவரைக் காணவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
கடந்த இரவு 8.30மணியளவில் பேசாலையில் உள்ள வீடு ஒன்றினுள் பெண்களை இலக்குவைத்து தாக்கும் நோக்கில் இரண்டு நபர்கள் புகுந்துள்ளனர். அவர்களை அவதானித்த வீட்டில் இருந்த பெண்கள் கூச்சலிட்டுக் கத்தியிருக்கின்றனர். சம்பவத்தை அடுத்து கிராம மக்கள் ஒன்று திரண்டவுடன் மர்ம மனிதர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி இராணுவ காவல் நிலை ஒன்றினுள் புகுந்து அங்கு சீருடை மாற்றியிருக்கின்றனர்.
இதனை அவதானித்த பேசாலைக் கிராம மக்கள் குறித்த காவல் நிலையினைச் சுற்றிவளைத்து கூச்சலிட்டிருக்கின்றனர். இதன் தொடராக அங்கு பெருமளவான கடற்படையினரும், இராணுவத்தினரும் வரவளைக்கப்பட்டடிருக்கின்றனர். அங்கு சென்ற இராணுவத்தினரும், கடற்படையினரும் மக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். அங்கு திரண்டிருந்த மக்கள் மீது மட்டுமல்லாமல் வீடுகளில் இருந்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது. இந்தச் சம்பவத்தினை அடுத்து மக்கள் பேசாலை தேவாலய மணியினை ஒலிக்கச் செய்திருக்கின்றனர்.
சம்பவத்தினைக் கேள்வியுற்ற மன்னார் மறைமாவட்ட ஆயரும் சம்பவ இடத்திற்குச் சென்றிருக்கின்றார். இராணுவத்தினரும், கடற்படையினரும் இணைந்து நடத்திய தாக்குதலால் மக்கள் அல்லோல கல்லோப்பட்டு தலை தெறிக்க ஓடியிருக்கின்றனர். சம்பவத்தில் படுகாயம் அடைந்த மக்களில் இருவர் பேசாலை மருத்துவமனையில் அனுமதிக்பட்டிருந்ததாகவும் பின்னர் அவர்களில் ஒருவரைக் காணவில்லை என்றும் அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதேவேளை பிந்திய தகவல்களின் படி காணாமல் போனவரை கடற்படையினர் தலைமன்னார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. பேசாலைப்பகுதியில் இன்னமும் இயல்புநிலை திரும்பவில்லை என்று மன்னாரில் இருந்து செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக