28 ஆகஸ்ட் 2011

நூறு நாள் சாதனையை கொண்டாடும் முதல்வர் மூவர் உயிரை காப்பாற்றினால் வாழ் நாள் சாதனையை பெறுவார்!

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தண்டனையை ரத்து செய்யக்கோரியும், சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் கயல்விழி, அங்கையற்கன்னி, வடிவாம்பாள் ஆகியோர் கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே இன்று 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.
அவர்களுடன் முத்துக்குமார் ஆவணப்படத்தின் உதவி இயக்குனர் மகேந்திர வர்மா மற்றும் அகிலா, தமிழரசி ஆகியோரும் இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். பேரறிவாளன், தாயார் அற்புதம் அம்மாளும் உண்ணாவிரத பந்தலில் அமர்ந்து இருந்தார். நடிகர் சத்யராஜ், டைரக்டர்கள் மணிவண்ணன், அமீர் ஆகியோர் இன்று காலையில் உண்ணாவிரதம் இருப்பவர்களை வாழ்த்தினர்.
டைரக்டர் அமீர் பேசியதாவது: 3 உயிர்களை காப்பாற்ற இங்கு 4 உயிர்கள் தங்களை மாய்த்துக்கொள்ள தயாராக உள்ளனர். ஆனால் தமிழக மக்கள் மட்டும் இன்னும் விழித்துக்கொள்ளாமலேயே உள்ளனர். 12 நாட்கள் உண்ணாவிரதத்துக்கு பின்னர் இன்று ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் அன்னா ஹசாரே வெற்றி பெற்று உள்ளார். ஊழலை விட சக்தி வாய்ந்தது உயிர். அதனை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு தற்போது நெருக்கடியான காலக்கட்டத்தில் உள்ளது.
அதில் இருந்து மீள்வதற்காக 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்து திசை திருப்பி உள்ளனர். கருணையே இல்லாத ஒரு ஜனாதிபதியிடம் கருணை மனு சென்றது வேதனை அளிக்கிறது. தமிழக முதல் அமைச்சரால் மட்டும்தான் 3 பேரின் உயிர்களையும் காப்பாற்ற முடியும் என்று தமிழகம் முழுவதும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எனவே அவர் 3 பேர் உயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும். 100 நாள் சாதனையை இன்று கொண்டாடிக்கொண்டு இருக்கிறீர்கள். 3 பேர் உயிரை காப்பாற்றினால் அது உங்கள் வாழ்நாள் சாதனையாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக