31 ஆகஸ்ட் 2011

செங்கொடியின் புகழுடலுக்கு இன்று இறுதி மரியாதை செலுத்தப்படுகிறது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்காக உயிர் நீத்த இளம் பெண் செங்கொடியின் உடல் தகனம் இன்று அவரது சொந்த கிராமமான மங்கல்பாடியில் நடைபெறுகிறது. அவருக்கு ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
காஞ்சிபுரத்தில்வசித்து வந்த இளம் பெண் செங்கொடி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை தூக்கில் போடக் கூடாது என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் தாசில்தார் அலுவலகம் முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது மரணம், அதுவும் தமிழகத்தில் முதல் முறையாக நடந்த ஒரு பெண்ணின் தீக்குளிப்புச் சம்பவம் தமிழக மக்களை உலுக்கி விட்டது. இந்த தீக்குளிப்பைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் அசாதாரணமான நிலை ஏற்பட்டது.
உயிர் நீத்த செங்கொடிக்கு ஆயிரக்கணக்கான மக்கள்அஞ்சலி செலுத்தினர். குறிப்பாக காஞ்சிபுரம் மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்களுக்காக பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்காக போராடி வந்த செங்கொடிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மக்கள் அஞ்சலிக்குப் பின்னர் செங்கொடியின் உடல் அவரது கிராமமான காஞ்சிபுரம் அருகே உள்ள மங்கல்பாடிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த பெருமளவில் மக்கள் திரண்டு வந்ததால், நேற்று நடப்பதாக இருந்த இறுதிச் சடங்குகள் இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டன. அதன்படி இன்று மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
செங்கொடியின் உடலுக்கு இன்று பல முக்கிய தலைவர்கள் அஞ்சலி செலுத்த வரவுள்ளனர். இன்று காலை முதலே அங்கு நூற்றுக்கணக்கில் மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ் ஆர்வலர்களும், பல்வேறு தரப்பினரும் குவிந்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக