14 ஆகஸ்ட் 2011

தடுப்பு முகாம்களில் தமிழ் பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகள்!

வன்னியில் இறுதி யுத்தக் காலப் பகுதியிலும் அதைத் தொடர்ந்தும் பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் மோசமானதோர் சூழலைத் தோற்றுவித்து வருவதாக எச்சரிக்கப்படுகின்றது.
இடைத்தங்கல் முகாம்களிலும், தடுப்பு முகாம்களிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் பெண்கள் வெளியேறியுள்ளனர். அவர்கள் இப்போது சொந்த இடங்களில் தமது குடும்பத்துடன் குடியமர்ந்தும் வருகின்றனர்.
தமக்கு நேர்ந்த கொடுமைகளை கெட்ட கனவாகவே மறந்து விட பெரும்பாலானவர்கள் முற்படுகின்றனர். ஆனால், புறச்சூழல்கள் அதனை அனுமதிக்கவில்லையென்கிறார் சுஹாசினி (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது) பெண்கள் உரிமைகள் நலன்கள் தொடர்பில் ஆர்வம் காட்டுபவராக அவர் உள்ளார். அவரது கணவரும் தடுப்பிலேயே உள்ளார்.
கொழும்பில் கைது செய்யப்பட்ட அவர் மீது ஆறு வருடங்கள் கடந்தும் இதுவரை அரசு வழக்கு எதனையும் தாக்கல் செய்திருக்க வில்லை. கிளிநொச்சியில் தனது பாடசாலைக்கு செல்லும் 16 வயதான மகளுடன் காலம் தள்ளும் சுகாசினி, மகளது எதிர்காலம் தொடர்பில் கவலை கொண்டுள்ளார்.
இவர் போன்றே தனது வயோதிப தாயாருடனேயே வீட்டிற்கு வெளியே வர விரும்பும் மற்றொருவர் சுமதி 27 வயதேயான இவருடைய கணவர் யுத்தத்தில் காணாமல் போயுள்ளார். அடையாளந் தெரியாத தடுப்பி லிருந்து அண்மையிலேயே விடுவிக்கப்பட் டுள்ளார்.
தடுப்பிலும் நடந்தவை பற்றி கதைப்பதற்கு கூட அவர் தயராகவில்லை. அவ்வளவிற்கு உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அவர் பாதிக்கப்பட்டுள்ளார். வெளியாரை எதிர்கொள்ள அவர் பின்னடிக்கின்றார். வீட்டினுள்ளேயே முடங்கி கிடப்பதாக அவரது வயோதிப தாயார் கவலை கொண்டுள்ளார். கழிந்து போன இருண்ட பக்கம் பற்றி தமது மகளிடம் கேட்பதற்கு தனக்கு மனத் துணிச்சல் இல்லையென்கின்றார் வெளிப்படையாகவே.
வன்னி யுத்த நடவடிக்கைகளில் காணாமல் போயுள்ள பெண்களது தொகை பற்றி, எந்தவொரு மாவட்ட செயலகத்திலும் சரியான புள்ளி விபரங்களில்லை. உள்ள விபரங்களைக் கூட பகிர்ந்து கொள்ள அதிகாரிகள் பின்னடிக்கிறார்கள். அவர்கள் தங்கள் வருத்தங்களுடன் கடமையிலிருப்பதாக கூறுகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், விடுவிக்கப்பட்டவர்கள் தொடர்பாக அரசு வெளியிடும் புள்ளி விபரங்களைத் தவிர, சுயாதீன தகவல்கள் ஏதும் இதுவரை இல்லை.
வன்னியில் யுத்தத்தின் பின்னரும் பெண்கள் மீதான நெருக்குவாரங்கள் குறைந்தபாடில்லை. பெரும்பாலானவர்கள் பெண்கள் மீதே குறை சொல்கின்றார்கள். அதிலும் கணவனை இழந்த அல்லது தடுப்பிலுள்ளவர்களது மனைவிமாரை இலக்கு வைத்தே குற்றச்சாட்டுகள் எழுப்பப் படுகின்றது என்கிறார் பரமேஸ்வரி. மூன்று பிள்ளைகளுடன் தனது வாழ்க்கையை தொட ரும் அவர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். கணவர் பற்றி தகவல்களில்லையென கூறும் அவர் தமது கணவர் படையினரிடம் சரண் அடைந்ததை நேரில் கண்டதாகவும் கூறுகின்றார்.
நான் அறிந்த வகையில் அண்மை நாட்களில் கிளிநொச்சியில் மட்டும் பன்னிரெண்டு குழந்தைகள் முறை தவறிப் பிறந்துள்ளன. அவற்றை பிரசவித்தவர்களுள் மூவர் காணாமல் போயுள்ள முன்னாள் போராளிகளது மனைவியர் என்கிறார் மூத்த ஊடகவியலாளரொருவர். ஆனால் நடக்கும் விடயங்கள் சமூகத்துக்கு அபாயமானவை. உண்மை கடண்டறியப்பட்டு பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்கிறார் அவர்.
எல்லாம் இயல்புக்கு திரும்பி விட்டன என அரசு கூறிக்கொள்ளும் யாழ்ப்பாணத்தில் மட்டும் மே மாதம் வரையான முதல் ஐந்து மாதங்களுள் 18 வயதிற்குட்பட்ட 75 பாடசாலை மாணவிகள் முறையற்ற விதத்தில் கர்ப்பம் தரித்திருப்பதாக பிராந்திய சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது. குறித்த வயதிற்கு மேற்பட்டவர்களது முறையற்ற கர்ப்பம் தொடர்பான புள்ளிவிபரங்கள் வெளியாகியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக