ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதன் மூலமோ தாக்குதல் நடத்துவதன் மூலமோ இராணுவத்தை வெளியேற்ற முடியாது. அதை மக்கள் சொல்ல முடியாது. தேசிய பாதுகாப்புச் சபையே அதனை முடிவு செய்யும் என யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார். நாவாந்துறையில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற இராணுவம் பொதுமக்கள் மோதல் சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்றுப் பிற்பகல் 2 மணிக்கு யாழ். சிவில் நிர்வாக அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் யாழ்.மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, மேஜர் ஜெனரல் வல்கம, வடபிராந்திய பிரதிக் காவற்துறைமா அதிபர் நீல் தளுவத்த, சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் நெவில் பத்மதேவா, யாழ். தலைமை காவற்துறை பரிசோதகர் சமன் சிகேரா ஆகியோர் கலந்துகொண்டனர்.
யுத்தம் முடிவடைந்த பின்னர் கடந்த இரண்டு வருடங் களாக யாழ்ப்பாணத்தில் சமாதான சூழ்நிலை நிலவி வருகின்றது. பொதுமக்களுக்கும் படையினருக்கும் இடையிலான உறவு பலமடைந்து வருகின்றது. மக்களுக்கான அனைத்து மனிதாபிமானப் பணிகளையும் படையினர் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர்.இதனைப்பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் சக்திகளே இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளன. இராணுவத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்காக நன்கு திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இது. இவ்வாறான சம்பவங்களை இனி ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
நாவாந்துறையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் பயங்கரவாதிகளே. அதை நான் திட்டவட்டமாகக் கூறுகிறேன்.கிறீஸ் மனிதன் யாழ்ப்பாணத்துக்கு வரவில்லை. அப்படியான ஒன்றை நான் இதுவரை கேள்விப்பட்டதில்லை. இவை எல்லாம் வெறும் வதந்தி. மக்களைக் குழப்புவதற்காக உருவாக்கப்படும் திட்டங்கள்.
மக்களை பாதுகாப்பதிலேயே இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 24 மணி நேரமும் மக்களுக்காய் பல தியாகங்களைச் செய்கின்றனர். இராணுவத்தினர் இவ்வாறு தேவையற்ற விதத்தில் தாக்கப்படுவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மக்கள் சட்டத்தைக் கையில் எடுத்துச் செயற்படுவதை அனுமதிக்க முடியாது.சட்டம் ஒழுங்கைப் பார்த்துக்கொள்வதற்குப் காவற்துறையினர் உள்ளனர்.
நாவாந்துறையில் இராணுவத்தினர் மீது போத்தல்கள், ரியூப் லைட் டுக்கள், கற்கள் என்பவற்றைப் பயன்படுத்திக் தாக்கதல் நடத் தப்பட்டுள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கும் போது இது ஒரு திட்டமிட்டதாக்குதலே. இந்தச் சம்பவத்தின் போது பொதுமக்கள் சிலர் காயமடைந்துள்ளனர். அது தவிர்க்க முடியாத ஒன்று. காவற்துறையினரின் வாகனங்கள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இராணுவத்தினர் தவறு செய்தால் அதற்குத் தண்டனை வழங்க நான் ஒருபோதும் தயங்க மாட்டேன். ஊடகங்களும் அதைச் சுட்டிக்காட்ட முடியும். அதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு. அவ்வாறான சம்வங்கள் இடம்பெற்றால் அது தொடர்பாக படை அதிகாரிகளுக்குஅல்லது பொலிஸ் அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்துங்கள் அது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தச் சம்பவங்கள் நன்கு திட்டமிடப்பட்ட ஓர் அரசியல் திட்டம். இதற்கு மக்கள் ஒரு போதும் துணை போகக் கூடாது என ஹத்துருசிங்க குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக