15 ஆகஸ்ட் 2011

இந்திய காங்கிரசின் சதிவலைக்குள் மீண்டும் தமிழினத்தை தள்ளப்போகிறதா கூட்டமைப்பு?

இந்தியத் தலைநகர் புதுடெல்கியில் நடைபெறவுள்ள ஈழத்தமிழர் பிரதிநிதிகளுக்கான கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல்களுக்கான ஏற்பாட்டினை இந்திய காங்கிரஸ் கட்சி மேற்கொண்டிருக்கின்றது. எதிர்வரும் 23,24,25ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வுகளுக்கான ஏற்பாட்டினை காங்கிரஸ் கட்சியின் முக்கியஸ்தரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுதர்சன நாச்சியப்பன் மேற்கொண்டிருக்கின்றார்.
இந்த ஏற்பாட்டின் பின்னணியின் முக்கிய நபராக இருப்பவர் ஈஎன்டிஎல்எப் முக்கியஸ்தரும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு முன்னின்று ஒத்துழைத்தவருமான பரந்தன் ராஜன் என்பவரே என்ற தகவல் வெளியாகியிருக்கின்றது.
80களில் தேசிய விடுதலைப் போராட்டத்தினை நோக்கி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முற்பட்ட போது அவர்களுக்கு இடையில் பிணக்குகளை ஏற்படுத்தி பல்வேறு குழுக்களாக்கி சகோதர யுத்தம் நடத்தி பெருமளவான தமிழ் இளம் உயிர்கள் பலியாவதற்கு பிரதான காரணியாக விளங்கியது இந்தியா.
தற்போதும் அவ்வாறான ஒரு முனைப்பில் இந்தியா செயற்பட்டு வருகின்றதோ? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கின்றது. அடுத்த வாரம் இந்தியாவில் நடைபெறவுள்ள ஈழத்தமிழ்ப் பிரதிநிதிகளுக்கான சந்திப்பிற்கான அழைப்பு வடக்கு கிழக்கில் உள்ள ஈபிடிபி தவிர்ந்த ஏனைய கட்சிகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கு தனித் தனியாக அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த அழைப்பினை ஏற்றுக் கொண்டு கூட்டமைப்பும் ஒவ்வொரு கட்சியில் இருந்தும் பிரதிநிதிகளை அனுப்புவதற்கு ஏற்பாடு செய்திருக்கின்றது.
தமிழரசுக்கட்சி சார்பில் மாவை சேனாதிராசா, சுமந்திரன் ஆகியோரும் ஈபிஆர்எல்எப் சுரேஷ் அணி சார்பில் சுரேஷ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும், ரெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், சிறீகாந்தா ஆகியோரும், ஈபிஆர்எல்எப் வரதர் அணி சார்பில் சிறீதரன், துரைரட்ணம் ஆகியோரும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி மற்றும் புளொட் தலைவர் சித்தார்த்தன் உட்பட்டோரும் தமிழ்க் காங்கிரஸ் சார்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட்டவர்களும் செல்லவிருப்பதாக நம்பரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர் தாயகத்தில் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற ஒரே கட்சியின் கீழ் போட்டியிட்டு தமிழ் மக்களும் அதனை அங்கீகரித்து தமது ஆதரவினை வாரி வளங்கி வருகின்ற நிலையில், இந்தியக் காங்கிரஸ் கூட்டமைப்பினுள் உள்ள கட்சிகளைப் பிரித்தாளும் நோக்குடன் தனித்தனியாக அழைப்பு விடுத்திருப்பதும் அதனை ஏற்றுக் கொண்டு கூட்டமைப்புத் தலைமைப் பீடம் ஒவ்வொரு கட்சிகளின் பிரதிநிதிகளை செல்லுமாறு அனுப்பிவைப்பதும் தமிழ் மக்கள் மத்தியில் மிகுந்த வேதனையையும், சந்தேகத்தினையும் தோற்றுவித்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பொதுவான கட்சியாகப் பதிவு செய்யவேண்டும் என்று புலத்திலும் தாயகத்திலும் தமிழ்த் தேசியத்தினை உண்மையாக நேசிக்கின்ற ஒவ்வொருவரும் வலியுறுத்திவருகின்ற சூழலில் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதிநிதிகளை அனுப்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது பலத்தினை இந்தியாவிற்கும் இந்தியக் காங்கிரசுக்கும் வெளிப்படுத்தியிருக்க வேண்டும்.
இவ்வாறான செயற்பாட்டின் மூலம் நாங்கள் ஒற்றுமையாக இல்லை, நாங்கள் வெவ்வேறு கட்சிகளாகத் தான் இருக்கின்றோம். எந்த வேளையிலும் பிரிந்து கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என்ற செய்தியினை கூட்டமைப்பின் தலைமைப்பீடம் இந்தியாவிற்குச் சொல்லப் போகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது என்றார் கொழும்பின் பிரபல தமிழ்ச் சட்டத்தரணி ஒருவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக