13 ஆகஸ்ட் 2011

கிறிஸ்பூதம் பின்னணியில் மகிந்த அரசா என சந்தேகம்.

நாட்டின் பல பகுதிகளிலும் மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்தியுள்ள கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரிக்கும் நிலையில் இது அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் இராணுவத்தினரினதும் பொலிஸாரினதும் ஒத்துழைப்புடன் செயற்படுத்தப்படுகின்றதா என்றே சந்தேகம் மேலும் வலுவடைந்துள்ளது.
மலையகத்தில் ஆரம்பித்து தற்போது கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் கிறீஸ் மனிதன் என்று கூறப்படுவோரின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.
இத்தனைக்கும் அரசாங்கம் ஆக்க பூர்வமான செயற்பாடுகள் எதனையும் செய்யாத நிலையில் அதற்கான எந்த பதிலும் தெரிவிக்கவுமில்லை இந்நிலையில் இப்பிரச்சனை நாளுக்கு நாள் பூதாகரமாகவே உருவெடுத்து வருகிறது.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு மாவட்டம் ஓட்ட மாவடியில் இவ்வாறானதொரு சம்பவம் இடம் பெற்றதாக பொதுமக்கள் தெரிவித்தும் சந்தேக நபர் பிடிக்கப்பட்டும் பொலிஸாரின் செயற்பாட்டில் திருப்தி இல்லாததால் மக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
அத்துடன் சம்மாந்துறை பகுதியில் கிறீஸ் மனிதன் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை மக்கள் விரட்டிய போது அவர் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்திற்குள் ஓடியதாகவும் உடனே பொலிஸ் நிலைய மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும் இதனால் ஆத்திரமடைந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.
இதே வேளை திருகோணமலைப் இறக்கக்கண்டி பகுதியில் மது போதையுடன் வானில் வந்தவர்கள் இருளில் வானை நிறுத்திவிட்டு நின்றபோது அப்பிரதேசவாசிகள் அவர்களை விசாரித்துள்ளனர்.
அப்போது அவர்கள் பிஸ்டல் மற்றும் கத்தியை காட்டியதினால் ஆத்திரமடைந்த பிரதேசவாசிகள் அவர்களை மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளை வானில் நிலாவெளி. அடம்பொடவெட்டை. இக்பால்நகர் போன்ற பகுதிகளில் இரண்டு இரண்டு பேராக இறக்கிவிட்டு சென்றதை அவதானிக்க முடிந்ததாகவும் பிரதேசவாசியொருவர் தெரிவித்துள்ளார்.
மர்மமனிதர்கள் தொடர்பாக நேற்று வெள்ளிக்கிழமை பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கிடையிலான கைகலப்பையடுத்து பொலிஸார் பொதுமக்கள் மீது நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஓருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொத்துவில் ஊறணி பிரதேசத்தில் மூன்று மர்ம மனிதர்களை நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பொதுமக்கள் துரத்திச்சென்று பிடித்தனர் இதனை கேள்வியுற்ற 6 பொதுமக்கள் பார்ப்பதற்கு பொத்துவிலில் இருந்து ஊறணிப் பிரதேசத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை இராணுவத்தினர் ஊறணி பாலத்திற்கு அருகில் வைத்து தாக்கி கைதுசெய்து பின்னர் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இவர்களை விடுதலை செய்யுமாறும் மர்மமனிர்கள் தொடர்பாக பொலிசார் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றயையைக் கண்டித்தும் பொதுமக்கள் நேற்று காலையில் வீதிகளில் தடைகள் ஏற்படுத்தி ரயர்கள் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது ஆர்ப்பாட்டக்காரர் மீது பொலிசார் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் அலியார் முகமது மஹஐன் என்பர் உயரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருக்கோவில் விநாயகபுரம் பிரதேசத்தில் மறைந்திருந்த மூன்று மர்ம மனிதர்களை நேற்று மாலை 3 மணியளவில் பொதுமக்கள் மடக்கிபிடித்தனர்.
அவர்கள் கொச்சத் தமிழில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களை பொலிஸார் பொதுமக்களிடமிருந்து மீட்டுச் சென்றுள்ளனர். இதனையடுத்து பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பையடுத்து பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை கல்லுகளால் தாக்கி முற்றுகையிட முற்பட்டபோது பொலிஸார் பொதுமக்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதையடுத்து 28 வயதுடைய ஜங்கரன் உட்பட இருவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து பிரதேசத்தில் பதற்ற நிலமை ஏற்பட்டதுடன் வீதிகளில் தடைகளை ஏற்படுத்தி ரயர்கள் எரிக்கப்பட்டன. மீண்டும் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தின் முன்னால் துப்பாக்கி பிரயோகம் செய்த பொலிஸாரை தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் பொலிஸ் நிலையம் மீது தாக்கதல் நடத்தினர்.
இதனையடுத்து பொலிஸார் ஆகாயத்தை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டகாரரை கட்டுப்பாட்டில் கொண்டுவர முடியாமல் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர்.
இராணுவத்தினர் வீதிகளில் நின்றவர்களை பொல்லுகளால் தாக்கி துப்பாக்கி பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டகாரரை கலைத்ததுடன் வீதிகளில் எரிந்து கொண்டிருந்த ரயர்கள் மீது பொதுமக்களின் துவிச்சக்கர வண்டிகள் போடப்பட்டு எரிக்கப்பட்டதுடன் பல மோட்டார் சைக்கிள்களை அடித்து சேதப்படுத்தி வீதிகளில் வீசினர்.
கிறீஸ் பூதங்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் இவ்வாரம் குறைந்தது மூன்று பேர் மரணமடைந்துள்ளனர்.
பெண்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். ஆண்கள் ஆயுதங்களுடன் காவல் காக்கின்றனர். இப்பூதங்கள் குறித்து ஏராளமான முறைப்பாடுகள் பொலிஸாருக்கு மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன. ஆனால் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை.
கிறீஸ் பூதங்களின் நடவடிக்கைகளுக்கு பொலிஸார் உதவி, ஒத்தாசைகள் வழங்குகின்றனர் என்கிற சந்தேகத்தில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களை முற்றுகையிடும் சம்பவங்களும் தொடர்கிறது .
இவ்வாறான சம்பவங்கள் மேலும் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.
01. நாட்டில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தி அவசரகால சட்டங்களை நீடிப்பதற்காகவா?
02. இதனை காரணம் காட்டி மூடப்பட்ட இராணுவ முகாம்களை மீண்டும் திறக்கவா?
03. மக்களை குழப்பதிலாழ்த்தி மக்களின் மனநிலையை திசை திருப்புவதுடன் வெளி நாடுகளையும் தற்போதைய இலங்கை தொடர்பான நிலைப்பாட்டில் இருந்து திசை திருப்பவா?
04. மந்திரம் தந்திரங்களில் அதிக நாட்டமுள்ள இந்த அரசாங்கம் அவர்களின் நலனுக்காக ஏதும் புதையல் எடுக்கவா என இச் செயற்பாடுகள் சிந்திக்க வைத்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக