03 ஆகஸ்ட் 2011

சண்டே லீடர் ஆசிரியரை தொலைபேசியூடாக மிரட்டினாராம் மகிந்த ராஜபக்ஸ.

சண்டே லீடர் பத்திரிகையின் பணிப்பாளர் லால் விக்ரமதுங்கவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு எச்சரித்தமையை பிரான்ஸைத் தளமாகக் கொண்டியங்கும் எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வன்மையாகக் கண்டித்துள்ளது.
ஜனாதிபதிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான அவரது மகன் நாமல் ராஜபக்சவிற்கும் அவர்கள் விருப்பப்படி பயன்படுத்தும் விதத்தில் சீனா பணம் வழங்குகிறது என சண்டே லீடர் பத்திரிகை கட்டுரை ஒன்றை வெளியிட்டதாலேயே அதன் பணிப்பாளர் லால் விக்ரமதுங்கவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு அச்சுறுத்தியுள்ளதாகத் தெரிய வருகிறது.
ஜனாதிபதி நேரடியாகவே தொலைபேசியின் ஊடாகத் தொடர்பு ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியமையை அறிந்து நாங்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தோம் என்று எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்புத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் ஒரேயோரு சுயாதீனமான ஆங்கிலப் பத்திரிகையான சண்டே லீடர் இவ்வாறு அச்சுறுத்தலுக்குள்ளாவது ஏற்றுக் கொள்ள முடியாதது. குறித்த கட்டுரை குறித்து ஜனாதிபதிக்கு உடன்பட முடியாமல் போகுமிடத்து அது குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்து அவர் பதிலனுப்பியிருக்க முடியும். ஜனநாயகத்தில் அவ்வாறு தான் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடுவது.
ஜனாதிபதியின் இந்தப் பொறுப்பற்ற நடவடிக்கையை நாம் கண்டிக்கிறோம். நாட்டின் ஜனாதிபதி முன்னுதாரணமாகத் திகழ வேண்டிய ஒருவர். ஆனால் மகிந்த ராஜபக்ச தவறான ஒரு முன்னுதாரணத்தைக் கட்டியமைக்கிறார். அவடைய இந்நடவடிக்கை எமக்குப் பல விடயங்களைப் புலப்படுத்துகிறது. ஊடக சுதந்திரம் குறித்து அவர் என்ன கருதுகிறார் என்பது குறித்து இது புலப்படுத்துகிறது. அவர் தனது இந்த நடவடிக்கையை மாற்றியமைக்க வேண்டும் என்று வேண்டுகிறோம்.
ராஜபக்ச குடும்பத்தினரால் செய்தி ஊடகங்கள் அச்சுறுத்தலுக்குள்ளாவது இது தான் முதற் தடவை என்றில்லை. ஊடகங்கள் மீதான இவ்வாறான எச்சரிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் உடனடியாக நிறுத்தும்படி நாங்கள் ஜனாதிபதியைக் கேட்டுக் கொள்கிறோம். ஊடக தொழிற்துறை மீதான இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக இலங்கையிலுள்ள ஊடகங்கள் ஒன்றுபட்டுக் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும் எனவும் நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.
ஜுலை 19 அன்று ஜனாதிபதி லால் விக்ரமதுங்கவுக்கு தொலைபேசி எடுத்த போது நீ பொய் எழுதுகிறார். எழுதுவது முழுவதும் பொய். என்னை அரசியல் ரீதியாகத் தாக்கலாம். ஆனால் என்னைத் தனிப்படத் தாக்குவாயானால் எனக்கும் தெரியும் என்னை எப்படித் தனிப்படத் தாக்குவது என்று. 'பொய் எழுதாதே' 'கடவுள் உன்னைத் தண்டிப்பார்' என எச்சரித்ததுடன் மேற்படி வாசகங்களடங்கிய நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள் சண்டே லீடரின் அலுவலகச் சுவரில் ஒட்டப்பட்டுள்ளன.
சீனா ஜனாதிபதிக்கு 9 மில்லியன் டொலர்களும் அவரது மகன் நாமல் ராஜபக்சவிற்கு அரை மில்லியன் டொலர்களையும் அவர்கள் விருப்பப்படி செலவிடும் வகையில் பணஉதவி அளித்திருக்கிறது என்று சண்டே லீடரின் ஆசிரியர் பெரட்றிக்கா ஜான்ஸ் கட்டுரை ஒன்றை எழுதி இரு நாட்களிலேயே ஜனாதிபதி சண்டே லீடர் பணிப்பாளருக்கு தொலைபேசி எடுத்து அச்சுறுத்தி இருக்கிறார். சீனா வழங்கிய இப்பணவுதவி தொடர்பாக விபரம் அறிய சண்டே லீடர் ஜனாதிபதியைத் தொடர்பு கொள்ள முயன்ற போதும் அது வெற்றியளிக்கவில்லை என்று சண்டே லீடர் குறிப்பிட்டிருந்தது.
சண்டே லீடர் நீண்டகாலமாகவே அரசாங்கத்தால் இலக்கு வைக்கப்பட்டு வருகிறது. முன்னர் அதன் ஆசிரியராக இருந்த லசந்த விக்ரமதுங்க ஜனவரி 8, 2009இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அப்படுகொலை குறித்த விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுக்கப்படவில்லை. குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இவை குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு வலியுறுத்திக் கூற விரும்பகிறது.
லசந்த விக்ரமதுங்கவின் படுகொலைக்குப் பின்னர் லால் விக்ரமதுங்கவே சண்டே லீடர் பத்திரிகைக்குப் பொறுப்பாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக