24 ஆகஸ்ட் 2011

வடக்கு,கிழக்கு பகுதிகளில் தமிழ் மக்கள் தமது இரவுப்பொழுதை நித்திரையின்றி கழிக்கின்றனர்!

கிறீஸ் மர்ம மனிதனால் ஏற்பட்ட பீதியைத் தொடர்ந்து யாழ். நாவாந்துறையில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் வீடுகளுக்குள் இரவிரவாக நுழைந்த இராணுவத்தினர் அம்மக்களை கும்பிடக்கும்பிட பாரபட்சமின்றித் தாக்கினர். அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களில் 18பேர் உள் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்டனர். ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுகிறார். ஆனால் தமிழ் மக்கள் நித்திரையின்றி பயத்தில் அல்லல்படுகின்றனர். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் நேற்றுத் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற துறைமுக, விமானநிலைய அபிவிருத்தி அறவீட்டுச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் தங்களது இரவுப் பொழுதை நித்திரையின்றி பயத்தோடு கழித்து வருகின்றனர். நேற்று(நேற்றுமுன்தினம்) யாழ். நாவாந்துறைப் பகுதியில் கிறீஸ் மர்ம மனிதன் பீதி ஏற்பட்டதை அடுத்து 117 பேர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இன்று அவர்களில் பலர் யாழ்.வைத்தியசாலையில் காயங்களுடன் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ் மக்கள் இன்று தங்களது உடைமை, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள முடியாதவாறு பீதியிலும், பயத்திலும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் தென்னிலங்கையில் ஜனாதிபதி சுதந்திரமாக நடமாடுகின்றார். மலையகப் பகுதிகளில் ஆரம்பித்த கிறீஸ் மர்ம மனிதர்களின் அடாவடித்தனங்கள் படிப்படியாக மட்டக்களப்பு பகுதிகளுக்குப் பரவி நேற்று யாழ்.குடாநாடு மற்றும் கிளிநொச்சிப் பகுதிகளுக்கும் பரவியுள்ளது.
யாழில் நேற்றிரவு (நேற்றுமுன்தினம்) பலரின் வீடுகளுக்குள் கிறீஸ் மர்ம மனிதர்கள் புகுந்து பல்வேறு அடாவடித்தனங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மர்ம மனிதர்களைத் துரத்திப் பிடிக்க முயன்ற பொதுமக்களை இராணுவம் கைது செய்துள்ளது. அத்துடன், கிறீஸ் மர்ம மனிதர்களை இராணுவம் காப்பாற்றியது.
இந்தச் சம்பவத்தை அடுத்து பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழைந்த இராணுவத்தினர் 117 பேரைக் கைதுசெய்துள்ளனர். தங்களைத் தாக்கவேண்டாம் எனப் பொதுமக்கள் கும்பிட்டுக் கேட்டும் இராணுவம் அவர்களைத் தாக்கியது. கணவருக்கு முன்பாக மனைவியை பாரபட்சமின்றித் தாக்கியது. பெண்களுக்கு முன்பாக ஆண்களையும் இராணுவத்தினர் தாக்கினர்.
இதேவேளை, பொலிகண்டி, நாவாந்துறை, கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் கிறீஸ் மனிதர்கள் மக்களைத் துன்புறுத்தியுள்ளனர். கிளிநொச்சியில் பாரதிபுரத்தில் மர்ம மனிதர்கள் எவ்வித ஆடையுமின்றி மக்களின் வீடுகளுக்குள் புகுந்து பீதியை ஏற்படுத்தியுள்ளனர். அதேபோன்றே யாழ்ப்பாணம் நாவாந்துறையிலும் இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து, வீடு வீடாகச் சென்று அங்குள்ள ஆண், பெண் எனப் பலரை இராணுவத்தினர் தாக்கினர். பெண் ஒருவர் உட்பட 18 பேர் உள்காயங்களுடன் இன்று (நேற்று) யாழ். வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். நான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், அந்த மக்களுடன் வாழ்பவன் என்ற வகையிலும் அங்கு அந்த மக்கள் படும் பாடுகள் எனக்கு நன்றாகத் தெரியும். அத்துடன், இந்த கிறீஸ் மனிதர்களின் அடாவடித்தனங்களில் இராணுவத்தினருக்கும் தொடர்புண்டு என்பதை நிரூபிக்க மக்களிடம் பல ஆதாரங்கள் உள்ளன.
எனினும், உடல் முழுவதும் கிறீஸ் பூசிக்கொண்டு அடையாளம் தெரியாத வகையில் தாக்குதல் நடத்துவதிலும், பீதியை ஏற்படுத்துவதிலும் இந்த மர்ம மனிதர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், அவர்களை அடையாளம் காண முடியாதுள்ளது. அவர்களின் பெயர், விவரங்களைப் பெறவும் முடியாதிருக்கின்றது.
இதுவரை மட்டக்களப்புப் பகுதிகளில் மர்ம மனிதர்களால் மேற்கொள்ளப்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பாக அரசு எதுவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. கிறீஸ் மனிதர்களின் அடாவடி நடவடிக்கைகளுக்குப் பின்னால் இராணுவத்தினர் உள்ளனர் என்பதை மக்கள் நன்கு அறிவர். அதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடியும்.
மர்ம மனிதனால் பீதி ஏற்பட்ட பகுதிகளில் மக்களை ஆறுதல்படுத்தி, அந்த மர்ம மனிதர்களைப் பொலிஸார் கைது செய்திருக்கவேண்டும். அதைச் செய்யாமல், மர்ம மனிதர்களைப் பிடிக்கச் சென்றவர்களை இராணுவம் கைது செய்கிறது.
நாம் இனவாதம் பேசுபவர்கள் அல்லர். மக்கள் அனுபவிக்கும், மக்கள் படும் துன்பங்கள், துயரங்களுக்கு நியாயமே கேட்கின்றோம். சிங்களவர்கள் எவ்வாறு உரிமைகளுடன் வாழ்கின்றார்களோ அதே போன்றே தமிழர்களும் அனைத்து உரிமைகளுடனும் வாழவேண்டும். தமிழர்கள் வாழும் பகுதிகளிலேயே இந்த மர்ம மனிதர்களின் அடாவடிகள் இடம்பெறுகின்றன. சிங்கள மக்கள் வாழும் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறாமை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இனப் பிரச்சினைக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. இந்த நிலையில் இனப்பிரச்சினையை விட தற்போது ஏற்பட்டுள்ள இந்த மனிதர்களின் பிரச்சினைகளே அடிப்படைப் பிரச்சினை என்பதை வெளிப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, நிலைமைகளைப் புரிந்துகொண்டு அரசு இதற்குத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக