முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட அறிவு என்கிற பேரறிவாளன், சிறீஹரன் என்கிற முருகன், சாந்தன் ஆகிய மூன்று பேரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரதிபா தேவி சிங் பாட்டீல் நிராகரித்து விட்டார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும், ஏமாற்றத்தையும் அளிக்கிறது.
இவர்கள் மூவருக்கும் இந்திய உச்ச நீதிமன்றம் 1999ஆம் ஆண்டில் மரண தண்டனையை உறுதி செய்தது. அதன் பிறகு 2000வது ஆண்டில் இவர்கள் மூவரும் குடியரசுத் தலைவருக்கு தங்கள் மீது கருணை காட்டி, மரண தண்டனையை குறைக்குமாறு கேட்டு கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர். அந்தக் கருணை மனுக்களின் மீது 11 ஆண்டுகளுக்குப் பிறகு – மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் படி - முடிவெடுத்துள்ள குடியரசுத் தலைவர், கருணை மனுக்களை நிராகரித்துள்ளார். இது எதிர்பாராத, வேதனை தரும் முடிவாகும்.
தங்கள் வாழ்வின் முடிவை நிர்ணயிக்கப்போகும் மரண தண்டனையை எதிர்பார்த்து 12 ஆண்டுகளாக வேலூர் சிறையில் வாடும் இந்த மூன்று பேரும் அப்படிப்பட்ட கொடுமையைத்தானே அனுபவித்து வந்தனர்? வேதனையான அந்த சிறைக்காலத்திற்குப் பிறகு அவர்களின் தண்டனையை குறைத்து நிவாரணம் அளித்திருந்தால் அது மனிதாபிமானமாக இருந்திருக்கும். மாறாக, மரண தண்டனையை உறுதி செய்வது தண்டனை இரட்டிப்பாக்காதா? என்று கேட்கிறோம்.
தனது ஒரே மகனின் மரண தண்டனை குறைக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்த பேரறிவாளனின் தாயார் இன்றைக்கு நொருங்கிப் போயுள்ளார். ஒரு நாள் தனது தந்தை விடுதலைப் பெறுவார் என்று எதிர்பார்த்த நளினியின் மகளுக்கு 12 ஆண்டுகளுக்குப் பிறகு துயரமான அதிர்ச்சி.
இன்றைய உலகம் மரண தண்டனையை, சட்டத்தின் பார்ப்பட்ட நீதியாகக் கருதவில்லை. அதனால்தான் 137 நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட்டுவிட்டது. கொலை செய்தவனுக்கு தண்டனையாக நீதமன்றம் அளிக்கும் மரண தண்டனையும் கொலைதான் என்று இன்றைய உலகம் கருதுகிறது. தண்டனையின் நோக்கம், குற்றம் செய்த மனிதனை மாற்றுவதே, மாய்ப்பது அல்ல என்று உலகம் கூறுகிறது. ஆனால், இந்திய அரசு மரண தண்டனைக்கு எதிரான ஐ.நா.வின் அந்த பிரகடனத்தில் இதுவரை கையெழுத்திடவில்லை. அதன் விளைவே, வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனை மனிதாபிமானமற்று இந்தியாவில் இன்றும் வாழ்ந்து வருகிறது.
மானுடத்தின் போக்கிற்கும், மனிதாபிமானத்திற்கும் எதிரான மரண தண்டனைக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு முன்வராத நிலையில், மானுடம் வெறுக்கும் மரண தண்டனைக்கு முற்றுப் புள்ளி வைக்க மனிதாபிமானத்தோடு ஒரு தீர்மானத்தை தமிழக சட்டப் பேரவையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் நிறைவேற்ற வேண்டும். அதன் மூலம் வாழ்வுரிமையை பறிக்கும் மரண தண்டனைக்கு முதலில் முற்றுப் புள்ளி வைத்த மாநிலமாக தமிழ்நாடு திகழ வேண்டும். அப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அது இந்தியாவின் மற்ற மாநிலங்களுக்கும் ஒரு முன்மாதிரியாகும், அதனைச் செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக்கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக