17 ஆகஸ்ட் 2011

முதலில் இந்தியப்படைகளை விசாரிக்கட்டும் என்கிறார் விமல் வீரவன்ச!

இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்ட இந்தியப் படையினர் இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டுமென அண்மையில் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஸ்ணா வெளியிட்ட கருத்து தொடர்பிலே விமல் வீரவன்ச விமர்சனம் செய்துள்ளார்.
நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்வதற்கான முன்னெடுப்புக்களில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஈடுபட்டுக் கொண்டிருக்கையில், அதனை இல்லாமல் செய்வதற்கு புலி ஆதரவாளர்கள் முயற்சித்து வருகின்றனர். இந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு ஒரு நாடு என்ற ரீதியில் ஒன்றுபட வேண்டும். வேறெப்போதும் இல்லாதவாறு இலங்கை குறித்து இந்தியாவில் பேசப்படுகின்றது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டசபையில் இலங்கைக்கு எதிராக ஒவ்வொரு தீர்மானங்களை கொண்டுவர ஆயத்தமாகிறார். யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட போது இந்தியாவில் இலங்கை குறித்து விவாதிக்கப்படவில்லை. இலங்கைக்கு எதிராக மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறெனில், 1987 ஆம் ஆண்டில் இந்திய படையினர் இலங்கையில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டபோது நடைபெற்ற சம்பவங்கள் முதலில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என விமல் வீரவன்ச தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன காலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் முதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் மட்டும் விசாரணை நடத்தப்படக் கூடாது எனவும் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
ஜே.ஆர். ஜயவர்தனவின் பின்னர் நாட்டை ஆட்சி செய்த அனைத்து தலைவர்கயும் யுத்தம் செய்த போதிலும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மிகவும் சொற்ப அளவிலான மனித உரிமை மீறல் சம்பவங்களே இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக