பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் புதிய சட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையில் இந்த புதிய சட்டம் அமையும் என குறிப்பிடப்படுகிறது.
அவசரகாலச்சட்ட விளைவு ஒழுங்குகள் என்ற பெயரில் புதிய சட்ட மூலமொன்று விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2005ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டத்தை முற்று முழுதாக நீக்கும் யோயாசனையை அண்மையில் ஜனாதிபதி பாராளுமன்றில் முன்வைத்தார்.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல பயங்கரவாத சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு சட்ட மூலமொன்று அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகவும் குறிபிடப்படுகிறது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட காரணத்தினால் பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு சலுகை வழங்க முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாத சந்தேக நபர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரணை செய்வதற்காக புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அவசியம் எழுந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட உள்ள புதிய உத்தேச சட்ட மூல வரைவுத் திட்டத்தை சட்ட மா அதிபர் திணைக்களம் உருவாக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக